தமிழ் சினிமாவில் மெல்லிசை மன்னர் என்று அழைக்கப்படுபவர் எம்.எஸ்.விஸ்வநாதன். இவருடைய நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இவர் தமிழ், தெலுங்கு,மலையாளம் உள்ளிட்ட பல திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். தொடக்கத்தில் ராமமூர்த்தியுடன் சேர்ந்து இசையமைத்தார். பின்னர் தனியாக திரைப்படங்களுக்கு இசையமைக்க தொடங்கினார். மெல்லிசை பாடல்கள் இசையமைத்தில் இவர் சிறப்பானவராக இருந்தார். அதனால் அவருக்கு இந்தப் பட்டம் வழங்கப்பட்டது. இவருடைய இசையில் அமைந்த சில சிறப்பான பாடல்கள் என்னென்ன?
1. பச்சை கிளி:
எம்.ஜிஆர் நடிப்பில் வெளியான உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படத்தில் இந்தப் பாடல் இடம்பெற்றுள்ளது. இதை டிஎம்.எஸ் மற்றும் சுஷிலா பாடியிருப்பார்கள். எம்.எஸ்.வியின் இசையும் அவர்களின் குரலும் பாடல் வரிகளும் சிறப்பாக அமைந்திருக்கும்.
"தத்தை போலத்
தாவும் பாவை பாதம்
நோகும் என்று மெத்தை
போல பூவைத் தூவும்
வாடைக் காற்றும் உண்டு..."
2. வான் நிலா நிலா அல்லா:
பட்டின பிரவேசம் என்ற திரைப்படத்தில் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் அமைந்தப் பாடல் இது. இந்தப் பாடலை எஸ்பிபி பாடியிருப்பார். பாடல் தொடங்குவதற்கு முன்பாக வரும் வயலின் இசை சிறப்பாக இருக்கும்.
"இன்பம் கட்டிலா
அவள் தேகம் கட்டிலா
இன்பம் கட்டிலா அவள்
தேகம் கட்டிலா தீதிலா
காதலா ஊடலா கூடலா
அவள் மீட்டும் பன்னிலா..."
3. அழகிய தமிழ் மகள்:
எம்.ஜி.ஆர் நடிப்பில் வெளியான ரிக்ஷாக்காரன் திரைப்படத்தில் இந்தப் பாடல் இடம்பெற்றுள்ளது. இந்தப் பாடலை டி.எம்.எஸ் மற்றும் சுஷிலா பாடியிருப்பார்கள். எம்.எஸ்.விஸ்வநாதனின் இசை மற்றும் இவர்களின் குரலில் இப்பாடல் சிறப்பாக அமைந்திருக்கும்.
"இளமையில்
இனியது சுகம் இதை
பெறுவதில் பல வித
ரகம் இந்த அனுபவம்
தனி ஒரு விதம் மலரும்
வளரும் பல நாள் தொடரும்..."
4. இயற்கை எனும் இளைய கன்னி:
சாந்தி நிலையம் திரைப்படத்தில் அமைந்த சிறப்பான பாடல் இது. எஸ்பிபி மற்றும் சுஷிலா கூட்டணியில் அமைந்த சிறப்பான பாடல்களில் இதுவும் ஒன்று. எம்.எஸ்.விஸ்வநாதன் டூயட் பாடல்களில் இதுவும் சிறப்பான ஒன்று.
"தலையை விரித்து தென்னை போராடுதோ
எதனை நினைத்து இளநீராடுதோ
கன்னி உன்னைக் கண்டதாலோ
தன்னை எண்ணிக் கொண்டதாலோ
இலைகள் மரத்துக்கென்ன மேலாடையோ
இடைகள் மறைத்துக் கட்டும் நூலாடையோ..."
5. மல்லிகை என் மன்னம் மயங்கும்:
முத்துராமன், கே.ஆர்.விஜயா ஆகியோர் நடித்த தீர்க்க சுமங்கலி திரைப்படத்தில் இந்தப் பாடல் இடம்பெற்றுள்ளது. கவிஞர் வாலியின் வரிகளில் வாணி ஜெயராம் குரலில் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் இப்பாடல் மிகப்பெரிய ஹிட் அடித்தது.
"வான் மேகங்கள் வெள்ளி ஊஞ்சல் போல்
வான் மேகங்கள் வெள்ளி ஊஞ்சல் போல்
திங்கள் மேனியை தொட்டு தாலாட்டுது
குளிர் காற்றிலே தளிர் பூங்கொடி
கொஞ்சி பேசியே அன்பை பாராட்டுது..."
இவை தவிர அவள் ஒரு நவரச நாடகம், கடவுள் அமைத்து வைத்த மேடை போன்ற பல முத்தான பாடல்களுக்கு எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்துள்ளார்.
மேலும் படிக்க: மழை விழுந்து மனசு நெறஞ்சிருக்கா... ஜில்லுன்னு இந்த பாட்டை கேளுங்க... ஜம்முனு தூங்குங்க!