கன்னட மொழியில் வெளியாகி பரபரப்பாக பேசப்பட்டு வரும் படம் காந்தாரா. தமிழில் டப்பிங் செய்யப்பட்ட இப்படத்தின் விமர்சனத்தை இங்கே காண்போம்.
1847 ஆவது காலக்கட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் அரசர் ஒருவருக்கு பணம், புகழ், மனைவி என எல்லாம் இருந்தும் மனநிம்மதி இல்லாமல் தவித்துக்கொண்டிருக்கிறார். மனநிம்மதியை வேண்டி பல இடங்களுக்கு சென்று பல குருமார்களை சந்திக்கும் அவருக்கு, அது எங்கும் கிட்டவில்லை. இறுதியாக காட்டுக்குள் பயணிக்கும் அந்த அரசன் அங்கு இருக்கும் ஒரு தெய்வத்தை கண்டடைகிறார்.
தெய்வத்தை கண்டடையும் அந்த கணத்தில் இழந்து போன நிம்மதியும், சந்தோஷமும் அரசனுக்கு கிடைத்துவிட, அது காலத்திற்கும் நீடிக்க வேண்டும் என எண்ணுகிறார்.
அதற்கு அந்த தெய்வம் அந்தப்பகுதியில் வாழும் மக்களுக்கு, அவனின் நிலங்களை வழங்க ஆணையிடுகிறது. அதன்படியே அந்த அரசனும் செய்கிறார். ஆனால் அரசனுக்கு பின்னால் வரும் அவரின் சந்ததியினர் அந்த நிலங்களை அந்த மக்களிடம் இருந்து பறிக்க முயற்சிக்கிறது.
அதனை தெய்வம் எச்சரிக்க, அந்த சம்பவத்தில் ஒருவன் இறந்தும் போகிறான். அதன்பிறகு 1990களில் பண்ணையார் ஒருவர் மக்களுக்கு ஆதரவாக இருப்பது போல இருந்து, அந்த நிலங்களை அந்த மக்களிடம் இருந்து பறிக்க முயல்கிறார். இறுதியில் அந்த நிலம் மக்களிடம் இருந்து பறிக்கப்பட்டதா.. இல்லையா? தெய்வத்தின் ஆணை என்னவானது? அங்கு வாழும் மக்களின் நிலை என்ன ? உள்ளிட்ட கேள்விகளுக்கான பதில்கள்தான் படத்தின் மீதிக்கதை.
படத்தின் ஆகப்பெரும் பலங்களில் மிக மிக முக்கியமான பலம் படத்தை எழுதி இயக்கி நடித்திருக்கும் ரிஷப் ஷெட்டி. ‘கம்பளா’ எனும் எருமை மாடு போட்டியில் அவர் என்ட்ரி ஆகும் ஆரம்ப காட்சியாகட்டும், தன் மக்களுக்காக திமிர்ந்து எழும் இடங்களாகட்டும், கிளைமேக்சில் தெய்வாக மாறி அவர் வெளிப்படுத்தும் ஆக்ரோஷ நடிப்பாகட்டுமா அவை அனைத்தும் படத்தை மட்டுமல்லாது அவரையும் பெருமளவு கொண்டாட வைத்திருக்கிறது. வனத்துறை அதிகாரியாக வரும் கிஷோர், பண்ணையாராக வரும் அச்யுத் குமார்
கதாநாயகனோடு இணைந்து பயணிக்கும் இதர கதாபாத்திரங்ள் என அனைத்தும் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்திற்கு நியாயம் செய்திருக்கின்றன. ஆனால் முஸ்லீம் பாயாக வரும் கதாபாத்திரத்தை வெடிகுண்டோடு சம்பந்தப்படுத்தி அமைக்கப்பட்டிருந்த காட்சியை தவிர்த்து இருக்க வேண்டியது.
தன்இன மக்களின் நிலங்களை மீட்டெடுக்க போராடும் ஒரு சாமானியன் கதைதான் என்றாலும் கூட, அதில் நாட்டார் தெய்வத்தை ( காவல் தெய்வம்) புகுத்தி திரைக்கதை அமைத்து இருந்தது நம்மை வேறொரு உலகத்திற்குள் அழைத்து சென்றது. அந்த தெய்வம் வரும் காட்சிகளெல்லாம் நமக்குள் ஒரு வித அச்சத்துடன் கூடிய சிலிர்ப்பு எழும்.
அதற்காக ரிஷப் ஷெட்டிக்கு தனிபாராட்டுகள். அதே போல கதாபாத்திரங்களுக்கான முக்கியத்துவத்தை கொடுத்து காட்சிகளை அமைத்து இருந்ததும், படத்தின் லோக்கேஷனான காட்டை கதையோடு ஒன்ற வைத்திருப்பதும் அழகு.
படத்தின் இடையில் கமர்ஷியலுக்காக பாடல்கள் நுழைக்கப்பட்டாலும், அடுத்தடுத்து வேகமெடுக்கும் திரைக்கதை நம்மை போரடிக்காமல் பார்த்துக்கொள்கிறது. காட்டையும் அதை சார்ந்த இடங்களை அவ்வளவு அழகாக தனது கேமாரா கண்களால் காட்சிப்படுத்திருக்கும் ஒளிப்பதிவாளர் அரவிந்தின் உழைப்பு சிறப்பு. பிண்ணனி இசையில் இசையமைப்பாளர் பி அஜனீஷ் லோக்நாத்தின் அழுத்தமான முத்திரை பதிந்து இருக்கிறது. மொத்தத்தில் காந்தாரா தந்திருக்கும் அனுபவம் மறக்க முடியாத பேரனுபவம்.