இன்றைய தமிழ் சினிமா வில்லிகள் அனைவரும் மிரட்டலான லுக், கம்பீரமான குரல், கொடூரமான எண்ணங்கள் என இன்றைய காலகட்டத்திற்கு ஏற்ற அட்வான்ஸ்ட் வில்லிகளாக வலம் வந்தாலும், அவர்களுக்கு எல்லாம் முன்னோடியாக கிட்டத்தட்ட 40 ஆண்டுகாலம் தீய எண்ணம் கொண்ட வில்லத்தனமான கதாபாத்திரங்களிலேயே நடித்து அக்கால ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு தனி ட்ரேட்மார்க் செட் செய்தவர் நடிகை சி.கே. சரஸ்வதி.
வில்லத்தனத்தின் உச்சக்கட்டம் :
விழிகளை உருட்டி மிரட்டும் பார்வையால் வில்லத்தனமான சிரிப்பை முகத்தில் காட்டி கோபத்தையும், கொடூரத்தையும் கொந்தளிக்கும் முகபாவனைகள் என தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்தி பார்வையாளர்களை வெறுப்படைய வைக்கும் அளவுக்கு தத்ரூபமாக நடித்து பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்தவர் சி.கே. சரஸ்வதி. உயரம் குறைவான பருமன் கொண்ட உருவ தோற்றம், கணீர் குரல் வளம், வெடுக்கு பேச்சு, ஏற்றம் இறக்கத்துடன் கூடிய சுட்டெரிக்கும் வசனங்கள் என எதிராளிகளை அப்படியே அடக்கி விடும் ஆளுமையான ஒரு நடிகை.
வசவு அர்ச்சனைகள் தான் அங்கீகாரம் :
சி.கே. சரஸ்வதி குணச்சித்திர கதாபாத்திரங்கள் மற்றும் அம்மாவாக பல படங்களில் நடித்திருந்தாலும் கொடுமைக்கார மாமியாராக அவர் நடித்த படங்களே ஏராளம். பெண் ரசிகைகளின் வெறுப்பை சம்பாதித்து வசவு வார்த்தைகளை, திட்டுகளை அளவில்லாமல் சேர்த்தது அவரின் நடிப்புக்கு கிடைத்த அங்கீகாரம். இன்று நினைக்கையில் கூட 'பாகப்பிரிவினை' அகிலாண்டம், 'தில்லானா மோகனாம்பாள்' வடிவு, 'வாணி ராணி' நாகவேணியாக பலதரப்பட்ட கதாபாத்திரங்களில் திரையில் வந்து கதிகலங்க செய்தவர்.
மறக்கமுடியா கதாபாத்திரங்கள் :
1945ம் ஆண்டு 'என் மகன்' என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் சி.கே.சரஸ்வதி. அதைத்தொடர்ந்து பல படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்து வந்தவருக்கு ஒரு திருப்புமுனை படமாக அமைந்தது 'பாகப்பிரிவினை'. பெரியம்மா கதாபாத்திரத்தை கூட இவ்வளவு வில்லத்தனமான செய்யமுடியுமா என ஆச்சரியப்படுத்தினார். அதற்கு பிறகு வீட்டுக்குள் கலகம் செய்வது, குடும்பத்தை இரண்டாக்குவது போன்ற கதாபாத்திரங்களாக வந்து குவிய அதை தனக்கு கிடைத்த அங்கீகாரமாக நினைத்து நடிப்பில் தூள் கிளப்பினார்.
50 ஆண்டு திரைப்பயணம்
கூடி வாழ்ந்தால் கோடி நன்மை, நான் சொல்லும் ரகசியம், நல்ல இடத்து சம்பந்தம், பாக்கியலட்சுமி, பூலோக ரம்பை, மங்கள வாத்தியம், நவரத்தினம், பார்த்தால் பசி தீரும், லட்சுமி கல்யாணம், பாத காணிக்கை, மகாகவி காளிதாஸ், படித்தால் போதுமா, இரு கோடுகள், நவராத்திரி என எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், டி.எம்.எஸ், எஸ்.எஸ். சந்திரன், ஜெய்சங்கர், ஜெமினி கணேசன் என மிகப்பெரிய நடிப்பு ஜாம்பவான்களின் படங்களில் நடித்து அமர்களப்படுத்தினார். =
ருக்குமணி ருக்குமணி பாட்டி:
அது மட்டுமின்றி இன்றைய தலைமுறையினரின் ஃபேவரட் நடிகர்களின் படங்களான ரோஜா படத்தில் ருக்குமணி ருக்குமணி என்ற பாடலில் நடனமாடி இருப்பார். இருவர், காதலா காதலா, சின்னத்தம்பி உள்ளிட்ட படங்களில் நடித்த சி.கே. சரஸ்வதி 1998ம் ஆண்டு வெளியான 'பொன்மானை தேடி' திரைப்படம் தான் இறுதி படமாக அமைந்தது.
வறுமையில் முடிந்த பயணம் :
சி.கே. சரஸ்வதி திரையை ஆக்ரமித்து நடிப்பால் பார்வையாளர்களை மிரள செய்தவருக்கு விருதுகள் வழங்கப்பட்டதா? பெரிய அளவில் சம்பளம் வழங்கப்பட்டதா என தெரியவில்லை. திரையில் பட்டு புடவையும், நகைகளையும் அணிந்து கம்பீரமாக தோற்றமளித்தவர், கடைசி காலத்தில் கட்டிக்கொள்ள நல்ல புடவை கூட இல்லாமல் கிழிந்த ஆடைகளுடன் காட்சியளித்துள்ளார். நலிந்த திரை கலைஞர்களுக்கு வழங்கப்படும் 2000 ரூபாய்க்காக கால்கடுக்க அலைந்து திரிந்து வாங்கி செல்லும் கொடுமை எல்லாம் அனுபவித்துள்ளார்.
திரையில் கொடூரத்தின் உச்சமாக உயிர்கொடுத்த சி.கே. சரஸ்வதி உண்மை வாழ்க்கையில் கணவனால் கைவிடப்பட்டு கொடிய வறுமையால் பாதிக்கப்பட்டு சொல்ல முடியாத துயரத்தில் தவித்து, நரக வேதனையுடன் இந்த வாழ்க்கை பயணத்தில் இருந்து விடை பெற்றார். இந்த நல்லுள்ளம் கொண்ட நாயகியின் 27வது நினைவு தினம் இன்று.