சின்னத்திரையில் அறிமுகமாகி வெள்ளித்திரையிலும் ரசிகர்களை கவர்ந்து வரும் இளம் நடிகர் கவின் இன்று தனது 33வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். 


சின்னத்திரை அறிமுகம்


சின்னத்திரையில் பிரபலமான பலரும், ப்ரோமோஷன் பெற்று வெள்ளித்திரைக்கு வந்தாலும் அவர் பெரிய அளவில் ரசிகர்களை கவர்வதில்லை. இதில் சிவகார்த்திகேயன் அனைவருக்கும் முன்னோடியாக இருக்க, அவருக்கு அடுத்த இடத்தில் யார் என கேட்டால் ரசிகர்கள் சொல்லும் பதில் ‘கவின்’. 


1990 ஆம் ஆண்டு ஜூன் 22 ஆம் தேதி பிறந்த கவின், கல்லூரி காலங்களில் ஊடகத்துறையில் இருந்த ஆர்வத்தின் காரணமாக குறும்படங்கள் நடிக்க தொடங்கினார். பின்னர் நடிப்பை முறையாக கற்றுக் கொள்ள வேண்டும் என கூத்துப்பட்டறையில் சேர்ந்து மூன்று மாதங்கள் பயிற்சி எடுத்துள்ளார். இதனையடுத்து பல இடங்களில் வாய்ப்பு தேடிய அவருக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘கனா காணும் காலங்கள்’ முகவரி கொடுத்தது. 2011 ஆம் ஆண்டு அந்த சீரியலில் ‘சிவா’ என்னும் கேரக்டரில் நடிகராக அறிமுகமானார்.


திருப்புமுனையை ஏற்படுத்திய சரவணன் மீனாட்சி 


இதனைத் தொடர்ந்து விஜய் டிவியின் ஆல்டைம் பேவரைட் சீரியல்களில் ஒன்றான சரவணன் மீனாட்சியின் முதல் சீசனில் முருகன் என்னும் கேரக்டரிலும், 2வது சீசனில் வேட்டையன் என்னும் கேரக்டரில் ஹீரோவாகவும் நடித்தார். இந்த சீரியல் அவருக்கு திருப்புமுனையாக அமைந்தது. அதேசமயம் தாயுமானவன் என்னும் சீரியலிலும் கவின் நடித்திருந்தார். மேலும் விஜய் டிவியின் சில நிகழ்ச்சிகளுக்கு தொகுப்பாளராகவும் பணியாற்றினார். 


இந்த நிலையில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3வது சீசனில் கலந்து கொண்டார். இதுவரை ஒளிபரப்பான சீசன்களில் இதுதான் ரசிகர்களின் ஃபேவரைட் நிகழ்ச்சியாகும். இதில் கவின், லாஸ்லியா இருவருமிடையே புரிதல் ஏற்பட்டு அது காதலாக மாறிய தருணத்தில் அந்த உறவு முடிவுக்கு வந்தது. மேலும் கவின், லாஸ்லியா, முகின், சாண்டி மாஸ்டர், தர்ஷன் ஆகியோர் கூட்டணி வேற லெவலில் இருந்தது. 


 பெரிய திரையில் எண்ட்ரீ


கவின் ஏற்கனவே 2012 ஆம் ஆண்டு பீட்சா, 2015 ஆம் ஆண்டு இன்று நேற்று நாளை, 2017 ஆம் ஆண்டு சத்ரியன் ஆகிய படங்கள் சிறு வேடங்களில் நடித்திருந்தார். ஆனால் பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பின் ஹீரோவாக நடிக்கும் வாய்ப்பு அமைந்தது. 2019 ஆம் ஆண்டு வெளியான ‘நட்புன்னா என்னன்னு தெரியுமா?’ படத்தில் முதன்மை கேரக்டரில் நடித்தார். தொடர்ந்து கொரோனா காலக்கட்டத்தில் ஓடிடியில் வெளியான ’லிஃப்ட்’ படத்தின் மூலம் ஹீரோவானார். பின்னர் சமீபத்தில் ‘டாடா’ படத்தில் நடித்தார். இந்த படம் கவினுக்கு ரசிகர்கள், பேமிலி ஆடியன்ஸ் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுக் கொடுத்துள்ளது. இதனை அவர் கெட்டியாக பிடித்துக் கொண்டு சினிமாவில் மென்மேலும் வளர வேண்டும் என்பதே ரசிகர்களின் எண்ணமாக உள்ளது.


இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கவின்..!