என்னைப் பார்த்து சூர்யா மட்டும் அப்படிச் சொல்லிவிட்டா நான் நொந்து போயிடுவேன் என்று கெஞ்சலாக கொஞ்சலாக பேசியிருக்கிறார் சமீரா ரெட்டி. அவர் அழகைப் பார்த்தால் எப்போதுமே நெஞ்சுக்குள் மாமழை பெய்திடும்தான். ஆம் சமீரா அப்படி ஒரு அழகான புன்னகைக்காரி.


அந்த புன்னகைக்காரி அண்மையில் ஒரு யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் மிட்டாய் வார்த்தைகளால் பட்டாசு வெடிக்கவிட்டிருக்கிறார்.


அவருடைய பேட்டியிலிருந்து:


எனக்கு எப்பவுமே நடிகர், நடிகைகளுக்கு ரேங்க் போடுவது பிடிக்காது. ஏன் தெரியுமா என்னை யாராவது ரேங்க் போட்டு பட்டியலிட்டால் பிடிக்காது. அதையேத்தான் நான் மற்றவர்களுக்கும் யோசிக்கிறேன். யோசித்துப் பாருங்களேன்.. என்னுடன் நடித்த சூர்யா இப்போது எனக்கு 8வது ரேங்க் கொடுத்தால் என் இதயமே நொறுங்கிவிடும். என்னோட ஆல்டைம் ஃபேவரிட் ஹீரோ சூர்யா தான். என்னுடைய பிரியமான படம் வாரணம் ஆயிரம். பிடித்த பாடல் நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை. என் பசங்களுக்கும் அந்தப் பாடல் பிடித்துவிட்டது. என் கணவர் மட்டும்தான் இன்னும் அந்தப்படத்தைப் பார்க்கவில்லை. அவரைப் பார்க்கச் செய்ய வேண்டும்.


இன்ஸ்டாவில் நூல் விடுறாங்க...
என்னிடம் என் கணவரைத் தவிர ப்ரோபோஸ் பண்ண யாருக்கும் துணிச்சல் இருந்ததில்லை. ஆனால் இன்ஸ்டாவில் இப்போதும் எனக்கு நூல் விடுகிறார்கள். நேற்றுகூட ஒருவர் நான் தான் அவருடைய மனைவி என்று நினைத்து வாழ்வதாக பேசியிருந்தார். இன்னொருவர் என் கணவரைப் பிரிந்து அவருடன் வந்தால் ஏகபோக வாழ்க்கை தருவதாகச் சொன்னார். எல்லோருக்கும் நான் சொல்வது நான் என் கணவருக்கு ரொம்பவே உண்மையானவள் என்பதை மட்டுமே. அப்புறம் நீங்கள் எல்லோரும் பெண்களை ஆசைகாட்டி விலைக்கு வாங்கலாம் என்று நினைக்காதீர்கள். பெண்கள் அப்படியெல்லாம் மயங்க மாட்டார்கள். ஆனால் இன்ஸ்டாவில் சில பதிவுகள் ரொம்பவே ஃபண்ணியாக இருக்கும். அவற்றை ரசிப்பேன்.




எனக்கு ஜப்பானிய உணவு பிடிக்கும்:
எனக்கு ரொம்ப பிடித்த உணவு இட்லி, தோசை தான். அதன் பின்னர் ஜப்பானிய உணவு பிடிக்கும். அண்மையில் ஜப்பான் சென்று திரும்பும்போது இரண்டு பெட்டிகள் நிறைய ஜப்பானிய உணவுப் பொருட்களை வாங்கிவந்தேன். அப்புறம் என்னுடைய டாப் 5 ஷாப்பிங் லிஸ்ட் கேட்டீர்கள் என்றால், நம்பர் 1 செருப்பு, நம்பர் 2 உணவுப் பொருட்கள், நம்பர் 3 மேக்கப், நம்பர் 4 மேக்கப் பொருட்கள் அப்புறம் என் பையன் ரூமுக்கான ஸ்டிக்கர்.


பெண்களை மதிக்கவும்:
சினிமாத் துறையில் பெண்களை மதிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. நான் நடிக்கும்போது என்னை நிறைய பேர் தவறான எண்ணத்தோடு அணுகியுள்ளனர். பெண்களை வெறும் க்ளாமர் பொம்மையாகப் பார்க்காதீர்கள். எங்களால் நிறைய திறமையான நடிப்பு வெளிப்படுத்த முடியும். அதையும் கவனியுங்கள். பெண்கள் மீதான பார்வை ஒருநாள் மாற வேண்டும். இப்போது தான் நடிகைகள் அதற்கான பேபி ஸ்டெப்ஸ் எடுத்து வைக்கின்றனர். நிச்சயம் ஒருநாள் எல்லாம் மாறும்.