மாலிக் – இந்த வாரம் ஓடிடி ரிலீஸில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படம். 2.40 மணி நேரப்படம் என்றவுடன் தொடங்குவதற்கு முன்பே, “இழுத்திருப்பாங்களோ…?” என மனதில் தோன்றியது.
ஆனால், படம் தொடங்கியது முதல் கடைசி வரை ரமடாபள்ளி கிராமத்தில் நடக்கும் சம்பவங்கள் நம்மை பாதிக்கின்றது. ”அடுத்து என்ன, இப்ப முடியுமோ அப்ப முடியுமோ” என்ற படபடப்பு 2.40 மணி நேர கவலையை எட்டிப்பார்க்கவிடவில்லை. ஃபகத், நிமிஷா மற்றும் பிற நடிகர்கள் ஆகியோரின் தேர்ந்த நடிப்பால் ‘மாலிக்’ ஃபகத்திற்கு மற்றுமொரு வெற்றி படமாக அமைந்துள்ளது.
சுலைமான் மாலிக் / அலி இக்காவாக ஃபகத், ரோஸ்லினாக நிமிஷா விஜயன். இருவரும் வெவ்வேறு சமூகங்களைச் சேர்ந்தவர்கள். அன்றாட தினத்தை கூட போராடி கழிக்கவேண்டிய மீனவ கிராமத்தில் வாழ்பவர்கள். ஆனால், எதார்த்தமாக அழகாக இருவருக்கும் இடையே மலர்ந்த காதல், அவர்களது வாழ்க்கையை புரட்டி போட்ட சம்பவங்கள் வந்தபோதும் சரி, நல்ல நிலைக்கு சென்றபோதும் சரி, மீண்டும் சறுக்கியபோதும் சரி, மிகுந்த அன்போடும் காதலோடும் அதே சமயம் ஒருவரை ஒருவரின் கோட்பாடுகளை விட்டுக்கொடுக்காமல் நிற்கின்றனர்.
ஹஜ் யாத்திரைக்கு செல்ல சுலைமான் தயாராகிறார். இஸ்லாமிய குடும்பத்தைச் சேர்ந்த அவரது வீட்டில் பெண்கள் அனைவரும் ஹிஜாப் அணிந்தபடி சுற்றி கொண்டிருக்க, சுலைமான் மனைவி ரோஸ்லின் மட்டும் சாதாரணமாக இருக்கிறார். ஹஜ் யாத்திரைக்கு புறப்பட்ட சுலைமான், விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்படுகிறார். பல ஆண்டுகளாக பிடிபடாத சுலைமான், இப்போது சிக்கியிருப்பதால் அவரை சிறையிலேயே கொன்றுவிட காவல்துறையினர் திட்டமிடுகின்றனர். அவரை கொல்வதற்காக, மற்றொரு சிறைவாசியான ஃப்ரெட்டியை தயார்படுத்துகின்றனர்.
ஃப்ரெட்டி, ரோஸ்லினின் அண்ணன் டேவிட்-இன் மகன். 60களில் இருந்து தொடர்ந்து இஸ்லாமிய – கிறிஸ்துவ மோதல்களை ஏவிவிட காவல்துறை முயன்று கொண்டே வருகின்றது. சுலைமானை தீர்த்துக்கட்டவும் அதே யுக்தியை கையாள்கிறது. வேறு சமூகத்தைச் சேர்ந்த, சுலைமானுக்கு உறவுக்காரரான ஃப்ரெட்டியை வைத்தே அவரை கொல்ல திட்டமிடுகிறது. சுலைமானை கொல்ல தயாராகும் ஃப்ரெட்டி, ரமடாபள்ளி கிராமத்தில் நடந்த கடந்தகால விஷயங்கள் பற்றியும், சுலைமான் பற்றியும் தெரிந்து கொள்கின்றான். ஒரு புறம் சுலைமான் நல்லவனாகவும், இன்னொரு புறம் அதற்கு முரணாகவும் அவனுக்கு தென்படுகிறது. இறுதியில், சிறையிலேயே வைத்து சுலைமான் கொல்லப்பட்டாரா அல்லது தப்பித்து வந்தாரா என்பதே மாலிக்கின் கதை.
ஃப்ளாஷ்பேக் பகுதிகளாகவே, கதை சொல்லப்படுகின்றது. மாலிக் கதாப்பாத்திரம் பிறந்ததில் இருந்து, பள்ளி வாழ்க்கை, காதல் வயப்பட்டது, கடத்தலில் ஈடுபடுவது, ரமடாபள்ளி கிராமத்தை மேம்படுத்தியது, மக்கள் நம்பிக்கை பெற்ற உள்ளூர் ‘நாயகனாக’ உருவானது வரை மாலிக்கை சுற்றியே நகர்கிறது. எனினும், இந்த கதாப்பாத்திரத்தை சுற்றி நடக்க கூடிய சம்பவங்களை மையப்படுத்தி அரசியல், காதல், உரிமைகள், பிரிவினைவாதம், காவல்துறை அதிகாரம், ஆண் பெண் சம உரிமைகள், தனிமனித விருப்பு வெறுப்புகள் என நிறைய ஆங்காங்கே வந்து சென்றாலும், கதைக்களத்தையொட்டி தெளிவாக சொல்லப்பட்டுள்ளது.
’டேக் ஆஃப்’, ‘சி யூ சூன்’ போன்ற மலையாளப் படங்களை இயக்கிய மகேஷ் நாராயணனின் படம், மாலிக். இவர் ஒரு தேர்ந்த படத்தொகுப்பாளரும் கூட. மாலிக் திரைப்படத்திற்கு கதை, இயக்கம், எடிட்டிங் என மூன்று முக்கிய துறைகளை கையாண்டுள்ளார். சனு வர்கீஸின் கேமரா அடிப்பொலி ரகம். ”ஃபகத் – நடிகன்டா” என கமெண்ட் செய்வதற்கு ஏதுவாக இந்த படத்திலும் சில ‘கூஸ் பம்ப்ஸ்’ காட்சிகள் இடம் பெற்றுள்ளது. படத்தின் இரண்டாம் பாதியில், ஒரே டேக்கில் லாங் ஷாட் ஒன்றில் ஃபகத் நடித்திருப்பார், படம் முடிந்த பிறகு ஸ்லோ க்ளாப்ஸ் தர தோன்றும்! டேவிட்டாக வினய் ஃபோர்ட், சப்-கலெக்ட்ராக ஜோஜூ ஜார்ஜ், அபுபக்கராக திலேஷ் போத்தன், சிறைச்சாலை மருத்துவராக பார்வதி கிருஷ்ணா என அனைவரின் நடிப்பும் சிறப்பு.
ஃபகத்திற்கு இது மற்றுமொரு வெற்றி படம், ரசிகர்களுக்கு இது மற்றுமொரு ’ஃபகத் நடித்த சூப்பர் படம்’. ‘அலி இக்கா’ படம் முடிந்த பிறகும் மனதில் நிற்கின்றார். மாலிக் - இந்த வார ஓடிடி ரிலிசில் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்த திரைப்படம்.