Katteri OTT Release : நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியான "காட்டேரி" திரைப்படம் - பேய் படம் என்ற பெயரில் சொதப்பல் 


"யாமிருக்க பயமேன்" திரைப்படத்தை இயக்கிய டிகே "காட்டேரி" எனும் காமெடி- திரில்லர் கலந்த ஒரு திகில் படத்தை உருவாக்கியுள்ளார். இப்படத்தில் வைபவ், ஆத்மிகா, சோனம் பஜ்வா, வரலக்ஷ்மி சரத்குமார், கருணாகரன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஸ்டூடியோ கிரீன் நிறுவனத்தின் கீழ் ஞானவேல் ராஜா தயாரித்துள்ள இப்படத்திற்கு இசையமைத்துள்ளார் எஸ்.என். பிரசாத் மற்றும் ஒளிப்பதிவு பணிகளை செய்துள்ளார் பி.எஸ். வினோத். படம் ஏற்கனவே திரையரங்குகளில் சென்ற மாதம் வெளியாகியிருந்தாலும் செப்டம்பர் 2ம் தேதியன்று நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என நான்கு மொழிகளில் வெளியாகியுள்ளது.    



பேய் என்ற பெயரில் பொய்:


பேய் படங்களை விரும்பும் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்போடு இந்த படத்தை பார்த்து இருந்தால் நிச்சயம் அவர்களுக்கு ஏமாற்றம் தான். பேய் படம் பார்த்து அலுத்துப்போன ரசிகர்களுக்கு ஒரு புது ஐடியாவாக காட்டேரியை காட்டியுள்ளார்கள். அதனோடு சேர்ந்து கொஞ்சம் திரை கதையையும் காட்டியிருக்கலாம். தோணியதையெல்லாம் படமாக திரையில் காட்டியுள்ளார்கள்.


 






 


காதில் சுற்றியது பூ அல்ல பூ வண்டி:   


வைபவ் இப்படத்தில் ஒரு திருட்டு தொழில் செய்பவராகவும் தங்கத்தை கொள்ளையடிப்பதற்காக ஒரு கிராமத்திற்கு குடும்பத்துடன் செல்கிறார்கள். அங்கு பேய்களிடம் சிக்கி தவிப்பதும் அதற்கு பிறகு நடக்கும் கூத்தும் தான் படத்தின் மீதி கதை. காமெடி என்ற பெயரில் நம்மை காதில் ரத்தம் வடிய வைக்கிறார்கள். பொதுவாகவே பேய் கதை என்றால் கற்பனையும் கூடவே ஒட்டிக்கொள்ளும் ஆனால் இந்த படத்தில் கற்பனையை வண்டி வண்டியாக ஒட்டியுள்ளார்கள். இந்த படத்தை பார்ப்பவர்கள் கொஞ்சம் மன தைரியத்தோடு படத்தை பார்க்க வேண்டும். இந்த படத்தை எடுக்க நான்கு ஆண்டுகள் ஏன் எடுத்து கொண்டார்கள் என தெரியவில்லை. 


படத்தில் கதை மிஸ்ஸிங்:


பேய்களை பார்த்து போரடிக்கும் ரசிகர்களுக்கு வரலக்ஷ்மியின் "நான் அழகா இருக்கேனா..."என்று கேட்கும் அந்த டைலாக் சற்று அழகாய் தான் இருக்கிறது. வைபவ் கதாபாத்திரம் பெரிதாக ஈர்க்கவில்லை. வரலக்ஷ்மியின் நடிப்பு ஓகே ஆனால் மற்ற நடிகைகள் சுத்த வேஸ்ட்.  பிளாஷ்பேக் காட்சிகளை தவிர வேறு எதுவும் படத்தில் இல்லை. ஒளிப்பதிவாளர் பி.எஸ். வினோத் படத்திற்கு ஒரே பிளஸ் பாயிண்ட். பின்னணி இசை மூலமாவது பயத்தை கொண்டுவரலாம் என்று நினைத்தாலும் அதையும் இசையமைப்பாளர் எஸ்.என். பிரசாத்தால் முடியவில்லை. எடிட்டிங் பணிகளும் கைகொடுக்கவில்லை. 



வழக்கமான பேய் கதை என்றாலும் ஒரு ஸ்ட்ராங்கான திரைக்கதை, நல்ல கதைக்களம், நடிகர்களின் சிறப்பான நடிப்பு என படத்தை ஸ்வாரஸ்யமாக்கி இருக்கலாம். ஆனால் இது பேய் படமா அல்லது பேய்களுக்கே பேய் பிடித்த விட்டதா என்ற மாதிரி ஓடியிருப்பது சிரிப்பை தான் உண்டாக்குகிறது. "யாமிருக்க பயமேன்"என்ற வெற்றி படத்தை இயக்கிய இயக்குனரா இப்படத்தை எடுத்துள்ளார் என்று ஆச்சரியமாக உள்ளது.