Jigarthanda DoubleX Review in Tamil: மோசமான ரவுடியிடம் மாட்டிக் கொண்டு தவிக்கும் அப்பாவி டைரக்டர் எனும் ஜிகர்தண்டா 1 படத்தின் அதே கான்செப்டை வேறொரு திரைக்கதையில் எஸ்.ஜே. சூர்யா, லாரன்ஸ் நடிக்க புதுமையான பானமாக கொடுத்திருக்கிறார் கார்த்திக் சுப்பராஜ். அவரது முயற்சி வெற்றி கண்டதா?
ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்!
மதுரையின் பிரபல ஜிகர்தண்டா க்ளப்பின் தலைவன், தென் மாவட்டங்களை கண்ட்ரோலில் வைத்திருக்கும் ரவுடி ‘அல்லியன் சீசர்’ கதாபாத்திரத்தில் ராகவா லாரன்ஸ். சந்தர்ப்ப வசத்தால் கொலையாளியாக மாற்றப்பட்டு ஜெயிலுக்கு செல்லும் எஸ்.ஜே.சூர்யாவுக்கு அல்லியன் சீசரை கொன்றால் சிறையிலிருந்து விடுதலை, அவர் ஆசைப்பட்ட போலீஸ் வேலை என இரண்டு ஆஃபர் வருகிறது. உள்கட்சி அரசியல் - காவல்துறையின் அதிகார துஷ்பிரயோகம் ஆகியவற்றின் பகடைக்காயாக அனுப்பி வைக்கப்படும் எஸ்.ஜே.சூர்யா, சீசரை கொல்ல சினிமா எனும் ஆயுதத்தை கையில் எடுக்கிறார்.
போட்டி மனப்பான்மை, பிரபல ஹாலிவுட் நடிகர் ‘க்ளிண்ட் ஈஸ்ட்வுட்’ மேல் இருக்கும் மோகம் ஆகியவற்றால் தமிழ் சினிமாவின் முதல் கருப்பு ஹீரோவாக ஆசைப்படும் சீசரிடம், சினிமா இயக்குநராக நடித்து அறிமுகமாகி அவரை படம் எடுக்க ஒப்பந்தம் ஆகிறார்.
எஸ்.ஜே.சூர்யா கையில் எடுத்த காரியம் நிறைவடைந்ததா, லாரன்ஸ் சுதாரித்தாரா, இவர்களை வைத்து அரசியல் செய்தவர்கள் என்ன ஆனார்கள் என்பதை 2 மணி நேரம் 50 நிமிடங்கள் சினிமாவாக மதுரை மணக்கும் ஜிகர்தண்டா விருந்து படைத்திருக்கிறார்கள்.
எஸ்.ஜே.சூர்யா Vs ராகவா லாரன்ஸ்!
‘தமிழ் சினிமாவின் முதல் கருப்பு ஹீரோ’ எனும் டேக்லைனுடன் ரஜினிகாந்தை நினைவூட்டும் பாத்திரத்தில் லாரன்ஸ் நூற்றுக்கு நூறு பொருத்தம். பார்வையால் மிரட்டும் ரவுடி, ஈகோ தலைதூக்கி ஹீரோவாக ஆசைப்படுவது, டைரக்டர் வேட்டை நடத்துவது, க்ளிண்ட் ஈஸ்ட்வுட் பாணியில் திரையரங்கில் ரவுடிகளை போட்டுத் தள்ளுவது என முதல் பாதியில் ஆச்சர்யப்படுத்தி இருக்கிறார். எமோஷனல் காட்சிகளில் ஆங்காங்கே யோசிக்க வைத்தாலும் கார்த்திக் சுப்பராஜின் ட்ரேட் மார்க் மதுரை ரவுடியாக அமர்க்களப்படுத்தி இருக்கிறார்.
விடுதலை தேடி பக்காவாக ஸ்கெட்ச் போட்டு லாரன்ஸிடம் மாட்டும் இயக்குநர் ‘ரே’ சாராக எஸ்.ஜே.சூர்யா. வழக்கம்போல் திரையை தன்னுடையதாக்கி கபடியாடியிருக்கிறார். சந்தர்ப்ப வசத்தால் கொலையாளியாகி, பின் சத்யஜித்ரே மாணவராக அறிமுகமாவது, ரத்தத்தை பார்த்து நடுங்கிக்கொண்டே ஷார்ப்பான பார்வை, மிடுக்கான தோற்றத்துடன் ரவுடி சீசரை நம்ப வைப்பது என தன் நடிப்பால் ரசிகர்களுக்கு ‘டபுள் எக்ஸ்’ ட்ரீட் கொடுத்திருக்கிறார்.
சைக்கோ போலீசாக வரும் நவீன் சந்திரா திரையில் ஈவு இரக்கம் பார்க்காத கொடூர வில்லனாக கோலிவுட்டில் அதகள என்ட்ரி கொடுத்திருக்கிறார். இவர்கள் தவிர நாயகி நிமிஷா சஜயன், சத்யன், ஷைனி சாக்கோ, இளவரசு என தங்களது பாத்திரங்களை அனைவரும் கனக்கச்சிதமாக செய்திருக்கிறார்கள்.
படத்தின் ப்ளஸ்!
படத்தின் மூன்றாவது ஹீரோ சந்தோஷ் நாராயணன். இது நம்ம ஏரியா என புகுந்து விளையாடிருக்கிறார். “தீ”யின் குரலில் மாமதுரை பாடல் சிறப்பு. படத்தில் இன்னும் பொருத்தம். பிஜிஎம்மில் விண்ட்டேஜ் உணர்வைக் கடத்தி கௌ பாய் ஜானரில் ரகளை செய்து படத்துடன் மேலும் ஒன்ற வைக்கிறார்.
70களின் க்ளிண்ட் ஈஸ்ட்வுட்டின் படம் பார்க்கும் உணர்வை ஜாலியாகக் கடத்தும் திருவின் கேமரா, மலை கிராமத்தின் அழகியலுடன் அதன் பின் உள்ள குரூர அரசியலையும் சேர்த்து பதிவு செய்துள்ளது. காட்சிகள் வழியாக படம் கடத்தும் உணர்வு மேலும் சிறப்பு!
ஹாலிவுட்டின் எவர்க்ரீன் கௌ பாய், மூத்த நடிகர் க்ளிண்ட் ஈஸ்ட்வுட்டை தமிழ்நாட்டுக்கு வரவைத்து, திரையில் உலவவிட்டது கார்த்திக் சுப்பராஜின் அழகிய கற்பனை வளத்துக்கு ஒரு சிறந்த சான்று! கௌ பாய் ஜானர் பிரியர்களுக்கு சிறப்பானதொரு அனுபவம்.
கார்த்திக் சுப்பராஜ் சம்பவம்!
முதல் பாதியின் விறுவிறுப்பு இல்லாமல் இரண்டாம் பாதி ஆங்காங்கே சலிப்பு தட்டினாலும், லாஜிக் ஓட்டைகள் கொஞ்சமும் இன்றி இரண்டு மணி நேரம் 50 நிமிட படத்துடன் நம்மை ஒன்ற வைத்த கார்த்திக் சுப்பராஜ் மற்றும் படக்குழுவினர் உழைப்புக்கு அப்ளாஸ்!
முதல் பாகம் தந்த கமர்ஷியல் வெற்றி, எதிர்பார்ப்புகளை இரண்டாம் பாகத்தில் பூர்த்தி செய்ததுடன், மூன்றாம் பாகத்தின் மீதும் எதிர்பார்ப்பைக் கூட்டியிருக்கிறார் கார்த்திக் சுப்பாராஜ்!