Aquaman 2 Review: பெரும் போராட்டங்களுக்குப் பின் வெளியான அக்வாமேன் அண்ட் தி லாஸ்ட் கிங்டம் திரைப்படம் எப்படி இருக்கிறது என்பதை இந்த விமர்சனத்தில் அறியலாம்.


டிசியின் அக்வாமேன் - 2 திரைப்படத்தின் போராட்டம்:


இன்றோ, நாளையோ என ஊசலாடிக் கொண்டிருந்த டிசி எக்ஸ்டென்டட் சினிமாடிக் யூனிவர்ஸை, மொத்தமாக புதியதாக கட்டமைக்க உள்ளதாக தயாரிப்பு நிறுவனமான வார்னர் ப்ரோஸ் அறிவித்துள்ளது. எனவே, எல்லாமே புதியதாக தொடங்க இருக்கும்போது பழைய கதைக்களத்தை பின்பற்றி உருவாகும் படங்களை பார்க்க ரசிகர்கள் ஆர்வம் காட்டவில்லை. இதன் காரணமாக தான்  நடப்பாண்டில் வெளியான ஷசாம், பிளாஷ் மற்றும் ப்ளூ பீட்டல் ஆகிய மூன்று டிசி படங்களுமே படுதோல்வியை சந்தித்தன.


இதனிடையே,  பல்வேறு கட்ட குழப்பங்கள், காட்சிகள் நீக்கம், கதையில் அடுத்தடுத்து மாற்றம் மற்றும் ஆம்பர்ஹெர்ட் வழக்கு உள்ளிட்ட பெரும் சிக்கல்களுக்கு பிறகு, ஜேம்ஸ் வான் இயக்கத்திலான அக்வாமேன் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் இறுதி வடிவம் பெற்றது. ஓராண்டில் படப்பிடிப்பு முடிந்து இரண்டு ஆண்டுகள் ரீ-ஷூட் நடைபெற்ற அக்வாமேன் படத்தின் இரண்டாம் பாகம் இன்று வெளியானது. படத்தின் பட்ஜெட் 215 மில்லியன் டாலர்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன. 2018ல் வெளியான முதல் பாகம் மொத்தமாக ஒரு பில்லியன் அமெரிக்க டாலர்களை வசூலித்த நிலையில், இரண்டாவது பாகம் அதில் பாதியை கூட வசூலிக்காது என்ற கணிப்புகளுடன் தான் இன்று திரைக்கே வந்தது.


அக்வாமேன் - 2 கதை என்ன?


இயற்கையை மாசுபடுத்தி அட்லாண்டிஸ் ராஜ்ஜியத்தையே அழிக்க முயற்சிக்கும் தனது சகோதரர் கோர்டாக்ஸை, மன்னர் அட்லான் மந்திரசக்தியை பயன்படுத்தி பனிப்பாறைகளுக்குள் சிறைபிடித்து இருப்பார். இந்நிலையில், முதல் பாகத்தில் தனது தந்தையை கொன்ற அக்வாமேனை பழிவாங்க தேவையான தொழில்நுட்பத்தை தேடிக்கொண்டிருக்கும் பிளாக் மேண்டாவிற்கு, கோர்டாக்ஸின் மந்திர கோல்  கிடைக்கிறது. அதன் மூலம், பிளாக் மேண்டீஸை பயன்படுத்தி, கோர்டாக்ஸ் விடுபட்டாரா? அட்லாண்டிஸை அழிக்க நினைத்த அவரது முயற்சியை நாயகன் ஆர்தர் கர்ரி தடுத்தாரா? என்பதே அக்வாமேன் தி லாஸ்ட் கிங்டம் படத்தின் மீதிக்கதை.


படம் எப்படி இருக்கு?


ஏற்கனவே சொன்னது போல 2021ம் ஆண்டு தொடங்கிய அக்வாமேன்-2 படத்தின் படப்பிடிப்பு அந்த ஆண்டு டிசம்பர் மாதமே முடிந்துவிட்டது. ஆனால், எதிர்கால படங்களுக்கு ஏற்ப கதைகளை மாற்ற நினைத்து முதலில் பென் அஃப்லெக் பேட்மேன், பின்பு மைக்கேல் கீட்டன் பேட்மேன் என பல்வேறு நடிகர்களை பயன்படுத்தி, 2022 தொடங்கி 2023ம் ஆண்டு வரையில் தொடர்ந்து ரீ-ஷூட் நடந்துகொண்டே இருந்தது. இந்நிலையில் தான் மொத்த டிசி எக்ஸ்டெண்டட் யூனிவெர்ஸையும் முடித்துக்கொள்வதாக, ஜேம்ஸ்கன் அறிவித்தார்.


