தமிழ் சினிமாவின் பல ஆண்டு கனவு 'பொன்னியின் செல்வன்' திரைப்படம். இத்தனை ஆண்டு கால கனவு நனவானது இயக்குனர் மணிரத்னம் மூலமே. கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை அடிப்படையாக கொண்டு அதே பெயரில் இரண்டு பாகங்களாக உருவான இப்படத்தின் முதல் பாகம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 30ம் தேதி வெளியானது. அமோகமான வரவேற்பை பெற்று 500 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை படைத்த அப்படத்தின் இரண்டாம் பாகம் வரும் ஏப்ரல் மாதம் 28ம் தேதி வெளியாக உள்ளது.
இரண்டாம் பாகத்திற்கு வெயிட்டிங்:
ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஐஸ்வர்யா லக்ஷ்மி, பிரகாஷ்ராஜ், சரத்குமார், பார்த்திபன், ரகுமான், ஜெயராம், விக்ரம் பிரபு என மிக பெரிய திரை பட்டாளம் நடித்துள்ள இப்படத்திற்கு இசையமைத்து இருந்தார் ஏ.ஆர். ரஹ்மான். பொன்னியின் செல்வன் முதல் பாகத்தின் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் பாடல்களாக வெற்றிபெற்றதை தொடர்ந்து பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தின் பாடல்களுக்காக மிகவும் ஆவலுடன் காத்து கொண்டு இருக்கிறார்கள் திரை ரசிகர்கள்.
PS 2 ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் தேதி :
ரசிகர்கள் உற்சாகமடையும் வகையில் பொன்னியின் செல்வன் படக்குழு ஒரு சந்தோஷமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடலான 'அக நக' பாடல் வரும் மார்ச் 20ம் தேதியன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என்ற அதிகாரபூர்வமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது படக்குழு. ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ள இப்பாடலின் வரிகளை இளங்கோ கிருஷ்ணன் எழுத அதற்கு குரல் கொடுத்துள்ளார் சக்தி ஸ்ரீ கோபாலன். இப்பாடலின் போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளதில் கார்த்தியின் கண்கள் துணியால் கட்டப்பட்ட நிலையில் மண்டியிட்டு அமர்ந்து இருப்பது போலவும் திரிஷா கையில் வாளுடன் கம்பீரமாக நிற்பது போலவும் உள்ளது. ட்விட்டரில் இந்த போஸ்ட்டரை வெளியிட்டுள்ள மெட்ராஸ் டாக்கீஸ் அக நக பாடலின் மாயாஜாலத்தை அனுபவிக்க தயாராகுங்கள்! அதுவரை காத்திருங்கள் !!! என பதிவிட்டுள்ளார்.
நன்றி சொல்லும் ரசிகர்கள் :
அக நக பாடல் வெளியாவதற்கு முன்பே அதன் பிஜிஎம் சோசியல் மீடியாவில் மிகவும் பிரபலமாகி வரவேற்பை பெற்று விட்டது. ஒரே சமயத்தில் இப்பாடல் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம் என அனைத்து மொழிகளிலும் வெளியாக உள்ளது. பல நாட்களாக எப்போ எப்போ என காத்திருந்த ரசிகர்களுக்கு இப்போ இப்போ என அறிவிப்பை வெளியிட்ட படக்குழுவிற்கு நன்றிகளை தெரிவித்து வருகின்றனர் ரசிகர்கள்.