யூடியூப் சேனல் மூலம் பிரபலமான பலரில் நடிகர் அன்பு தாசனும் ஒருவர். தஞ்சாவூரை சேர்ந்த இவர் அன்பு ஆல் வித் அன்பு, பள்ளிக்குத் திரும்புதல், பிரேக் அப் காதல் கதை, லைஃப் ஆஃப் இன்ஜினியரிங் போன்ற பல வீடியோக்களில்  நடித்ததன் மூலம் பிரபலமானார். அதன் மூலம் அவருக்கு திரைப்படங்களில் நடிக்கவும் வாய்ப்புகள் கிடைத்தது. 


திரைப்பட அறிமுகம் : 


ஹிப் ஹாப் தமிழா ஆதி நடிப்பில் வெளியான 'மீசைய முறுக்கு' திரைப்படத்தில் ஒரு துணை கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார். அதை தொடர்ந்து நயன்தாரா, ஜாக்குலின், யோகி பாபு நடிப்பில் வெளியான சூப்பர் ஹிட் திரைப்படமான 'கோலமாவு கோகிலா' படத்தில் நயன்தாராவின் தங்கை ஜாக்குலினை காதலிக்கும் கேரக்டராக ரசிகர்களின் கவனம் பெற்றார் அன்பு தாசன்.


தொடர்ந்து நடிகர் அன்பு தாசனுக்கு ஏராளமான பட வாய்ப்புகள் அமைந்தது. அதில் ஒன்று தான் பரிதாபங்கள் கோபி மற்றும் சுதாகர், யாஷிகா ஆனந்த் உள்ளிட்டோரின் நடிப்பில் வெளியான 'ஜாம்பி'. இப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.


 



'ஜோ' படத்தில் அன்பு தாசன் :


அதை தொடர்ந்து அறிமுக இயக்குநர் ஹரிஹரன் இயக்கத்தில் ரியோ ராஜ்  ஹீரோவாக நடித்து சமீபத்தில் வெளியான திரைப்படம் 'ஜோ'. மாளவிகா மனோஜ், பவ்யா ட்ரிகா,  சார்லி உள்ளிட்டோரின் நடிப்பில் வெளியான இப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிகர் அன்பு தாசன் நடித்திருந்தார். 


காதல் கதையை மையமாக வைத்து வெளியாகியுள்ள இப்படம்  ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்படத்தில் நடித்த நடிகர் அன்பு தாசன் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்டு 'ஜோ' படம் அனுபவம் குறித்து பகிர்ந்து இருந்தார். 


அம்மாவோட ரியாக்ஷன் :


"படம் வெளியானதும் தஞ்சாவூருக்கு போய் என்னோட அப்பா அம்மா எல்லாரையும் தியேட்டருல போய் படம் பார்ப்பதற்காக கூட்டிட்டு போனேன். அங்க படம் பார்த்தவங்களுக்கு தெரியும்ல நான் தான் அதில் நடிச்சு இருந்தேன்னு. அவர்கள் என்னோட செல்ஃபி எல்லாம் எடுத்துகிட்டாங்க. இதை எங்க அம்மா பார்த்துகிட்டே இருந்தாங்க. என் பிள்ளையோட எல்லாம் போட்டோ எடுத்துக்குறாங்களே என அவங்க பெருமை படுவாங்கனு நினச்சேன். ஆனா கிட்ட போன எவ்வளவு நேரமா போட்டோ எடுத்துகிட்டே இருப்ப. வா வீட்டுக்கு போகலாம்னு சொன்னாங்க. 



சரி வாங்கனு கூட்டிட்டு போனேன். வண்டியை நிறுத்துறதுக்கு முன்னாடியே நீ இங்கேயே நில்லு நான் இதோ வந்துடுறேன் என சொல்லிட்டு உள்ள போனாங்க. எல்லாருக்கும் என்ன தோணுமோ அதே தான் எனக்கும் தோணுச்சு. ஆரத்தி எடுக்க போறாங்க போலன்னு நினச்சேன். ஆனா உள்ள போய் ரேஷன் கார்டும் கட்ட பையையும் எடுத்துக்கிட்டு வந்து குடுத்து ரேஷனுக்கு போயிட்டு வர சொன்னாங்க. 


சரின்னு ரேஷனுக்கு போய் லைனில் நிக்கும் போது எனக்கு ஒரு போன் வந்தது. அட்லீ சார் அசிஸ்டன்ட் பேசுறேன், சார் உங்க கிட்ட பேசணும் என சொன்னாரு என அவர் கிட்ட போன் கொடுத்தாங்க. நீங்க ரொம்ப நல்லா நடிச்சு இருந்தீங்க... நாம ஒரு நாள் சேர்ந்து ஒர்க் பண்ணலாம் என சொன்னாரு. ரொம்ப தாங்க்ஸ் சார்னு சொல்லிட்டு போனை வைச்சா பின்னாடி நின்னிட்டுகிட்டு இருந்தவர் போ பா முன்னாடி போ அப்படினு சொல்றாரு. நான் யாரு? என்னோட யாரு பேசினாங்கன்னு தெரியுமா? என்னால சொல்லவும் முடியல..." என தனக்கு நடந்த சுவாரசியமான அனுபவத்தை பகிர்ந்து இருந்தார்.