2024ம் ஆண்டை ஆவலுடன் அனைவரும் எதிர்பார்த்து காத்துகொண்டு இருக்கும் இந்த சூழலில் திரையுலகத்தினருக்கும் 2024ம் ஒரு நல்ல ஆரம்பமாகவே இருக்க போகிறது. அல்லு அர்ஜுனின் புஷ்பா 2 முதல் மம்மூட்டியின் யாத்ரா 2 வரை வெளியாக தயாராக காத்துகொண்டு இருக்கின்றன. 2023ம் ஆண்டு தென்னிந்திய சினிமாவுக்கு ஒரு பொற்காலமாக இருந்தது. ஏராளமான வெற்றிடங்கள், பிளாக் பஸ்டர் படங்கள், அறிமுக இயக்குநர்களின் படங்கள் என பல படங்கள் வெளியாகி இந்த ஆண்டு முழுவதும் ரசிகர்களை மகிழ்வித்தது. அதே போல 2024ம் ஆண்டிலும் பல நல்ல படைப்புகள் வெளியாக உள்ளன. 


அந்த வகையில் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கும் படங்களின் பட்டியலை பார்க்கலாம் :


 



புஷ்பா 2 :


சுகுமார் இயக்கத்தில் நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் 2021ம் ஆண்டு வெளியான பிளாக் பஸ்டர் ஹிட் திரைப்படம் 'புஷ்பா : தி ரைஸ்'. ராஷ்மிகா மந்தனா, ஜெகதீஷ் பிரதாப் பண்டாரி, ஃபகத் பாசில், சுனில் உள்ளிட்டோரின் நடிப்பில் வெளியான அப்படம் மாபெரும் வெற்றி படமாக பட்டையை கிளப்பியது. அதன் தொடர்ச்சியாக 'புஷ்பா : தி ரூல்' திரைப்படம் வெளியாக உள்ளது. 2024ம் ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் இப்படம் சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 15ம் தேதி வெளியாக உள்ளது. 


 



இந்தியன் 2 :


பிரமாண்ட இயக்குநர் ஷங்கர் - உலகநாயகன் கமல்ஹாசன் கூட்டணியில் 1997ம் ஆண்டு வெளியான பிளாக் பஸ்டர் ஹிட் திரைப்படம் 'இந்தியன்'. 27 ஆண்டுகளுக்கு பிறகு இப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகியுள்ளது. படப்பிடிப்பு தொடங்கிய நாள் முதல் ஏராளமான தடங்கல்களை தாண்டி தற்போது தான் இப்படம் வெளியாக உள்ளது. இப்படத்தில் ரகுல் ப்ரீத் சிங், காஜல் அகர்வால், பிரியா பவானி ஷங்கர், எஸ்.ஜே. சூர்யா, சித்தார்த் மற்றும் பலர் நடித்துள்ளனர். லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்திற்கு இசையமைத்துள்ளார் ராக் ஸ்டார் அனிருத். 


படத்தின் நீளத்தை கருதி இப்படம் இரண்டு பாகங்களாக வெளியாகும் என கூறப்படுகிறது. அந்த வகையில் முதல் பாகமானது ஏப்ரல் மாதத்தில் வெளியாகலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் அதிகாரபூர்வமான ரிலீஸ் தேதியை இதுவரையில் படக்குழு வெளியிடவில்லை. 


 



யாத்ரா 2 :


2019ம் ஆண்டு மெகா ஸ்டார் மம்மூட்டியின் நடிப்பில் ஆந்திர முன்னாள் முதல்வர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் வாழ்க்கையை மையமாக வைத்து வெளியான திரைப்படம் 'யாத்ரா'. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்ற இப்படத்தின் இரண்டாவது பாகம் தற்போது உருவாகியுள்ளது.  


இப்படம் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் அரசியல் வாழ்க்கையை தழுவி உருவாகியுள்ளது. மஹி வி ராகவ் இயக்கத்தில் ஒய்.எஸ்.ஆர் கேரக்டரில் மம்மூட்டி நடிக்க ஜெகன் மோகன் ரெட்டியாக நடிகர் ஜீவா நடித்துள்ளார். மேலும் சுஹாசினி மணிரத்னம், சச்சின் கேத்தகர், ஜெகபதி பாபு, அனுசூயா பரத்வாஜ் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இப்படம் வரும் பிப்ரவரி மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 


 



காந்தாரா சாப்டர் 1 :


ஹோம்பளே பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்திருந்த 'காந்தாரா' திரைப்படம் 2022ம் ஆண்டு கன்னடத்தில் வெளியாகி சக்கை போடு போட்டதை தெடர்ந்து தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு வெளியானது. அனைத்து மொழிகளிலும் நல்ல வரவேற்பை பெற்ற இப்படத்தின் அடுத்த பாகமாக 'காந்தாரா சாப்டர் 1' திரைப்படம் உருவாகியுள்ளது. இது 2022ம் ஆண்டு வெளியான படத்தின் முன்னுரையாகும். 


400 ஆண்டுகளுக்கு முன்னர் ஆட்சி செய்த கடம்ப வம்ச ஆட்சியின் பின்னணியில் உருவாக்கப்பட்டுள்ளது என கூறப்படுகிறது. இப்படம் அடுத்த ஆண்டு பிற்பகுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


 



தில்லு ஸ்கொயர் : 


2022ம் ஆண்டு விமல் கிருஷ்ணா இயக்கத்தில் வெளியான நகைச்சுவை கலந்த காமெடி கிரைம் திரைப்படம் 'டிஜே தில்லு'. இப்படத்தின் தொடர்ச்சியாக ' தில்லு ஸ்கொயர்' என்ற பெயரில் அதன் இரண்டாம் பாகத்தை இயக்கியுள்ளார் மல்லிக் ராம். அனுபமா பரமேஸ்வரன், முரளிதர் கவுட், பிரனீத் ரெட்டி கல்லம் மற்றும் பலர் நடித்துள்ள இப்படம் வரும் பிப்ரவரி 9ம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.   


எனவே 2024ம் ஆண்டை பல பிளாக்  பஸ்டர் படங்களை எதிர்பார்க்கலாம் என மிகுந்த ஆர்வத்தில் இருக்கிறார்கள் திரை ரசிகர்கள்.