2023 ஆம் ஆண்டுக்கான தீபாவளி படங்கள் இன்று வெளியாகியுள்ள நிலையில் ஒரு காட்சி கூட ஹவுஸ்ஃபுல் ஆகாததால் படக்குழுவினர் கலக்கமடைந்துள்ளனர். 

Continues below advertisement

நாளை மறுநாள் (நவம்பர் 12) தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமை பண்டிகை வரும் நிலையில் வெளியூரில் உள்ள மக்கள் சொந்த ஊருக்கு திரும்பி வருகின்றனர். புத்தாடைகள் மற்றும் பட்டாசுகள் வாங்க கடைவீதிகளில் கூட்டம் அலைமோதி வருகிறது. இது ஒருபுறம் இருக்க, மறுபக்கம் பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே தீபாவளி படங்கள் இன்று வெளியாகியுள்ளது. மொத்தமுள்ள 5 படங்களில் 4 படங்கள் மட்டும் இன்று ரிலீசாகிறது. 

அதன்படி, 

Continues below advertisement

  • ராஜூ முருகன் இயக்கியுள்ள ஜப்பான் படத்தில் கார்த்தி, அனு இம்மானுவேல், சுனில் வர்மா, வாகை சந்திரசேகர், கே.எஸ்.ரவிகுமார், ஜித்தன் ரமேஷ், பவா செல்லதுரை, விஜய் மில்டன் உள்ளிட்டோர் பலர் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ள இப்படத்தை ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. 
  • கார்த்திக் சுப்பராஜின் இயக்கத்தில் வெளியான ஜிகர்தண்டா படத்தின் இரண்டாவது பாகம்   “ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்” என்ற பெயரில் இன்று வெளியாகியுள்ளது. இதில் ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே.சூர்யா, நிமிஷா சஜயன், சத்யன், ஷைன் டைம் சாக்கோ, இளவரசு என பலரும் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். 
  • அறிமுக இயக்குநர் கார்த்தி இயக்கி விக்ரம் பிரபு, ஸ்ரீ திவ்யா, அனந்திகா, ரிஷி ரித்விக், சௌந்தரராஜா என பலரும் நடித்துள்ள “ரெய்டு” படம் தீபாவளி ரிலீசாக வெளியாகியுள்ளது. சாம் சி.எஸ். இந்த படத்துக்கு இசையமைத்துள்ளார். இப்படம் கன்னடத்தில் சிவராஜ் குமார் நடித்த தகரு படத்தின் ரீமேக்காக உருவாகியிருப்பதாக கூறப்படுகிறது.ரெய்டு படத்துக்கான வசனங்களை இயக்குநர் முத்தையா எழுதியுள்ளார். 
  •  மார்வெல் காமிக்ஸை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட ஹாலிவுட் படமான The Marvels படமும் இன்று தான் ரிலீசாகிறது. 
  • இந்தியில் சல்மான் கான், கத்ரீனா ஃகைப் நடித்துள்ள “டைகர் 3” படமும் இன்று தான் வெளியாகிறது.

காற்று வாங்கும் தியேட்டர்கள்

இப்படி மிகப்பெரிய எதிர்பார்ப்பை தீபாவளி படங்கள் ஏற்படுத்தியுள்ள நிலையில், முதல் நாளிலேயே தியேட்டர்கள் காற்று வாங்கும் அளவுக்கு எந்த ஒரு ஷோவும் ஹவுஸ்ஃபுல் ஆகவில்லை. தமிழ்நாடு அரசு காலை 9 மணி சிறப்பு காட்சிக்கு அனுமதியளித்த நிலையில் அந்த காட்சி கூட 70 சதவிகித இருக்கைகள் மட்டுமே நிரம்பியுள்ளதால் எதிர்பார்த்த வசூல் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. முதல் 3 நாட்கள் மட்டும் தான் வசூல் என்ற நிலையில் தீபாவளி ஞாயிற்றுக்கிழமை வருவதால் அதன்பிறகு வசூல் எகிறும் என சொல்லப்படுகிறது. வெளியூர் மக்கள் எல்லாம் பண்டிகையை கொண்டாட சொந்த ஊர் திரும்பி வருவதால் காட்சிகள் ஹவுஸ்ஃபுல் ஆகவில்லை என சொல்லப்படுகிறது. வழக்கத்தை விட இந்த தீபாவளிக்கு அளவுக்கதிகமாக படங்கள் வெளியாகியுள்ளது. இதனை ரசிகர்கள் தியேட்டரில் கண்டுகளிக்க வேண்டும் என திரையுலகினர் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.