த்ரிஷியம் படத்தின் சூப்பர் கூட்டணியான மோகன்லால் - ஜித்து ஜோசப் இணைந்துள்ள படம்தான் டுவல்த்மேன். சீட்டின் நுனியில்  அமர வைத்து த்ரிஷியத்தை பார்க்க வைத்த ஜித்து இப்படத்தில் என்ன செய்திருக்கிறார் என்பதை விமர்சனமாக பார்க்கலாம்.


பேச்சிலர் பார்ட்டிக்காக கல்லூரி நண்பர்கள் கணவன், மனைவி  என 11 பேர் ரெசார்ட் ஒன்றுக்கு புறப்பட்டு செல்கின்றனர். நண்பர்கள் கூட்டம், ஆட்டம், பாட்டமென கோலாகலமாக பேச்சிலர் பார்ட்டி நடக்கும்போதே செல்போனை வைத்து ஒரு விளையாட்டைத் தொடங்குகினனர். ஆனால் அந்த செல்போன் விளையாட்டு போகப்போக ஒவ்வொருத்தரின் வயிற்றிலும் புளியைக் கரைக்கிறது. அந்த விளையாட்டின் ஒரு பகுதியாக வரும் ஒரு போன்கால் மொத்த பார்ட்டியையும் குழப்புகிறது. அடுத்தடுத்து எதிர்பாராத சம்பவங்கள் ஷாக் கொடுக்க புதுப்புது முடிச்சுகளை போட்டு அந்த முடிச்சுகளை மோகன்லாலை வைத்து அவிழ்க்கிறார் ஜித்து.




குடிகார காமெடியனாக அறிமுகமாகும் மோகன்லால் படம் நகர நகர தனக்கான கெத்தை  காட்டத் தொடங்குகிறார். மது போதையில் அவர் செய்யும் அட்டகாசங்களையும், இரண்டாம்பாதியில் உடல் மொழியில் காட்டும் மாஸும் மோகன்லாலின் வழக்கமான சிக்ஸர்கள். அவர் மட்டுமின்றி படத்திற்காக தேர்வு செய்யப்பட்ட அனைத்து கதாபாத்திரங்களும் தங்களுக்கான நடிப்பை  அழகாகவே செய்து கொடுத்திருக்கிறார்கள். மர்ம முடிச்சுகளை அவிழ்த்து உண்மையை கண்டிபிடிக்கும் ஒரு வகை  மிஸ்ட்ரி த்ரில்லர் வகையறவாக  இருக்கும் டுவல்த்மேன் அதற்கான ஆர்வத்தை முதலிலேயே கொடுக்கிறது.விசாரணை படம் என்றாலும்  இது புதுசு என்று சொல்ல வைக்கிறது. டெக்னாலஜி, செல்போன் என விசாரணையில் இன்றைய காலத்துக்கு ஏற்ப கொண்டு வந்திருப்பதும் சுவாரஸ்யமானதுதான். வெறும் விசாரணை  என்றில்லாமல், மனிதர்களுக்குள்ளே இருக்கும் ரகசியங்கள், நண்பர்களாகவே இருந்தாலும் அவரவர்களுக்குள் இருக்கும் சொல்லப்படாத கதைகள், வெளியில் ஒன்று உள்ளே ஒன்றாக இருக்கும் மனிதர்களின் முகங்கள் என மனிதர்களின்,உறவுகளின் சிக்கல்களையும் தன் கதைப்போக்கில் கொண்டு வந்திருக்கிறார் இயக்குநர்.


ஒரு ரெசார்ட், பெரிய மீட்டுங் ஹால் என பக்காவாக செலவே இல்லாமல் ஒரு படத்தை கொடுத்திருக்கும் ஜித்து உண்மையிலெயே வேலைக்காரர். ஆனால் அந்த வேலையில் சில நெகட்டிவ் பாய்ண்டுகளும் உள்ளன. கதையில் ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் தொடக்கத்திலேயே மெனக்கெட்டு பெயர் போட்டு சொன்னாலும், யார் யார் கூட இருக்கிறார்கள் என்ற குழப்பம் அடிக்கடி வந்து போகிறது. நல்ல வேளை ஓடிடி என்று, நிறுத்தி நிறுத்தி பார்க்கவோ, பின்னால் ஓடவிட்டு மீண்டும் பார்க்கவும் நம்மால் முடிகிறது. பலரும் கதை சொல்வதால் சற்று நிதானித்துதான் புரிந்துகொள்ள முடிகிறது. குறிப்பாக படத்துக்கு முக்கியமான திரைக்கதையில் தடுமாறி இருக்கிறார் ஜித்து. த்ரிஷ்யம் படத்தின் பலமே திரைக்கதைதான் என்றால், இந்தப்படம் சறுக்கும் இடமே திரைக்கதைதான். முடிச்சுகளை அவிழ்க்கும் ஆர்வத்தை கொடுத்தால்போதும் என்று இயக்குநர் பெரிதாக நம்பியதே திரைக்கதையில் கோட்டைவிட்டதன் விளைவாக தெரிகிறது. 




ஒரே இடம் ஒரே விசாரணை என்றெல்லாம் படம் நகர்வதால் படத்தின் நீளத்தை அவர் குறைத்திருக்கலாம் என்றே தோன்றுகிறது. என்னதான் த்ரில்லர் என்றாலும் ஒரு லிமிட் இல்லையா என்று நெளிய வைத்துவிடுகிறது படத்தின் நீளம். மற்றபடி எடிட்டிங்கில் தரம், ஒளிப்பதிவு, பின்னணி இசை என படத்துக்கு ப்ளஸ் பல உள்ளன. படத்தின் நீளத்தைக் குறைத்து திரைக்கதையில் சற்று கவனத்தை திருப்பி இருந்தால் த்ரிஷ்யம் மாதிரியான நச்சென ஒரு சினிமாவை ஜித்து கொடுத்திருக்கலாம்.


இப்படி செய்துவிட்டாரே என்று நொந்துகொள்ளும் அளவுக்கு பிரச்னை இல்லையென்றாலும் ஜித்துவுக்கு இது சறுக்கல் படம்தான். ஆகமொத்தம், ஹாட்ஸ்டார் ஓடிடியில் கிடைக்கும் இந்தப்படத்தை நிச்சயம் ஒருமுறை கண்டிப்பாக பார்க்கலாம் ரகம்தான். ஓடிடி என்பதால் நமக்கு பெரிய நஷ்டம் எதுவுமே இல்லை.