நம் வாழ்க்கையின் பாதையில் பரபரப்பாக பயணித்துக்கொண்டிருக்கும் நாம் எதாவது ஒருபுள்ளியில் நின்று நிதானிப்போம். அதற்கு காரணம் யாரோ ஒருவரின் அனுபவமோ, ஏதோ ஒரு கதையோ, படித்த ஏதோ ஒரு நாவலோ அல்லது ஏதோ ஒரு திரைப்படமோ, ஏன்? ஒரு பாடலாகக் கூட இருக்கலாம். நம் வாழ்க்கையில் குறுக்கிடும் ஏதோ ஒன்று பெரும் படிப்பினையை, பெரிய அறிவுரையை, வாழ்க்கை குறித்தான எதாவது ஒரு பார்வையை நமக்குள் ஆழமாக விதைத்துவிடும். அப்படி பரபரப்பாக ஓடிக்கொண்டிருந்த பலரையும் சற்று நிதானிக்க வைத்த திரைப்படம் தான் 'கேபெர்னம்'.




'எவ்ளோ கஷ்டம், என்னடா வாழ்க்கை' என நொந்துகொள்ளும் நபர் கூட 'கேபெர்னம்' படத்தை பார்த்தால், 'பரவாயில்லை, நான் நல்ல வாழ்க்கைதான் வாழ்கிறேன்' என நினைத்துவிடுவார். அப்படத்தில் ஒரு 12 வயது மதிக்கத்தக்க சிறுவன் நமக்கு என்னவெல்லாமோ கற்றுக்கொடுத்து சென்றுவிடுவான். உலக அளவில் பலரையும் மனதளவில் தேற்றிய, பலரையும் யோசிக்க வைத்த ஒரு காவியம் தான் கேபெர்னம். 2018-ஆம் ஆண்டு வெளியான லெபனான் திரைப்படமான கேபெர்னம் திரைப்படத்தில் அப்படி என்னதான் இருக்கிறது?


ஒரு சிறைச்சாலையில் சைன் என்ற சிறுவனின் வாயை சோதிக்கும் மருத்துவர் பற்களின் வளர்ச்சியை வைத்து 'இவனுக்கு 12 வயது இருக்கலாம்' என கூறுகிறார். அவனுக்கு ஆதரவாக ஒரு வழக்கறிஞரும் அங்கிருக்கிறார். நீதிபதி முன்பு சிறுவன் ஆஜர்படுத்தப்பட அருகே சிறுவனின் தாயும், தகப்பனும் விசாரணைக்காக அமர்ந்துள்ளனர். சிறுவனிடம் சில ஆரம்பக்கட்ட கேள்விகளை கேட்கும் நீதிபதி, 'உன் பெற்றோர் என்ன தவறு செய்தார்கள்?' என சிறுவனிடம் கேட்கிறார். கண்கள் முழுவதும் சோகம், வலி, கோபம் என அனைத்தும் உள்ளடக்கிக்கொண்டே சிறுவன் சொல்லும் வார்த்தைகள், ''என்னை பெற்றதுதான் அவர்கள் செய்த தவறு''.




12 வயது சிறுவனுக்குள் இப்படியான வார்த்தைகளை எதிர்பார்க்காத நீதிபதி உள்ளிட்ட நீதிமன்றமே அதிர்ந்து போகிறது. இவ்வளவு கோபமும் வலியும் அந்த சிறுவனுக்குள் வந்தது ஏன்? வாழ்க்கையையே வெறுக்கும் அளவுக்கு அந்த சிறுவன் கண்ட அனுபவம் என்ன? என்று ப்ளாஷ்பேக்காக தொடர்கிறது கேபர்னாம்.


பரபரப்பான நெருக்கமான மக்கள் வசிக்கும் பகுதி, ஒரே குடும்பத்தில் பிளுபிளுவென இருக்கும் குழந்தைகள், பள்ளிக்கல்விக்காக ஏங்கும் சிறுவன் சைன், குழந்தை திருமணம், போதைப் பொருள், அகதியின் வலி, பசியின் கொடுமை, மனிதம் தாண்டிய வணிகம், அன்பிற்கான ஏக்கம் என படம் முழுக்க மனதில் நிற்கும் காட்சிகளால் பயணிக்கிறது கேபெர்னம். படம் முழுக்க சோகம்,வலி என பயணிக்கும் சிறுவன் சைன், சிரிக்கும் ஒரு முக்கியமான காட்சியில் படம் பார்க்கும் நமக்கு கண்ணீர் துளிகள் வருவதை தடுக்கவே முடியாது.




இந்தப்படத்தில் சிறுவன் சைனுக்கு ஆதரவாக வாதாடும் பெண் வழக்கறிஞரான நடைன் லபாக்கி என்பவர்தான் படத்தின் இயக்குநர். படம் முழுக்க வலியைக் கடத்தும் சிறுவன் சைன் உண்மையிலேயே சிரியாவில் ஒரு அகதியாக இருந்தவன். அவனை தேடிப்பிடித்து படத்தில் நடிக்க வைத்தவர் நடைன். படத்தில் அகதியாக வரும் ரகீல் என்ற பெண் ஒருவரும் உண்மையான அகதி. படத்தில் அவர் நடித்தாரா? உண்மையாக வாழ்ந்தாரா? என்ற சந்தேகம்தான் நமக்கு வரும். அப்படியான நடிப்பை கொடுத்திருப்பார் ரகீல். படத்தின் இசை, நடிகர்கள், காட்சியமைப்பு அனைத்துமே பெஸ்ட் லெவல்.




தொடக்கத்தில் ஸ்லோவாக படம் பயணிப்பது போல தோன்றினாலும் கதை ஓட்டத்துக்குள் நாம் சென்றபிறகு அந்த பரபரப்பான நகரத்தில், நாமும் சைனுடன் சேர்ந்து பயணப்பட்டுக்கொண்டே இருப்போம். அழகான ஒரு காட்சியுடன் அமைதியாக படம் முடிவடைந்தாலும் இந்தப்படத்தின் தாக்கம் நமக்குள் சில நாட்கள் நிச்சயம் இருக்குமென்பதை மறுப்பதற்கில்லை. பல்வேறு விருதுகளை வாங்கிக் குவித்த கேபெர்னம் திரைப்படம் ஆஸ்கர் பரிந்துரை பட்டியலில் வெளிநாட்டு திரைப்படம் பிரிவில் பங்கேற்றது. நீங்கள் ஒரு உலக சினிமா ரசிகர் என்றால், ஒரு அழகான காவியத்தை திரையில் பார்க்க விரும்பினால் கேபெர்னமை நிச்சயம் பார்க்கலாம். ஓடிடி தளமான அமேசானில் இப்படம்( Capharnaum) கிடைக்கிறது.