நடிகர் விஜயகாந்தின் திரை வாழ்வில் திருப்புமுனை படங்களைத் தந்த எஸ்ஏ சந்திரசேகர், தன் மகன் விஜய்யையும் நாளைய தீர்ப்பு படத்தில் அறிமுகப்படுத்தியவர். தமிழ் சினிமாவில் பன்முகக் கலைஞராக வலம் வந்துள்ள இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர், 1981இல் ’சட்டம் ஒரு இருட்டறை’ படத்தில் அறிமுகமாகி தமிழ் சினிமாவில் வெற்றிப்பட இயக்குநராக வலம் வந்தவர். இவர் பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார்.சமீபத்தில் சில திரைப்படங்களிலும் நடித்தார். 






இவர் 2011ம் ஆண்டு இயக்கிய திரைப்படம் சட்டப்படி குற்றம். சந்திரசேகரே தயாரித்து இயக்கிய இப்படத்துக்கு விஜய் ஆண்டனி இசையமைத்தார். இப்படத்தில் சத்யராஜ், விக்ராந்த், ஹரிஷ் கல்யாண் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இப்படம் வெளியாகி 11 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் அப்படம் தொடர்பான வழக்கொன்று நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. 'சட்டப்படி குற்றம்' திரைப்படத்தின் விளம்பர செலவு 76 ஆயிரத்து 122 ரூபாயை வழங்காததை அடுத்து, விளம்பர நிறுவன உரிமையாளர் சரவணன் என்பவர், சென்னை அல்லிகுளம் 25-வது உதவி உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார். 




வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில் இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் அலுவலக பொருட்களை ஜப்தி செய்ய எழும்பூர் உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டது. நீதிமன்ற உத்தரவின்படி எஸ்.ஏ.சந்திரசேகர் அலுவலக பொருட்களை ஜப்தி செய்ய சம்பந்தப்பட்ட நபர்கள் சென்றபோது அங்குள்ள ஊழியர்கள் அவர்களை அனுமதிக்கவில்லை எனத் தெரிகிறது. இதனை அடுத்து திரும்பி வந்த சரவணன் தரப்பு, ஜப்தி செய்ய சென்றபோது ஊழியர்கள் அனுமதிக்கவில்லை எனக்குறிப்பிட்டு காவல்துறை உதவி கோரி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.