Godzilla x Kong The New Empire Review: மான்ஸ்டர் வெர்ஸின் 5வது திரைப்படமாக காட்ஸில்லா x காங்: தி நியூ எம்பையர் உலகளாவிய திரையரங்குகளில் இன்று வெளியாகியுள்ளது.


மான்ஸ்டெர்வெர்ஸ்


காட்ஸில்லா மற்றும் காங் போன்ற பிரமாண்ட மிருகங்களை வைத்து லெஜண்டரி மற்றும் வார்னர் ப்ரோஸ் நிறுவனம் இணைந்து, மான்ஸ்டெவெர்ஸ் திரையுலகை உருவாக்கியுள்ளது. அதில் ஏற்கெனவே 4 படங்கள் வெளியாகியுள்ள நிலையில், கடந்த 2021ஆம் ஆண்டு வெளியான காட்ஸில்லா Vs காங் படத்தின் தொடர்ச்சியாக தான் காட்ஸில்லா x காங்: தி நியூ எம்பையர் படத்தின் கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது.


முந்தைய படத்தை இயக்கிய ஆடம் விங்கார்ட் தான் இந்தப் படத்தையும் இயக்கியுள்ளார். சுமார் 150 மில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவில் இந்தப் படம் உருவாகியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.


காட்ஸில்லா x காங்: தி நியூ எம்பையர் கதை என்ன?


முந்தைய படத்தின் இறுதியில் ஹாலோ எர்த்தில் தஞ்சமடைந்த காங், அங்கு தனக்கான குடும்பம் கிடைக்குமா எனத் தேடி அலைகிறது. பூமியின் மேற்பரப்பில் சுற்றித் திரியும் காட்ஸில்லாவோ, இயற்கைக்கு மாறாகவோ செயல்படும் மற்ற பிரமாண்ட மிருகங்களை வேட்டையாடிக் கொண்டிருக்கிறது.


இந்தச்சூழலில் ஹாலோ எர்த்தில் இருந்து பூமிக்கு அடையாளம் தெரியாத சமிக்ஞை வருகிறது. அதனை ஆராய முந்தைய படத்தில் வந்த ஜியா உள்ளிட்ட கதாபாத்திரங்கள், ஹாலோ எர்த்திற்கு செல்ல அங்கு அடுத்தடுத்து பல மர்ம முடிச்சுகள் அவிழ்க்கப்படுகின்றன. இதனிடையே, படத்தின் முக்கிய வில்லனான ஸ்கார் கிங், ஷீமோ எனும் உலகையே உறைய வைக்கும் சக்தி கொண்ட பிரமாண்ட மிருகத்தை தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு மொத்த பூமியையும் தனது காலடியில் கொண்டு வர முயல்கிறது. இதனை காட்ஸில்லாவும் காங்கும் சேர்ந்து எப்படி வீழ்த்தின, காங்கிற்கு அதன் புதிய குடும்பம் கிடைத்ததா என்பதே படத்தின் மீதிக்கதை.



படம் எப்படி இருக்கு?


வழக்கம்போல் இந்தப் படத்திலும் காங்கை மையப்படுத்தி தான் ஒட்டுமொத்த கதையும் கட்டமைக்கப்பட்டுள்ளது. முந்தைய படங்களை போன்று இல்லாமல், இந்தப் படத்தில் ஹாலோ எர்த் தொடர்பான பல்வேறு தகவல்கள் சற்று விரிவாக வழங்கப்பட்டுள்ளன. காட்ஸில்லா ஒரு எக்ஸ்டெண்டட் கேமியோவாக இருக்க, காங் படத்தின் நாயகனாக வலம் வருகிறார். இரண்டு பிரமாண்ட மிருகங்களும் ஒரே நேரத்தில் ஸ்கிரீனில் தோன்றும்போதெல்லாம், நம்ம ஊர் தல-தளபதியை ஒன்றாக ஸ்க்ரீனில் பார்த்தால் எப்படி இருக்குமோ அப்படிப்பட்ட எண்ணம் தோன்றுகிறது.


காங்கிற்கு பல கூஸ் பம்ப் மொமண்டுகள் இருக்க, காட்ஸில்லா வரும் எல்லாக் காட்சிகளுமே படத்தில் கூஸ்பம்பாக அமைந்துள்ளது. 2 மணி நேரத்திற்கும் குறைவான ரன் டைம் என்பதால் படம் விறுவிறுப்பாக அமைந்துள்ளது. எந்த இடத்திலும் தொய்வடைவதாக உணர முடியவில்லை.


மனிதர்கள் தரப்பில் ஜியா கதாபாத்திரத்திற்கு மட்டும் சற்றே கதையில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. புதியதாக வந்த குட்டி காங்கும் கவனத்தை ஈர்த்துள்ளது. கிராபிக்ஸ் காட்சிகள் தத்ரூபமாக அமைந்திருக்க, பின்னணி இசையும் அதற்கு வலம் சேர்த்துள்ளது. ஆங்காங்கே வரும் பெர்னி கதாபாத்திரத்தின் ஒன்லைன் நகைச்சுவை பஞ்ச்களும் நன்றாகவே வர்க்-அவுட் ஆகியுள்ளன. 


குறைகள்: 


கதை ஒன்லைனாக நன்றாக இருந்தாலும், திரைக்கதைக்கு எனப் பெரிதாக மெனக்கெட்டதாக தெரியவில்லை. கிளைமேக்ஸ் சண்டைக் காட்சிகள் அவ்வளவு தானா எனக் கேட்கும் வகையில், சட்டென முடிந்துவிட்டதாக தோன்றுகிறது. பல தமிழ்ப் படங்களில் பார்த்து பழகி அலுத்துப்போன லாஜிக்கை வைத்து படத்தை முடித்துள்ளனர்.


உலகின் ஐஸ் ஏஜிற்கே இதுதான் காரணம் எனக் கூறப்பட்ட, ஷீமோ எனும் ஆபத்தான மிருகம் ஊறுகாய் அளவுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது. வில்லனுக்கு ஒரு மணி நேரம் பில்டப் கொடுத்த நிலையில், கிளைமேக்ஸை பார்க்கும்போது இவனுக்கா இவ்வளவு பில்டப்பா என கேட்க தோன்றுகிறது. மற்ற கதாபாத்திரங்கள் எதற்கும் முக்கியத்துவம் தரப்படவில்லை. 


மொத்தத்தில் காட்ஸில்லா x காங்: தி நியூ எம்பையர் படத்தில் சில குறைகள் இருந்தாலும், வார இறுதிக்கான ஒரு நல்ல கமர்ஷியல் படமாக இதனை தாராளமாக திரையரங்கில் கொண்டாடலாம்.