Hot Spot Review in Tamil: இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் இன்று அதாவது மார்ச் மாதம் 29ஆம் தேதி ஹாட் ஸ்பாட் திரைப்படம் வெளியாகியுள்ளது. படத்தின் ட்ரைலர் வெளியானபோதே ரசிகர்கள் மத்தியில் பரபரப்பைக் கிளப்பியிருந்தது. இரண்டு மணி நேரம் இருக்கும் இந்தப் படம்.
மொத்தம் நான்கு தனித்தனி கதைகளைக் கொண்டு நகர்கின்றது. நான்கு கதைகளும் தனித்தனியாக இருக்கின்றது. அதாவது ஒரு கதை முடிந்த பின்னர் அடுத்த கதை தொடங்குகின்றது. நான்கு கதைகளுக்கும் ஹேப்பி மேரிட் லைஃப், கோல்டன் ரூல்ஸ், தக்காளிச் சட்னி மற்றும் ஃபேம் கேம் என பெயரிட்டுள்ளார். இதனைப் பார்க்கும்போது குறும்படங்கள் பார்ப்பதைப் போன்று இருந்தாலும் ஒவ்வொரு கதையும் மனதில் தெளிவாகவும் ஆழமாகவும் ரசிகர்கள் மனதில் பதியவைக்க இயக்குநர் முயற்சித்துள்ளார் என்பது ஒவ்வொரு கதையிலும் தெரிகின்றது. இந்த கதைகள் இணையாமல் போனது ரசிகர்களுக்கு ஒரு படம் பார்த்த உணர்வை ஏற்படுத்தியுள்ளதா என்று கேட்டால் அது கேள்விக்குறிதான்.
நான்கு கதைகள்
முதல் கதை படித்த மற்றும் கொஞ்சம் முற்போக்காக யோசிக்கும் காதலர்கள் தங்களது காதலை அடுத்தக்கட்டமான திருமணத்தை நோக்கி நகர்த்துவதற்காக என்ன செய்கின்றார்கள் என்பதை விளக்குகின்றது. ஆனால் இந்த கதைக்கு ஒரு முன்கதை இடம்பெற்றுள்ளது. அது கனவில் நடப்பதாக காட்டப்பட்டிருந்தாலும் முன்கதை ஏற்படுத்தும் தாக்கம் ரசிகர்கள் மத்தியில் ஆழமாய் பதிந்திருக்கும்.
இரண்டாவது கதையிலும் காதலிப்பவர்கள் தங்களது காதலை திருமணத்தை நோக்கி நகர்த்தும்போது அவர்களுக்கு ஏற்படும் சிக்கலை எவ்வாறு கையாளுகின்றனர் என்பதை மைய்யப்படுத்தியதாக இருக்கின்றது. படத்தின் ட்ரைலரில் இருந்த காட்சிகள் படத்தில் இல்லாதது, இயக்குநரின் பார்வையை ரசிகர்களுக்கு கடத்த முடியாமல் போயுள்ளது.
மூன்றாவது கதை ஆண் பாலியல் தொழிலாளரை மைய்யப்படுத்தியுள்ளது. அவர் தனது தொழிலையும் காதலையும் எவ்வாறு கையாளுகின்றார், அதனால் அவருக்கும் அவரது காதலிக்கும் ஏற்படும் பிரச்னைகள் என்ன என்பதை பேசுகின்றது. தக்காளிச் சட்னி எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த போர்ஷன், காதல் வயப்பட்டவர்கள் காதலில் எவ்வளவு ஈடுபாட்டுடன் இருக்க வேண்டும் என்பதை கூறுகின்றது.
நான்காவதாக உள்ள கதை தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோக்களில் குழந்தைகள் எவ்வாறு நடத்தப்படுகின்றனர். அதனால் குடும்பத்தினர் மத்தியிலும் ரியாலிட்டி ஷோ நடத்துபவர்களாலும் குழந்தை எதிர்கொள்ளும் கேள்விகள், நெருக்கடிகள், மனஉளைச்சல்கள் அந்தக் குழந்தை வாழ்வில் ஏற்படுத்தும் தாக்கத்தினை காட்சிப்படுத்தியுள்ளது.
படம் என்ன சொல்லுது?
நான்கு கதைகளிலும் நடித்துள்ள அனைவரும் சிறப்பாகவே நடித்துள்ளனர். குறிப்பாக கலையரசன், ஜனனி ஐயர், சுபாஷ், ஆதித்யா பாஸ்கர் நடிப்புக்கு தனி பாராட்டு. கோகுல் பினோய் ஒளிப்பதிவு ஓ.கே. ரகம். கவனம் ஈர்க்கும் மற்றும் திரைக்கதைக்கு ஏற்ப இசையமைத்துள்ள சதீஷ் ரகுநாதன் மற்றும் வான் கூட்டணிக்கு பாராட்டுகள். மொத்தத்தில் நான்கு கதைகளும் மக்கள் மனதில், “ இதுல என்ன இருக்கு, இதுல என்ன தப்பு, இது சரிதானே, ஊருடன் ஒத்துவாழ்” என இருப்பதால் நம்மை அறியாமல் நாம் செய்யும் தவறுகளை சுட்டிக்காட்டியுள்ளது. படக்குழுவினருக்கு பாராட்டுகள்.