Annaatthe Review: அண்ணன் தங்கை செண்டிமெண்ட் திரைப்படங்கள் தமிழ் சினிமாவுக்குப் புதிதல்ல. அந்த வரிசையில் வெளிவந்திருக்கிறது `அண்ணாத்த’. ரஜினிகாந்த் அண்ணனாகவும், கீர்த்தி சுரேஷ் தங்கையாகவும் பாசத்தைக் கொட்டி நடித்திருக்கிறார்கள். கொரோனா பெருந்தொற்று, ஊரடங்கு ஆகியவற்றைக் கடந்து 100 சதவிகித இருக்கைகளுடன் திரையரங்குகள் திறக்கப்பட்டு வெளியாகியுள்ளது `அண்ணாத்த’ படம். ஆனால் இத்தகைய இன்னல்களைக் கடந்து வெளியான பிறகும், பார்வையாளர்களைக் கவர்ந்ததா என்றால் `இல்லை’ என்றே பதிலளிக்க முடியும். 


சூரக்கோட்டை ஊராட்சி மன்றத் தலைவர் காளையன் (ரஜினிகாந்த்) பல எதிரிகளைக் கொண்டிருப்பவர். பெரிய பணக்காரரான அவர் தனது தங்கை தங்க மீனாட்சி (கீர்த்தி சுரேஷ்) மீது தன் உயிரையே வைத்திருப்பவர். வடநாட்டில் கல்வி முடித்து வரும் தங்க மீனாட்சிக்குத் திருமணம் செய்வதற்காக வரன் பார்த்து, தன் தங்கையின் திருமணத்திற்காகத் தயாராகிறார் காளையன். எனினும், தங்க மீனாட்சியோ அண்ணன் தேர்வுசெய்த மாப்பிள்ளையைப் பிடிக்காமல், தான் காதலித்த இளைஞனுடன் கொல்கத்தாவுக்குச் செல்கிறார். 6 மாதங்களுக்குப் பிறகு, கொல்கத்தாவில் தங்கையைச் சந்திக்கச் செல்கிறார் காளையன். ஆனால் அவரது தங்கையோ மிகப்பெரிய பிரச்னை ஒன்றில் சிக்கியிருக்க, தனது பிரச்னைகள் முடிந்த பிறகே அண்ணனைச் சந்திப்பேன் என்று வைராக்கியத்தோடு இருக்கிறார். இந்தப் பிரச்னைகளைக் காளையன் தன் தங்கைக்கே தெரியாமல் சரிசெய்ய முடிவெடுக்கிறார். தங்க மீனாட்சியின் பிரச்னைகளைக் காளையன் முடிவுக்குக் கொண்டு வந்தாரா, காளையனும், தங்க மீனாட்சியும் மீண்டும் இணைந்தார்களா என்று மீதிக்கதையில் பேசியிருக்கிறது `அண்ணாத்த’.



70 வயதைக் கடந்த பிறகும், ரஜினிகாந்தின் எனர்ஜி படம் முழுவதும் பிரமிக்க வைக்கிறது. ஆனால் அத்தகைய எனர்ஜிக்குப் பொருந்தாத திரைக்கதையால் படம் முழுவதுமே நொண்டியடிக்கிறது. தங்கை தங்க மீனாட்சியாக வரும் கீர்த்தி சுரேஷ் பல காட்சிகளில் ரஜினியின் மகளைப் போல இருக்கிறார். முதல் பாதி முழுவதும் சிரிப்பது, இரண்டாம் பாதி முழுவதும் அழுவது எனக் கீர்த்தி சுரேஷின் வேடத்திற்கான நடிப்பு இவற்றோரு நிற்கிறது. கதாநாயகியாக வரும் நயன்தாரா முதல் பாதியில் `விஸ்வாசம்’ படத்தின் தொடக்க காட்சிகளில் நடித்த அதே கதாபாத்திரமாக நடித்திருக்கிறார். இரண்டாம் பாதியில் முக்கிய வேடம் போல தோன்றினாலும், நயன்தாராவுக்கான முக்கியத்துவம் இந்தப் படத்தில் மிஸ்ஸிங். 


