Azhagiya Kanne Review in Tamil:

  எஸ்தெல் எண்டர்டெய்னர் நிறுவனம் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ஆர்.விஜயகுமார் இயக்கியுள்ள படம் ‘அழகிய கண்ணே’. இந்த படத்தில் ஹீரோவாக பட்டிமன்ற பேச்சாளர் திண்டுக்கல் ஐ.லியோனியின் மகன் லியோ சிவக்குமார், ஹீரோயினாக சஞ்சிதா ஷெட்டி, சிறப்பு தோற்றத்தில் இயக்குநர் பிரபு சாலமன், நடிகர் விஜய் சேதுபதி என பலரும் நடித்துள்ளனர். என்.ஆர்.ரகுநந்தன் படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த படத்தின் விமர்சனத்தை காணலாம். 


கதையின் கரு


திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த லியோ சிவக்குமாருக்கு சினிமாவில் இயக்குநராக வேண்டும் என்ற ஆசையாக உள்ளது. ஊரில் புரட்சி நாடகங்களை நடத்தும் அவர் மீது எதிர் வீட்டு பெண்ணான சஞ்சிதா ஷெட்டி காதல் கொள்கிறார். இயக்குநர் பிரபு சாலமனிடம் உதவி இயக்குநராக சேர லியோ சிவக்குமாரும், வேலை காரணமாக சஞ்சிதாவும் சென்னைக்கு வருகின்றனர். 


ஒரு கட்டத்தில் எதிர்ப்புகளுக்கு இடையே இருவரும் திருமணம் செய்துக் கொள்கின்றனர். குழந்தையும் பிறக்கிறது. ஆனால் லியோ இயக்குநராக முயற்சி செய்யும் நிலையில் குடும்பச்சூழல் காரணமாக குழந்தையை அருகில் இருந்து சஞ்சிதாவால் கவனிக்க முடியாமல் போகிறது. எதிர்பார்த்தபடி லியோ இயக்குநர் ஆனாரா? சஞ்சிதாவின் குடும்ப பொறுப்பு ஆசை நிறைவேறியதா? என்பதை சிந்திக்க கூடிய காட்சிகளுடன் ‘அழகிய கண்ணே’ படம் எடுத்துரைக்கிறது. 


நடிப்பு எப்படி?


லியோ சிவக்குமார், சஞ்சிதா, டான்ஸர் சுஜாதா ஆகியோர் தங்களுக்கு கொடுக்கப்பட்ட கேரக்டரை சிறப்பாக செய்துள்ளனர். ஆனால் லியோ சிவக்குமாருக்கு இன்னும் நடிப்பு பயிற்சி வேண்டும். இதேபோல் சினிமாவில் இயக்குநரின் பணியை பிரபு சாலமன் வழியே காட்டியிருப்பது பாராட்டைப் பெறுகிறது. மற்றபடி படத்தில் எந்த கேரக்டரும் பெரிய அளவில் இல்லை. ஒரு காட்சியில் விஜய் சேதுபதி நடித்துள்ளார். 


படம் எப்படி?


தமிழ் சினிமா பார்த்து பார்த்து பழகிய கதை தான் இந்த படத்திலும் காட்டப்பட்டுள்ளது. ஆனால் பணிச்சூழலால் இன்றைய சூழலில் பெருகி வரும் குழந்தை வளர்ப்பு முறை பேசியிருப்பது சிறப்பு. அதேபோல் யூகிக்க கூடிய திரைக்கதையால் படம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாமல் போகிறது. இதேபோல் கதையில் எதிர்பாராத திருப்பமாக காட்டப்பட்டிருக்கும் வில்லன் தொடர்பான காட்சிகளும் பெரிய அளவில் ஈர்க்கவில்லை.


என்.ஆர்.ரகுநந்தன் இசையில் பாடல்கள் கேட்கும் வகையில் இருந்தாலும், பின்னணி இசையும் அதற்கேற்ப ஒளிப்பதிவும் பொருந்தி போகிறது. ஆனால் பழகிப்போன திரைக்கதையால் அழகிய கண்ணே என படத்தை பெரிய அளவில் கொஞ்ச (பாராட்ட) முடியாமல் போகிறது.