டங்கி




ஷாருக்கான், டாப்ஸி, விக்கி கெளஷல், பொம்மன் இரானி, விக்ரம் கொச்சார், சதிஷ் ஷா உள்ளிட்டவர்கள் நடித்து ராஜ்குமார் ஹிரானி இயக்கியுள்ள படம் டங்கி. ரெட் சில்லீஸ் என்டர்டெயின்மெண்ட் மற்றும் ராஜ்குமார் ஹிரானி ஃபிலிம்ஸ் இணைந்து  இந்தப் படத்தை தயாரித்துள்ளது. ப்ரித்தம் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார்.


இன்று திரையரங்கில் வெளியாகி இருக்கும் டங்கி படத்தின் விமர்சனத்தைப் பார்க்கலாம். இந்த ஆண்டு முன்னதாக வெளியான பதான் , ஜவான் படத்தைத் தொடர்ந்து இந்த ஆண்டின் ஹாட்ரிக் வெற்றியை ஷாருக்கான் பதிவு செய்தாரா என்று பார்க்கலாம்.


டங்கி என்றால் என்ன?




ஒரு நாட்டில் இருந்து இன்னொரு நாட்டுக்கு சட்டவிரோதமான முறையில் செல்லும் முறையை டங்கி என்கிறோம். இரண்டாம் உலகப் போரின் முடிவில் இங்கிலாந்து நாட்டில் மனித வளத்திற்கான தட்டுப்பாட்டில் இருந்தபோது வெளி நாடுகளில் இருந்து புலம்பெயர்ந்த மனிதர்களை தங்களது உற்பத்தி தேவைகளுக்கு பயன்படுத்தத் தொடங்குகிறது. இந்தியாவில் குறிப்பாக பஞ்சாப்  மாநிலத்தில் பல்வேறு இளைஞர்கள் இங்கிலாந்து செல்லும் கனவில் சுற்றித் திரிகிறார்கள். 


பஞ்சாபில் இருக்கும் லால்து என்கிற கிராமத்தைச் சேர்ந்த மன்னு (டாப்ஸி)  பல்லி , புக்கு மற்றும் சுகி( விக்கி கெளஷல்) ஆகிய நான்கு நபர்கள் எப்படியாவது லண்டனுக்கு சென்றுவிட வேண்டும் என்பதே இவர்களின் லட்சியம்.


ஒவ்வொருவர் வீட்டிலும் நிலவும் பொருளாதார நெருக்கடி ,  கொடுமை செய்யும் கணவனிடம் இருந்து தனது காதலியை காப்பாற்ற செல்வது என ஒவ்வொருவருக்கும் ஒரு காரணம் இருக்கிறது. 


விசா ஏற்பாடு செய்துதருவதாக கூறி போலியான ஏஜென்சிகளிடம் பணத்தை ஏமாந்த இந்த நான்கு  நபர்களின் வாழ்க்கையில் ஒரு பழைய கடனை தீர்க்க வந்து சேர்கிறார் கதாநாயகன் ஹார்டி (ஷாருக் கான்) முன்னாள் ராணுவ வீரராக இருந்த ஷாருக்கான் மன்னுவின் மேல் காதல்கொள்வதால், அவள் லண்டன் செல்லும் ஆசையை நிறைவேற்ற முடிவுசெய்கிறான். பல்வேறு சவால்களுக்குப் பிறகு டங்கியாக லண்டனுக்கு செல்ல முடிவுசெய்கிறார்கள். இந்த நான்கு பேர் லண்டன் சென்றார்களா. அவர்களின் லட்சியம் நிறைவேறியதா. இந்த பயணத்தில் அவர்கள் இழந்தது என்ன என்பதே டங்கி படத்தின் கதை.


 நகைச்சுவை ஓவர்லோடட்..




டங்கி படத்தின் மிகப்பெரிய பலம் என்றால் படத்தின் முதல் பாதி முழுவதும் நிறைந்திருக்கும்  நகைச்சுவை காட்சிகள். ஆங்கிலம் தெரிந்தால் தான் லண்டன் போக முடியும் என்று ஆங்கிலம் கற்றுக்கொள்ள முயற்சிக்கும் காட்சிகள். லண்டன் செல்ல இவர்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சிகள் என முதல் பாதி முழுவதும்  காமிக் புத்தகம் படிக்கும் எளிய நகைச்சுவைகள் படத்தில் நிறைந்திருக்கின்றன. 


