தங்கர் பச்சான் இயக்கி பாரதிராஜா, கௌதம் வாசுதேவ் மேனன், அதிதி பாலன், யோகிபாபு ஆகியோர் முதன்மை வேடங்களில் நடித்திருக்கும் திரைப்படம் ‘கருமேகங்கள் கலைகின்றன’. இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். VAU Media சார்பில் துரை வீரசக்தி இப்படத்தை தயாரித்துள்ளார்.
கதை
தங்கர் பச்சான் எழுதிய ‘கருமேகங்கள் ஏன் கலைந்து சென்றன’ என்கிற சிறுகதையை மையமாக வைத்து இயக்கப்பட்டிருக்கிறது கருமேகங்கள் கலைகின்றன படம். ஓய்வுபெற்ற நேர்மையான நீதிபதி ராமநாதன் (பாரதிராஜா) தன்னைப் போல் தனது மகன் கோமகன் ஒரு நேர்மையான வழக்கறிஞராக இருக்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறார்.
ஆனால் கோமகன் வேறு பாதையைத் தேர்ந்தெடுக்க, தந்தையும் மகனும் 10 வருடங்கள் பேசாமல் ஒரே வீட்டில் இருக்கிறார்கள். இப்படியான சூழ்நிலையில் 13 ஆண்டுகளுக்கு முன்பு கிடைத்திருக்க வேண்டிய ஒருவரின் கடிதம் ராமநாதனின் கையில் கிடைக்கிறது. யாருக்கும் சொல்லாமல் இந்த கடிதம் எழுதிய நபரை தேடிச் செல்கிறார் ராமநாதன்.
மறுபக்கம் ஆதரவற்ற ஒரு பெண்ணிற்கு அடைக்கலம் கொடுத்து அவளுக்கு பிறக்கும் குழதையை தனது குழந்தையாகவே வளர்க்கிறார் வீரமணி (யோகி பாபு), போலீசாக இருந்து குற்றவாளிகளுக்கு தன் கையால் தண்டனை வழங்கியதன் காரணத்தினால் ஆயுள் தண்டனை அனுபவித்து தற்போது ஆதரவற்ற குழந்தைகளுக்காக பெண்களுக்காக செயல்பட்டு வருபவர் கண்மணி (அதிதி பாலன்) என வெவ்வேறு சிக்கல்களில் இருக்கும் இந்தக் கதாபாத்திரங்களின் வாழ்க்கை ஒரு கோட்டில் சந்தித்துக் கொள்வதே கருமேகங்கள் கலைகின்றன படத்தின் மையக் கதை.
விமர்சனம்
‘கருமேகங்கள் கலைகின்றன’ படத்தின் இறுதிக்காட்சி முடியும் போது உங்கள் மனதில் ஒரு விதமான சோகம் நிச்சயம் குவியும். ஒரு நல்ல கதையின் முடிவிற்கு சரியான வகையில் நாம் வந்துசேரவில்லையோ என்று அப்போது தான் நமக்குத் தோன்றும்.
தங்கர் பச்சானின் மற்ற கதைகளைப் போலவே இந்தப் படத்தின் கதையும் உறவுகளின் முக்கியத்துவத்தை சாரமாக கொண்டிருக்கிறது என்றாலும், வெறும் மிகையான உணர்ச்சிகள் மட்டுமே தொய்வான திரைக்கதையை மறைக்க போதுமானதாக இல்லை. மூன்று வெவ்வேறு கதைகளை சொல்ல முற்பட்டிருக்கும் இயக்குநர் அவற்றை சமமான விகிதங்களில் கையாளத் தவறவிட்டிருக்கிறார்.
படத்தின் முதல் பாதி முழுவதும் கதாபாத்திரங்களைப் பற்றிய எந்த பின்கதையும் தெரியாமல் அவர்களுக்கு நடுவில் இருக்கும் பிரச்சனையை மட்டுமே சொல்லி வருவதால் பார்வையாளர்கள் எந்த வித பிடிப்பும் இல்லாமல் படத்தைப் பார்க்கிறார்கள். இரண்டாவது பாதியில் மற்ற அனைத்து கதாபாத்திரங்களும் ஓரம் தள்ளப்பட்டு யோகி பாபுவின் கதாபாத்திரம் மட்டுமே பிரதானமாக காட்டப்படுகிறது. நாடகத் தன்மைகள் நிறைந்த வசனங்கள் ஒரு நல்ல கதையின் உணர்ச்சியை நீர்த்துப்போக செய்கின்றன.
நடிப்பு எப்படி
படத்தில் நடித்திருக்கும் அத்தனை கதாபாத்திரங்களும் சிறப்பாக நடிக்கக் கூடிய ஆற்றல் இருந்தும் ஏதோ மேடை நாடகத்தில் நடிக்க நிறுத்தியது போல் தயக்கப்பட்டு நிற்கிறார்கள். அதை மிகச் சரியாக செய்வது பாரதிராஜா மட்டுமே. அதற்கு அவரது வயது முதிர்ச்சி இன்னும் பலம் சேர்க்கிறது. இயக்குநரின் தாக்கத்தில் இருந்து விடுபட்ட சுதந்திரமாக நடித்த ஒரே நடிகர் என்றால் அது யோகி பாபு தான். படத்தில் மிக சுவாரஸ்யமான காட்சிகள் அவருக்கும் அந்த குழந்தைக்கும் இடையில் வருபவை.
ஜி.வி.பிரகாஷ் குமாரின் இசை நன்றாக இருந்தாலும் காட்சிகளை மிகையாக காட்டுவதற்காக பயன்படுத்தப் பட்டிருக்கின்றன. இதை எல்லாம் தவிர்த்து பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிகளை என்கவுண்டர் செய்வதை நியாயப்படுத்து வகையிலான காட்சிகள் படத்தில் இடம்பெற்றிருப்பது விவாதத்திற்குரிய ஒன்றாகவே நிற்கிறது. ஒட்டுமொத்தமாக ‘கருமேகங்கள் கலைகின்றன’ படம் உணர்ச்சிகரமான ஒரு கதை என்றாலும், அதற்கு ஏற்ற திரைமொழியில் சொல்லப்படாத ஒரு படமாக தத்தளிக்கிறது.