நயன்தாரா, வினய், சத்யராஜ், அனுபம் கெர் உள்ளிட்டோரது நடிப்பில், ‘மாயா’  ‘கேம் ஓவர்’  ‘இறவாக்காலம்’ உள்ளிட்ட படங்களை இயக்கி கவனம் ஈர்த்த இயக்குநர் அஸ்வின் சரவணன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் ‘கனெக்ட்’. வருகிற டிசம்பர் 22 ஆம் வெளியாக இருக்கும் இந்தப்படத்தின் விமர்சனம் இதோ!


 


 


                                     


கதையின் கரு:


ஜோசப் (வினய்) சூசன்( நயன்தாரா) தம்பதிக்கு ஒரே மகள் அன்னா; சூசனின் அப்பா அர்துர் சாமுவேல் ( சத்யராஜ்). கிறிஸ்துவ குடும்பம். வாழ்கை நன்றாக சென்று கொண்டிருந்த நேரத்தில், கொரோனா அலைத்தொற்று வேகமாக பரவ ஆரம்பிக்கிறது. இந்த நிலையில் மருத்துவரான ஜோசப் மருத்துவமனையே கதி என்று கிடந்து நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்துக்கொண்டிருக்கிறார். ஒரு கட்டத்தில் அவரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இறந்து போய்விடுகிறார்.


அப்பாவின் மீது அளவுகடந்த பாசம் கொண்ட அன்னா, இறந்து போன அப்பாவிடம் பேச வேண்டும் என்று எண்ணி, சூனியக்காரி ஒருவரின் உதவியோடு அவரோடு பேச முயற்சிக்கிறார். சூனியக்காரி விரிக்கும் அந்த மாயவலையில், பேய் ஒன்று அன்னாவின் உடலுக்குள் சென்றுவிடுகிறது; ஒரு கட்டத்தில் இந்த விசயம் சாமுவேலுக்கும், சூசனுக்கும் தெரியவர, அந்த பேயை விரட்ட அவர்கள் எடுக்கும் முயற்சிகளை த்ரில்லிங் அனுபவத்தோடு சொன்னால் அதுதான் கனெக்ட் படத்தின் கதை!




சூசன் கதாபாத்திரத்திற்கு கனகச்சிதமாக பொருந்தியிருக்கிறார் நடிகை நயன்தாரா; அலுவலக ரீதியிலான ஆளுமை சம்பந்தப்பட்ட காட்சியாகட்டும், பேயை கண்டு நடுங்கும் காட்சியாகட்டும், குழந்தையை எப்படியாவது காப்பாற்றியே ஆகவேண்டும் என்று ஒரு தாயாக பரிதவிக்கும் காட்சியாகட்டும், அனைத்து இடங்களிலும் நயன் தான் ஒரு சிறந்த நடிகை என்பதை மீண்டும் நிரூபித்து இருக்கிறார்.


வினய்க்கு காட்சிகள் மிக கொஞ்சம் நன்றாலும், மனதில் நிற்கிறார். அவரின் வசன உச்சரிப்பு நெருடலை தருகிறது. நயனின் அப்பாவாக சத்யராஜ்; பேத்திக்காக பரிதவித்து அவளை காப்பாற்ற அவர் எடுக்கும் முயற்சிகள் அவர் ஏற்று நடித்திருக்கும் கதாபாத்திரத்தின் மீது அனுதாபத்தை ஏற்படுத்துகின்றன; நயனின் மகளாக வரும் அன்னாவின் நடிப்பு இருளில் மறைந்து விட்டது. பாதிரியராக வரும் அனுபம் கெர் முதிர்ச்சியான நடிப்பை கொடுத்திருக்கிறார்.


மிரட்டிய பின்னணி இசை:  


மாயா, கேம் ஓவர் உள்ளிட்ட படங்களில் கொடுத்த த்ரில்லிங் அனுபவத்தை இதிலும் கொடுக்க முயற்சித்திருக்கிறார் இயக்குநர் அஸ்வின் சரவணன். அது அவருக்கு ஓரளவு நன்றாகவே கை கூடியிருக்கிறது; பேயை பார்வையாளனுக்கு காட்சிப்படுத்த அவர் திரைக்கதையில் செய்த விஷயங்கள், நமது இதயத்துடிப்பை கொஞ்சம் பதம் பார்க்கத்தான் செய்கிறது; இவையெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும், படத்தின் ஆக அச்சாணியாக இருப்பது படத்தின் ஒளிப்பதிவும், பின்னணி இசையுதான். 


சுற்றியும் கொரோனா.. அப்படிப்பட்ட இக்கட்டானா சூழ்நிலையில் வீடியோ கால் கேமாரா ஐடியாவை மட்டும் வைத்துக்கொண்டு, தனது கேமாராவில் மணிகண்டன் கிருஷ்ணமாச்சாரி செய்திருக்கும் மேஜிக் மிரட்டுகிறது. அதே போல படத்தின் பின்னணி இசை, காட்சிகள் 20 சதவீதம் தன் பங்கை செய்தால், மீதம் 80 சதவீத பங்கை தனது இசையால் ப்ரித்வி சந்திரசேகர் கொடுத்து புருவங்களை விரிய வைத்திருக்கிறார்;


அவரின் உழைப்புக்கு தனி பாராட்டுகள்; அதே போல அனுவர்தனின் ஆடைகளும் கவனம் ஈர்க்கின்றன. எல்லாம் ஓகே என்றாலும், படம் கொரோனா காலத்தில் நடப்பதால் கனெக்ட் படத்தை நம்மால் ஒரு தியேட்டர் படமாக பார்க்க முடியாமல், ஓடிடி படமாகவே பார்க்கத்தோன்றுகிறது; அதே போல  படத்தின் சஸ்பென்ஸ் ஒரு முறை உடைந்து போனால், மீண்டும் படத்தை பார்க்கும் போது நமக்கு பெரிய சலிப்பு வரும் படியான காட்சிகளே இருக்கின்றன. ஆகையால் கனெக்ட்டை அதன் பின்னணி இசைக்காக வேண்டுமென்றால் ஒரு முறை தியேட்டரில் பார்க்கலாம்.