நமது தமிழ்நாடு அரசு எவ்வளவோ சோதனைகளை சந்தித்துக் கொண்டிருப்பதாக நடிகர் வடிவேலு நிகழ்ச்சி ஒன்றில் பேசியுள்ளார். 


மாரி செல்வராஜ்:


கடந்த டிசம்பர் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் தென்மாவட்டங்கள் கடுமையான கனமழை மற்றும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட வெள்ள பாதிப்பை சந்தித்தது. இதில் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனிடையே தன்னுடைய ஊரை சுற்றி வெள்ளத்தில் சிக்கிய மக்களை மீட்டும், அவர்களுக்கு தேவையான நிவாரண உதவிகளை செய்தும் இயக்குநர் மாரி செல்வராஜ் தீவிரமாக களப்பணியாற்றி வருகிறார். 


அவரின் பணி ஒரு பக்கம் பாராட்டைப் பெற்றாலும் இன்னொரு பக்கம் கடுமையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், ‘களத்தில் இறங்கி பார்த்தால் தான் எல்லாம் தெரியும்’ என்கிற ரீதியில் மாரி செல்வராஜ் பதிலளித்தார். மேலும் அவருக்கு ஆதரவாக விசிக எம்.எல்.ஏ. ஆளூர் ஷாநவாஸ் உள்ளிட்ட பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் வடிவேலும் தனது ஆதரவு கருத்தை தெரிவித்துள்ளார். 


மாரி செல்வராஜூக்கு வடிவேலு ஆதரவு:


ஒரு நிகழ்ச்சி ஒன்றில் பேசிய வடிவேலு, “இன்னைக்கு நம்ம அரசாங்கம் எவ்வளவோ சோதனைகளை சந்தித்து கொண்டிருக்கிறது. சென்னையில் புயல் வந்துச்சு. அதை பெரிய அரசியல் ஆக்கிட்டாங்க. ஆனால் தென் மாவட்டங்களில் புயல் வந்துச்சு. அங்கெல்லாம் அரசியல் பண்ண முடியாது. ஏனென்றால் தண்ணி பிச்சிகிட்டு போகுது. எங்க அரசியல் ஆக்க முடியும். ஏனென்றால் எவன் எங்க இருக்கான்னே தெரியல. இதே அரசியல அங்க போய் பண்ண முடியுமா?.


 முடியல,அதான் கத்துறான். அதுல ஒருத்தன் சொல்றான், அவன் ஏன் டைரக்டர் (மாரி செல்வராஜ்) அங்க போறான்னு கேக்குறான். அவனோட ஊருடா அது. அந்த ஊருக்குள்ள பள்ளம் எங்க இருக்கு, மேடு எங்க இருக்கு எல்லாமே அவனுக்கு தானே தெரியும். அங்க போகக்கூடாதா? அவன் ஊர்ல அவன் போகாம வேற யாருடா போக முடியும். 


அதேபோல இன்னொருத்தன், ‘உதயநிதியை ஏன் அங்க அனுப்பி வைக்கிறாங்க’ன்னு கேக்குறான். உதயநிதி யாருடா? போணும்ன்ல. மக்களோட மக்களா நான் இருக்கேன், உங்களோட சேர்ந்து வாழுறேன். மக்களோடு இணைஞ்சு வேலை செய்யணும்னுல. இருக்குற அமைச்சர், எம்.எல்.ஏ.க்கள் எல்லாரும் தண்ணில இறங்கி நடந்து போகுற காட்சியெல்லாம் பார்க்குறோம். அந்த அளவுக்கு மேலே அவ்வளவு உத்தரவு போட்டு அது நடந்துகிட்டு இருக்குறதை பார்க்குறோம். இதை அரசியலாக பேச நான் விரும்பவில்லை. எல்லாருக்குமே பங்கு இருக்கு. ஒரு அணில் கொய்யாப்பழம் ஒன்றை வெள்ளத்தில் சிக்கியிருப்பவரிடம் கொடுத்தால் கூட அதற்கு நன்றி சொல்லணும். அது புண்ணியம் தான். 


மாரி செல்வராஜ் என்ன அமெரிக்காவில் இருந்தா வந்தான். அவன் ஏன் அங்க போனான்னு இவன் கேட்கான். தப்பு தப்பா பேசுறாங்க. நானும் அடக்கி அடக்கி பார்க்கிறேன். எனக்கு முடியல. மக்கள் படும் கஷ்டத்தை அரசு உணர்ந்து கொண்டே இருக்கிறது” என தெரிவித்துள்ளார்.