ஹீரோ தரப்பில் அண்ணனாகவும் தங்கையாகவும் ரஜினிகாந்த், கீர்த்தி சுரேஷ் ஆகியோர் இருக்க, வில்லன் தரப்பில் அண்ணனாகவும், தம்பியாகவும் ஜெகபதி பாபு, அபிமன்யு சிங் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். ரஜினியின் முறைப்பெண்களாக குஷ்பூ, மீனா ஆகியோர் இரண்டு பாடல்களில் மட்டும் வருகிறார்கள்; காமெடி என்ற பெயரில் எதையோ செய்கிறார்கள். போஸ்டரில் ரஜினி - குஷ்பூ - மீனா ஆகியோரின் ரீ-யூனியன் என்று விளம்பரப்படுத்துவதைத் தவிர இந்தக் கதாபாத்திரங்களுக்குப் படத்தில் எந்த வேலையும் இல்லை. சூரி, பாண்டியராஜன், லிவிங்ஸ்டன், சதீஷ், சத்யன் எனப் படத்தின் காமெடிக்காக ஒரு பட்டாளமே இருக்கும் போதும், காமெடியும் பெரிதாக வேலை செய்யாதது மிகப்பெரிய குறை. 



`திருப்பாச்சி’, `வேதாளம்’, `விஸ்வாசம்’, `நம்ம வீட்டுப் பிள்ளை’ ஆகிய திரைக்கதைகளில் இருந்து வெவ்வேறு பக்கங்களை உருவி ஒரே திரைக்கதையாக `அண்ணாத்த’ படத்தை எழுதி, அதில் சூப்பர்ஸ்டாரை டிக்டாக் செய்ய வைத்திருக்கிறார்கள். வில்லன்களாக வரும் அபிமன்யூ சிங், ஜெகபதி பாபு ஆகிய இருவரும் ரஜினியின் மாஸ் இமேஜுக்கு முன் மிகவும் பலவீனமாக இருப்பதும் படத்தின் சுவாரஸ்யத்தை வெகுவாக குறைத்திருக்கிறது. `விஸ்வாசம்’ படத்தில் மகளுக்குத் தெரியாமல் எதிரிகளிடம் இருந்து காப்பாற்றும் அப்பா செண்டிமெண்டை இதில் மாற்றி, அண்ணன் செண்டிமெண்டாக மாற்றியுள்ளார் இயக்குநர் சிவா. ஏற்கனவே பார்த்த அதே கான்செப்ட் என்பதால் அடுத்தடுத்த காட்சிகளையும் எளிதில் யூகிக்க முடிக்கிறது. மேலும், இந்தப் படத்தின் வசனங்கள் தொடக்கம் முதலே இதனை சூப்பர்ஸ்டார் நடித்த மெகா சீரியலாக மாற்றிவிடுகிறது.


துயரத்திலும், ஆனந்தத்திலும் ரஜினியோ, கீர்த்தியோ கண் கலங்கினால் டி.இமான் தனது பாடகர்களுடன் அங்கு வந்துவிடுகிறார். அவருக்குத் தேசிய விருதைப் பெற்று தந்த `கண்ணான கண்ணே’ மேஜிக்கை மீண்டும் வலிந்து திணிக்கும் அவரது முயற்சிகள் பலன் தராமல் போகின்றன. இசையமைப்பாளர் டி.இமானைப் போலவே, ஒளிப்பதிவாளர் வெற்றி, படத் தொகுப்பாளர் ரூபன் ஆகியோரும் அதே ஃபார்முலாவை நம்பி இறங்கி கோட்டை விட்டிருக்கிறார்கள்.



தன் உடல்நலக் குறைபாடு, படத்தில் பணியாற்றுவோருக்கான கோவிட் கால முன்னெச்சரிக்கைகள் என `அண்ணாத்த’ படத்திற்காக ரஜினிகாந்த் மேற்கொண்ட முயற்சிகளைக் கடந்து, படத்தில் முழுவதுமாகத் தனது அதீத உற்சாகத்துடன் படம் முழுவதும் வருகிறார். அவரது முந்தைய படமான `தர்பார்’ இதே போன்று மோசமான விமர்சனங்களைப் பெற்றது. `தர்பார்’ பரவாயில்லை என்ற எண்ணத்தை அளித்துவிடுகிறது `அண்ணாத்த’. இயக்குநர் சிவா இயக்கிய படங்களில் `விவேகம்’ படத்தின் வரிசையில் `அண்ணாத்த’ படமும் இருக்கும்.