தமிழ்நாடு சினிமா பத்திரிகையாளர்கள் சங்கம் அண்மையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடித்து வெளியான விக்ரம் படத்துக்காக கூட்டம் ஒன்றைக் கூட்டியிருந்தது. இயக்குநர் பாரதிராஜா இந்தக் கூட்டத்தில் பங்கேற்றிருந்தார்.
அவர் பேசியதில் இருந்து...”முன்பெல்லாம் சினிமா பத்திரிகையாளர்கள் கடுமையாக விமர்சனம் எழுதுவார்கள். ஆனால் தற்போது சூழல் மாறியிருக்கிறது. அனைவரும் நேர்த்தியாக எழுதுகிறார்கள். முன்பெல்லாம் என்னைப் பற்றி ஏதாவது எழுதினால் பத்திரிகை அலுவலகத்துக்கே போய் சண்டை போடுவேன். இப்போது நான் பல் போன சிங்கம். வயதும் இடம் கொடுக்கலை மனதும் இடம் கொடுக்கலை. எங்களைப் போன்ற இயக்குநர்களுக்காக இப்படி ஒரு நிகழ்வை ஏற்படுத்தி அதில் என்னைப் பேச வைத்ததற்கு நன்றி. கமல் மாதிரி கலைஞன், சினிமாவுக்காகவே தன்னை அர்ப்பணித்துக் கொண்டவன். இதில் பலதை இழந்திருக்கிறான். அவன் இழந்ததற்கெல்லாம் சேர்த்து லோகேஷ் கனகராஜ் சம்பாதித்துக் கொடுத்துவிட்டான். 16 வயதினிலே படத்தின்போது சூட்டிங் ஸ்பாட் சென்ற பிறகுதான் என்ன காட்சி என்பதையே விளக்கினேன். கோமணம் கட்டிக்கொண்டு நடிக்க வேண்டும். கமல் துளியும் தயங்கவே இல்லை. அடுத்த நொடி ரெடியானான். உண்மையில் சினிமாவுக்காக தங்களை அர்பணித்துக் கொண்டவர்கள் அப்படித்தான். எங்களுக்கு வேறு எதுவும் தெரியாது. இன்னும் எத்தனை ஜென்மம் எடுத்தாலும் நாங்கள் சினிமாவில்தான் இயங்க வேண்டும் என விருப்பப்படுகிறேன். சினிமாவைப் பற்றி எழுதும் பத்திரிகையாளர்கள் கொடுத்துவைத்தவர்கள், மகிழ்ச்சியாகவே இருப்பீர்கள். நான் தற்போது நான்கு படங்கள் செய்கிறேன். இரண்டில் நடிக்கிறேன். இரண்டு படங்களை இயக்குகிறேன். இதுவரை 56 படங்கள் செய்துவிட்டேன். ஆனால் வெறும் 4 படங்களில் லோகேஷ் தான் யார் என்பதை நிருபித்துவிட்டார். இவர்களோடு இப்போது நான் போட்டி போடவேண்டுமே. அதற்காகத்தான் இந்தப் படங்களை இயக்குகிறேன். நான் எடுக்கும் படங்கள் லோகேஷ் கனகராஜ் பாராட்டும் அளவுக்கு இருந்துட்டா போதும்” எனப் பேசி முடித்தார். பாரதிராஜா மிகுந்த தன்னடக்கத்துடன் பேசியதாக பார்வையாளர்கள் தங்களிடையே கருத்து பகிர்ந்துகொண்டனர்.