சிறிதுநேரம் மட்டுமே வரும் விக்கி கெளஷலின் கதாபாத்திரம்  ஒட்டுமொத்த படத்தையும் தாங்கிச் செல்வதற்கான காரணமாக அமையும் அளவிற்கு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது. 


எங்கு சொதப்பினார்கள்?


இயக்குநர் ராஜ்குமார் ஹிரானியின் பி கே படம் ஒரே நேரத்தில் நகைச்சுவையாகவும் அதே நேரத்தில் அது பேசிய அரசியலும் பார்வையாளர்களை கவர்ந்திருந்தது, ஆனால் நகைச்சுவைக் காட்சிகள் முழுவதும் பார்வையாளர்களை உற்சாகமாக வைத்திருக்கும் டங்கி படம் இரண்டாம் பாதியில் ஒரு சீரியஸான திருப்பத்தை எடுக்கிறது. சட்டவிரோதமாக லண்டன் செல்லும் இவர்கள் செல்லும் வழியில் எதிர்கொள்ளும் சவால்கள் எல்லாம் எதார்த்தமாகவோ அல்லது பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தாமல் கடந்து சென்றுவிடுகின்றன. 


போரினால், பஞ்சத்தால், வேலை வாய்ப்பு இல்லாமல் என பல்வேறு காரணங்களுக்காக மக்கள் ஒரு நாட்டை விட்டு இன்னொரு நாட்டிற்கு புலம்பெயரும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். சட்டரீதியாகவும் சட்டவிரோதமனாகவும் . இவ்வளவு தீவிரமான காரணங்கள் இருந்து டங்கி படத்தின் கதாபாத்திரங்களுக்கு இருக்கும் காரணங்கள் தட்டையானவையாக தெரிகின்றன.


மேலும் புலம்பெயர்வில் இருக்கும் வலிகள். ஒரு நாடு அகதிகளை அனுமதிப்பதில் இருக்கும் சிக்கல்கள், காலணியாதிக்கத்தின் அரசியல் என எதிலும் ஆழமாக செல்லாமல் வெறும் மனிதநேயம், தேசப்பற்று போன்ற உணர்ச்சி மேலிடல்களை மற்றுமே அடிப்படையாக கையாண்டிருப்பது டங்கி படத்தை சராசரிக்கும் குறைவான அனுபவமாக மாற்றுகிறது.


பிரித்தானிய இயக்குநர் கென் லோச் அவர்களின் படங்களைப் பார்த்தால் இங்கிலாந்தில் உள்நாட்டு குடிமக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் பற்றிய ஒரு தெளிவான சித்திரம் நமக்கு கிடைக்கும். பறவைகள் சுதந்திரமாக நாடு, எல்லை கடந்து செல்வதை மனிதர்களுடன் ஒப்பிட்டு பார்ப்பதில் இருந்து முதலில் நாம் வெளிவர வேண்டும்.


ரொமான்ஸில் கலக்கும் ஷாருக்கான்


ஷாருக்கான் மற்றும் டாப்ஸி ஆகிய இருவருக்கும் இடையிலான காதல் ஒன்றே டங்கி படத்தை கொஞ்சமேனும் உயிர்ப்புடன் வைத்திருக்கிறது. இருவருக்கும் இடையில் கெமிஸ்ட்ரி சிறப்பாக வொர்க் அவுட் ஆகியிருக்கின்றன. அதிலும் ஒரு ட்விஸ்ட் வைத்திருக்கிறார் இயக்குநர். ஷாருக்கான் உணர்ச்சிவசமான காட்சிகள் எப்போதும் போல் அசால்ட் செய்கிறார்.


ஹாட்ரிக் வெற்றியா ?


ஷாருக் கான் நடிப்பில் இந்த ஆண்டு வெளியான பதான் , மற்றும் ஜவான்  ஆகிய இரண்டு படங்கள் முழுக்க முழுக்க ஆக்‌ஷன் காட்சிகள் நிறைந்து கமர்ஷியலான ஒரு வெற்றியை பதிவு செய்தன. அதுபோல், டங்கி படம் வெற்றி பெறுகிறதா? என்பதை பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும்.