ஓடிடியில் வெளியாகும் வெளிமாநில படங்களில், சமீபத்திய வரவு F3. தெலுங்கில் இருந்து தமிழில் மொழி மாற்றம் செய்யப்பட்டு, சோனி லைவ் ஓடிடியில் வெளியாகியுள்ள திரைப்படம். தெலுங்கு படங்கள் என்றால், வெட்டு, குத்து, ரத்தம் என்கிற அடிப்படை ஃபார்முலா இல்லாமல், கலகலப்பாக எடுக்க நினைத்த படம்.
வெங்கடேஷ், வருண் தேஜ், தமன்னா, மெக்ரின் பிர்ஜடா உள்ளிட்ட இன்னும் 150க்கும் மேற்பட்டோர் நடித்திருக்கும் படம். விரல் விட்டு அல்ல, கால்குலேட்டர் வைத்து கூட எண்ண முடியாத அளவிற்கு, பெருங்கூட்டம் நடித்திருக்கிறது. பல லட்சங்களை செலவு செய்து , பல கோடிகளை அபேஸ் செய்ய வேண்டும் என்று, கோமாளி ஐடியாவோடு சுற்றும் இருவர். அவர்களுக்கு மாமா என்கிற கதாபாத்திரத்தில் தலா ஒருவர்.
இரு தரப்பையும் ஏமாற்றி, அவர்களிடமிருந்து 50 லட்சம், 25 லட்சம் என, லட்சங்களை அபேஸ் செய்யும் பெருங்குடும்பம். ஒரே குடும்பத்திடம் ஏமாந்த இருவரும் சேர்ந்து, பணத்தை வசூலிக்க புறப்பட, போலீஸ்காரர் வீட்டில் வைரம், பணம் கொள்ளையடிக்க அனைவரும் ஒன்று சேர்கிறார்கள். திட்டம் சொதப்பி விட, ஐடியா கொடுத்த போலீஸ்காரர் உள்ளிட்ட 4 பேர் தற்கொலைக்கு முயற்சிக்கும் போது, பெரிய தொழிலதிபர் ஒருவர், சிறுவயதில் தொலைந்து போன தனது மகனைத் தேடுகிறார் என்கிற செய்தி வருகிறது.
தற்கொலையை கைவிட்டு, நான்கு பேரும் போலி மகனாக நடித்து, ஆயிரக்கணக்கான கோடி சொத்துக்களை அபகரிக்க முயற்சிக்கிறார்கள். அதில் யார் வெற்றி பெற்றார், பணம் கிடைத்ததா, இல்லையா? இப்படி பல கேள்விகளோடு முடிவடையும் படம்.
சிறு குழந்தைகள் ஏமாற்றி விளையாடும் விளையாட்டு போல தான், பணத்தை இழக்கும் காட்சிகள் உள்ளன. இது, நகைச்சுவைக்கு உதவியதா என்றால், அதுவும் குழந்தைகளுக்கான நகைச்சுவையாக தான் உள்ளது. சிரிக்க வைக்க ரொம்ப மெனக்கெடுகிறார்கள். ஆனால், அது சில இடங்களில் தான் ஜெயிக்கிறது.
முன்பு சொன்னது போல, அடிதடி, வெட்டு, குத்து இல்லாதது மிகப்பெரிய ஆறுதல். அதே நேரத்தில், கொத்து கொத்தாக வரும் கதாபாத்திரங்களை நியாபகம் வைத்துக் கொள்வதே பெரிய வேலையாக உள்ளது. போலி மகனாக நடிக்க வந்து ஆயிரக்கணக்கான கதைகளை தமிழ் சினிமா பார்த்திருக்கிறது. அந்த வகையில், இந்த படத்தில் பெரிய புதுமை இல்லை.
அதே நேரத்தில், தமிழ் சினிமா முகங்கள் இல்லாததால், சில காட்சிகளில் உள்ள ஈர்ப்பை நம்மால் உணர முடியவில்லை. அது அவர்கள் தவறல்ல; நமது தவறாக கூட இருக்கலாம். கை தேர்ந்த கதாபாத்திரங்கள் தேர்வு செய்தும் கூட, அவர்கள் பல இடங்களில் வீணடிக்கப்பட்டிருப்பதாகவே தெரிகிறது. குபீர் சிரிப்பிற்கான இடங்கள் மிகக்குறைவு; ஆனாலும் ‛குக் வித் கோமாளி’ பேஃன்ஸ் ரசித்து பார்க்க வாய்ப்பிருக்கிறது.
தேவி ஸ்ரீ பிரசாத்தின் இசையை, மொழி பெயர்ப்பு என்கிற பெயரில், கடித்து குதறியிருக்கிறார்கள். ஒரிஜினலும் அப்படி தான் என்றால், இசையை கடந்து செல்ல வேண்டியது தான். சாய் ஸ்ரீ ராமின் ஒளிப்பதிவு, ஓரளவிற்கு அமைந்து போயுள்ளது. அனில் ரவிபுடியின் இயக்கமும், எழுத்தும் காட்சிகளை விறுவிறுப்பாக நகர்த்தினாலும், நம்பகத்தன்மையை இழக்கிறது. அவர் நினைத்ததை அவர் சரியாக எடுத்திருக்கிறார்; ஆனால், அவர் இன்னும் கொஞ்சம் சிறப்பாக நினைத்திருக்க வேண்டும். மற்றபடி, பார்க்கலாம், சிரிக்கலாம், ரசிக்கலாம் என்கிற கேட்டகிரியை தாண்டவில்லை F3. அப்புறம் இறுதியாக, அதென்ன F3 என்கிற சந்தேகம் வரலாம்; Fun and Frustration என்கிறார்கள் அதை.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்