இதன் பிறகு பேட்மேன் தொடர்பான காட்சிகள் அனைத்தையும் நீக்கிவிட்டு மீதமுள்ள காட்சிகள எடிட் செய்து தான், அக்வாமேன் 2 என்ற படத்தையே படக்குழு உருவாக்கியுள்ளது. இதனால் தான் எந்தவொரு கதாபாத்திரத்துடனும் படம் பார்க்கும் நம்மால் ஒட்டவே முடியவில்லை. ஓசியன் மாஸ்டர் கதாபாத்திரத்திற்கு மட்டுமே திரைக்கதையில் ஓரளவிற்கு மெனக்கெட்டு இருப்பதை உணர முடிகிறது. மற்றபடி அக்வாமேன் கதாபாத்திரத்தில் நடித்த ஜேசன் மாமோ உட்பட மெரா, பிளாக் மாண்டிஸ் ஆகிய எந்த ஒரு கதாபாத்திரத்திற்கும் திரைக்கதையில் முக்கியத்துவம் என்பதே இல்லை. 


படத்தின் பாசிட்டிவ்:


படத்தின் பாசிட்டிவ் பிரிவில் பிரமாண்ட கிராபிக்ஸ், அக்வாமேன் - ஓசியன் மாஸ்டர் இடையேயான சகோதரர் உறவு மேம்படுதல் மற்றும் ஆங்கங்கே இடம்பெற்று இருக்கும் நகைச்சுவை காட்சிகள் ஆகியவற்றை கூறலாம். குறிப்பாக இந்த ஆண்டில் வெளியான டிசி படங்களான ஷசாம், தி ப்ளாஷ் மற்றும் ப்ளூ பீட்டல் ஆகிய மூன்று படங்களையும் விட, அக்வாமேன் 2 நன்றாக உள்ளது என நிச்சயம் கூறலாம். தாரளமாக இந்த படத்தை ஒருமுறை திரையில் பார்த்து சிரித்து பொழுது போக்கலாம்.


படத்தின் நெகட்டிவ்:


குறைகள் என்றால் பெரும் பட்டியல் நீளும். திரைக்கதைக்காக எந்த ஒரு உழைப்பையும் பார்க்க முடியவில்லை. எந்த ஒரு முக்கிய கதாபாத்திரமும் சரியாக கையாளப்படவில்லை என்பது மிகப்பெரிய பின்னடைவு. அடடே..! இந்த சண்டை காட்சி நன்றாக இருக்கும்போலவே என எண்ணி முடிப்பதற்குள், சண்டை காட்சி முடிந்துவிடுகிறது. கிளைமேக்ஸ் எல்லாம் பார்ப்பவர்கள், எங்கடா இங்கிருந்த கிளைமேக்ஸ் சண்டையையே காணோம் என்ற உணர்வை தான் தரும். குறிப்பாக இறுதிக்காட்சியை பார்க்கும்போது, இந்த வில்லனுக்கா இவ்வளவு பில்டப் கொடுத்தாங்க என எண்ண தோன்றுகிறது. மற்றபடி படம்பற்றி சொல்வதற்கு ஒன்றும் இல்லை.  ஒரு சில நிமிடங்களே வந்தாலும்,  ஆம்பர் ஹெர்ட்டை பார்க்கும்போதெல்லாம் ஜானி டெப் நினைவுக்கு வருவதை தவிர்க்க முடியவில்லை.


முடிந்தது DCEU, அடுத்து என்ன?


ஸ்னைடர் தொடங்கி வைத்த டிசி எக்ஸ்டென்டட் யூனிவெர்ஸ் ஆனது, 15வது படமான அக்வாமேன் -2 உடன் மொத்தமாக முடித்து வைக்கப்பட்டுள்ளது. இந்த படம் நிச்சயம் தோல்வியடைந்து விடும் என வெளியீட்டிற்கு முன்பே பல விமர்சகர்கள் கூறி இருந்தனர். அது உண்மையாகவும் வாய்ப்பு உள்ளது. இதையடுத்து 2025ம் ஆண்டு ஜேம்ஸ் கன் இயகத்தில் வெளியாக உள்ள சூப்பர்மேன் - லெகசி திரைப்படமாவது, டிசி சினிமாக்களுக்கு ஒரு புதிய வெற்றி பயணத்தை அமைத்து கொடுக்கும் என நம்புவோம்.


(பின்குறிப்பு: படத்தின் தொடக்கத்தில் அக்வாமேன் தனது கைக்குழந்தையை பராமரிக்க எதிர்கொள்ளும் சில இன்னல்கள், அனைத்து பெற்றோறின் மனநிலையையும் உணர்த்துகிறது. )