இந்தி திரையுலகின் பிரபல நடிகர் சோனு சூட். வில்லன் கதாபாத்திரங்களில் மிகவும் பிரபலமான இவர் தமிழ், தெலுங்கு உள்பட மொழிகளிலும் நடித்துள்ளார். கடந்தாண்டு கொரோனா முதல் அலையால் நாடு முழுவதும் பலரும் அவதிப்பட்டு வந்த நிலையில், சோனு சூட் செய்த உதவி நாடு முழுவதும் பலரால் பாராட்டப்பட்டது. அவரது உதவியால் சொந்த ஊர் திரும்ப முடியாமல் தவித்து வந்த ஆயிரக்கணக்கான மக்கள் பேருந்துகள், ரயில்கள், விமானங்கள் மூலமாக தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்பினார். சோனு சூட்டின் உதவியை பாராட்டி சமூக வலைதளங்களில் இந்தியாவின் சூப்பர் மேன் என்று அவரை மக்கள் கொண்டாடினர். மேலும், தனியார் விமான சேவை நிறுவனம் ஒன்று அவரது உருவப்படம் பொறிக்கப்பட்டு உள்நாட்டில் பறந்து அவருக்கு பெருமை சேர்த்தது.


சோனு சூட் செய்த உதவியால் நாடு முழுவதும் அவருக்கு ஏராளமான ரசிகர்கள உருவாகினர். தெலுங்கானா மாநிலம் சூர்யாபேட்டையைச் சேர்ந்தவர் குருவையா- புஷ்பலதா தம்பதி. இவர்களுக்கு ஒரு ஆண், ஒரு பெண் என இரு குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில், இவர்கள் தங்களது குடும்பத்தினருடன் உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சங்காரெட்டி மாவட்டத்தில் உள்ள அவர்களது உறவினர் வீட்டுக்கு சென்றுள்ளனர்.




அப்போது, தொலைக்காட்சியில் மகேஷ்பாபு நடித்த தூக்குடு என்ற தெலுங்கு படம் ஒளிபரப்பாகிக்கொண்டிருந்தது. அதை குருவையாவின் 7 வயது மகன் விராட் பார்த்துக்கொண்டிருந்தான். அந்த சிறுவன் சோனு சூட்டின் தீவிர ரசிகன் ஆவான். அப்போது, தொலைக்காட்சியில் ஓடிக்கொண்டிருந்த திரைப்படத்தில் படத்தின் நாயகனாக மகேஷ்பாபு, படத்தின் வில்லனான சோனு சூட்டை தாக்கும் காட்சி ஓடிக்கொண்டிருந்தது. மகேஷ்பாபு, சோனு சூட்டை சரமாரியாக அடிக்கும் விதமாக அந்த காட்சி இடம்பெற்றிருந்தது. தனது ஆஸ்தான நடிகர் அடிவாங்குவதை கண்ட சிறுவன் மிகுந்த கோபம் அடைந்துள்ளான்.


கோபத்தின் உச்சிக்கே சென்ற சிறுவன், வீட்டிற்கு வெளியே சென்று கல் ஒன்றை எடுத்துக்கொண்டு விறுவிறுவென வீட்டிற்கு உள்ளே சென்றுள்ளான். சட்டென்று, தொலைக்காட்சியில் சோனு சூட்டை அடித்து உதைத்துக்கொண்டிருந்த மகேஷ்பாபுவை நோக்கி அந்த கல்லை எறிந்துள்ளான். சிறுவன் விட்டெறிந்த கல்லால் தொலைக்காட்சியின் கண்ணாடி உடைந்து நொறுங்கியது.




கண்ணாடி உடைந்த சத்தம் கேட்டு வந்த சிறுவன் விராட்டின் பெற்றோர்கள் மற்றும் அவரது உறவினர்கள், தொலைக்காட்சியை ஏன் உடைத்தாய் என்று கேட்டுள்ளனர். அதற்கு பதிலளித்த சிறுவன், சோனுசூட் தனக்கு மிகவும் பிடித்த நடிகர். அவரை மகேஷ்பாபு அடிக்கும் காட்சி தனக்கு பிடிக்கவில்லை. அதனால்தான் தொலைக்காட்சியை உடைத்தேன் என்று கூறியுள்ளான்.


அவனது பதிலை கேட்டு அவனது பெற்றோர்களும். உறவினர்களும் அதிர்ச்சியடைந்துள்ளனர். மேலும், கொரோனா காலத்தில் சோனு சூட் செய்த உதவி குறித்து தனது தந்தை பேசுவதை தொடர்ச்சியாக கேட்ட பிறகு, சோனுசூட்டை தனக்கு மிகவும் பிடித்த நடிகராக மாறிவிட்டார் என்றும் சிறுவன் கூறியுள்ளான். இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவிய பிறகு, இதை சோனு சூட்டிற்கு டுவிட்டரில் சிலர் டேக் செய்தனர். அதைப் பார்த்த சோனுசூட், இதுபோன்று தொலைக்காட்சியை உடைக்க வேண்டாம். பிறகு நான்தான் புதிய தொலைக்காட்சியை வாங்கித் தர வேண்டும் என்று சிறுவனுக்கு அறிவுரை கூறியுள்ளார்.