19(1)(a) என்கிற படத்தின் தலைப்பை பார்க்கும் போதே தெரிந்திருக்கும் இது எது மாதிரியான படம் என்று. இந்திய அரசியலமைப்பில் பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்தை குறிக்கும் பிரிவை சுட்டிக்காட்டி வைக்கப்பட்டுள்ள தலைப்பு. யாருடைய கருத்து? யாருடைய பேச்சு?என்பதை வைத்து வலம் வருகிறது கதை.

கேரளாவின் இடுக்கியைச் சேர்ந்த தமிழரான விஜய் சேதுபதி, அந்மாநிலத்தின் புகழ் பெற்ற எழுத்தாளர்.

அவரின் கருத்துக்கள் பலருக்கு ஏற்கனவே தலைவலியை தந்திருப்பதால், அவரது அடுத்த படைப்பும் பரபரப்பாக பேசப்படுகிறது.



இதற்கிடையில், நகரில் தனது தந்தையோடு வசிக்கும் நித்யா மேனன், ஜெராக்ஸ் கடை நடத்தி வருகிறார். அவரது கடைக்கு வரும் விஜய் சேதுபதி, தான் எழுதியவற்றை கொடுத்து சில பிரதிகள் எடுக்க கூறுகிறார். அவர் யார், அவர் கொடுத்தது என்னவென்று தெரியாமல், அவற்றை வாங்கிக் கொள்கிறார் நித்யா.

பின்னர் வாங்கிக் கொள்வதாக அங்கிருந்து புறப்படும் விஜய் சேதுபதி, மறுநாள் சுட்டுக்கொல்லப்படுகிறார். இதை அறிந்த நித்யாவிற்கு பேரதிர்ச்சி. நேற்று வந்து சென்றவர், இன்று இல்லை. அவர் ஏன் கொலை செய்யப்பட்டார் என்கிற பரபரப்பான விவாதங்கள் சேனல்களில் சென்று கொண்டிருக்க, அவரது படைப்பு தான் அவரது கொலைக்கு காரணம் பரபரப்பான செய்திகள் வருகிறது. 

அப்படி என்ன அவர் எழுதினார் என்பதை அறிய மாநிலமே எதிர்பார்க்கிறது. ஒருபுறம் சிறப்பு புலனாய்வு குழு விசாரித்துக் கொண்டிருக்க, மறுபுறம் மீடியாக்கள் புலனாய்வு செய்து கொண்டிருக்கிறார்கள். இதற்கிடையில் ஒரு தரப்பினர் கொள்கை ரீதியாக மறைந்த விஜய் சேதுபதியின் வீர மரணத்தை போற்றி கொண்டாடுகிறார்கள். 



இவர்கள் யாருக்கும் தெரியாத உண்மை, ஜெராக்ஸ் கடை நடத்தும் நித்யாவிற்கு மட்டும் தெரிகிறது. காரணம், அவரிடம் விஜய் சேதுபதி எழுதிய கதையின் முழு அடக்கமும் இருக்கிறது. 

தன்னிடம் உள்ள ஆதாரங்களை நித்யா மேனன் என்ன செய்தார்? விஜய் சேதுபதி மரணத்திற்கு நீதி கிடைத்ததா? என்பது தான் கதை.

முதலில் நித்யா மேனனுக்கு வருவோம். தமிழ் சினிமாவில் காட்டப்படும் நித்யா மேனனா இவர்? அவ்வளவு அழகு... அவ்வளவு எளிமை... அவ்வளவு லட்சணம்! இதையெல்லாம் கேரள சினிமாக்கள் தான் பிரதிபலிக்கின்றன. ஒரு மிடில் கிளாஸ் மகளாக, அவரது நடிப்பு, வேறு ஒரு பரிணாமத்தை காட்டுகிறது. 

விஜய் சேதுபதி... நாம் இங்கு பார்க்கும், பாராட்டும் விஜய் சேதுபதி அல்ல, இவர். ரொம்ப ரொம்ப ரொம்ப எதார்த்தமான பாத்திரம். இங்கு அவர் செய்ததை விட, பல மடங்கு எதார்த்தமான பாத்திரம். சிரித்த முகத்தோடு, மரணத்தை கூட முத்தமிடும் கதாபாத்திரம். இந்த கதாபாத்திரத்திற்கு விஜய் சேதுபதி தேவையா என தோன்றலாம்... ஆனால் , அதை விஜய் சேதுபதி கூட செய்ய முடியும் என நிரூபித்ததில் தான் அவரது நடிப்புத் திறமை இருக்கிறது.

பொதுவாகவே மலையாள படங்களில் இருக்கும், அந்த மவுனம், பொறுமை, அழகு எல்லாமே இந்த படத்திலும் இருக்கிறது. கருத்து சுதந்திரத்திற்கு கிடைத்த பரிசும், அதை வெளிப்படுத்த எடுக்கும் முயற்சியும் தான் கதை. அதை நேர்த்தியாக கேரள பாணியில் சொல்லி முடித்திருக்கிறார்கள்.




பெண் இயக்குனர் இந்து வி.எஸ்., தன் பணியை சிறப்பாக செய்திருக்கிறார். விருதுகளை குறி வைத்து எடுக்கப்பட்ட படம் என்பது அப்பட்டமாக தெரிகிறது. மணீஸ் மாதவனின் ஒளிப்பதிவும் சரி, கோவிந்த் வசந்தவின் இசையும், பின்னணியும் கதையோடு நம்மை பயணிக்க வைக்கிறது.

மலையாளத்தில் வெளியாகியிருக்கும் இந்தப்படம், டிஸ்னி ஹாட் ஸ்டாரில் தற்போது வெளியாகியிருக்கிறது. மலையாளப்படம் என்றாலும், விஜய் சேதுபதியின் வசனங்கள் தமிழில் தான் உள்ளன. மற்றவர்களின் பேச்சு, ஆங்கில சப்டைட்டிலோடோ பார்க்கலாம். மலையாள சினிமாவில், விஜய் சேதுபதிக்கு இந்தபடம் நல்ல துவக்கம்.