தமிழ் சினிமாவில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக ’பருத்திவீரன்’ படம் தொடர்பான பல கருத்துகள், விவாதங்கள், அறிக்கைகள் என அடுத்தடுத்து சில நிகழ்வுகள் நடைபெற்று வருகிறது. 16 ஆண்டுகளுக்கு முன் வெளியான பருத்திவீரன் திரைப்படம் தொடர்பாக அந்த படத்தின் இயக்குநர் அமீரும், தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவும் மாறி மாறி ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டி வருகின்றனர்.


ஞானவேல் ராஜாவுக்கு கண்டனம்:


ஒருபடி மேலே போன தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தனியார் யூடியூப் சேனல் ஒன்றில், அமீரை திருடன் என்றும், வேலை தெரியாதவர், என் காசில் தொழிலை கற்றுகொண்டார் என தரக்குறைவாக விமர்சிக்க, அது மிகப்பெரிய அளவில் சர்ச்சையானது. இந்த பேட்டியை பார்த்து ஆத்திரமடைந்த ஒரு சில திரைபிரபலங்கள் ஞானவேல்ராஜாவுக்கு எதிராக கருத்துகளை பதிவிட தொடங்கினார். அதன்படி, சமுத்திரகனி, சசிகுமார், சுதா கொங்காரா, சினேகன், பொன்வண்ணன், பாரதிராஜா, கரு.பழனியப்பன் உள்ளிட்ட பலரும் ஞானவேல்ராஜாவை கண்டித்து அறிக்கை வெளியிட்டனர். 


இதனைத் தொடர்ந்து கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அறிக்கை ஒன்றை வெளியிட்ட ஞானவேல் ராஜா, அதில் அமீரை தரக்குறைவாக நேர்காணல் ஒன்றில் பேசியதற்காக வருத்தம் தெரிவிப்பதாக கூறியிருந்தார். ஆனால் பருத்திவீரன் படம் தொடர்பான பிரச்சினைகள் உண்மை என்கிற ரீதியில் அந்த அறிக்கை இருந்ததால் மீண்டும் சர்ச்சை எழுந்தது. ஞானவேல் வருத்தம் தெரிவித்த அறிக்கைக்கு, நடிகர் சசிகுமார், நடிகர் சமுத்திரக்கனி உள்ளிடோர் கடும் கண்டனம் தெரிவித்தனர். 


பாவத்தை சுமக்காதீர்கள்:


இந்தநிலையில் தற்போது இயக்குநர் சேரனும் இதுதொடர்பாக ஒரு கருத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில்,”@StudioGreen2, #Gnanavelraja படைப்பாளிகளின் பாவம் சுமக்காதீர்கள் அமீரின் நேர்மையையும், உண்மையும், நாணயமும் நான் நன்கறிந்தவன் என்ற முறையில் நீங்கள் சொன்ன வார்த்தை முற்றிலும் பொய்யானது. கண்டிக்கிறேன் உங்களை. கார்த்தியும் சூர்யாவும் உங்களை இந்நேரம் உம் தவறை கண்டித்திருக்கவேண்டும்.






அமீர்.. மந்தையில நின்னாலும் நீ வீரபாண்டி தேரு.... காலம் நூறு கடந்தாலும் பணமும் புகழும் கண்ணை மறைத்தாலும் அவர்களை உருவாக்கியவன் நீயே.. திமிராய் இரு.. நீயின்றி அவர்களில்லை என்ற கர்வம் மட்டும் போதும் .. உண்மையும் சத்தியமும் வெல்லும். காலம் எல்லா களங்கத்தையும் துடைக்கும்.” என தெரிவித்துள்ளார். 


அமீர் மீது ஞானவேல் ராஜா வைத்த குற்றச்சாட்டு என்ன..? 


’பருத்தி வீரன்’ திரைப்படம் ரிலீசானபோது கலைஞர் கருணாநிதி முதல் அனைவரும் பாராட்டி கொண்டாடி தீர்த்தனர். இந்த படம் வெளியாகி 16 ஆண்டுகள் கடந்த பின் இயக்கநர் அமீர் மற்றும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா என இருவரும் ஒருவர் மீது ஒருவர் கருத்தை கூறி இன்று அது பூதகரமாக வெடித்துள்ளது. கார்த்தி முதன் முதலில் கதாநாயகனாக நடித்த பருத்தி வீரன் படத்தை இயக்குநர் அமீர் இயக்க, இந்த படத்தை ஸ்டுடியோ கிரீன் சார்பில் ஞானவேல்ராஜா தயாரித்து இருந்தார். இந்த நிலையில் பருத்திவீரன் படத்தால் தனக்கு ரூ.2 கோடி வரை கடன் ஏற்பட்டதாக அமீர் கூறியிருந்த நிலையில், இதுக்கு பதிலளித்த ஞானவேல்ராஜா, பருத்திவீரனின் ஃபர்ஸ்ட் காப்பி அடிப்படையில் ரூ.2.76 கோடியில் பட்ஜெட் என சொல்லி விட்டு ரூ.4 கோடி வரை அமீர் செலவு செய்து தன்னை ஏமாற்றி விட்டதாக கூறியிருந்தார்.