House of the Dragon First episode Review in Tamil: கேம் ஆஃப் த்ரான்ஸின் வெறித்தனமான ரசிகர்களின் மனதில் நீண்ட காலம் நிலவி வந்த வெற்றிடத்தை இந்த முதல் எபிசோட் பூர்த்தி செய்துள்ளதா?
2011ஆம் ஆண்டு தொடங்கி 2019ஆம் ஆண்டு வரை 8 சீசன்கள் வெளியாகி உலகம் சக்கை போடுபோட்ட HBO தொலைக்காட்சித் தொடர் கேம் ஆஃப் த்ரோன்ஸ்.
ஆனால் கேம் ஆஃப் த்ரோன்ஸின் இறுதி சீசன் அதன் ரசிகர்களுக்கு ஏற்படுத்திய பெருமளவு அதிருப்தி இன்று வரை மாறாத வடுவாகவே உள்ளது. இந்த நிலையில் இத்தொடரின் ஹவுஸ் டார்கேரியன்களைப் பற்றி முழுக்க முழுக்க பிரம்மாண்டமாகத் தயாராகியுள்ள ஹவுஸ் ஆஃப் த டிராகன் தொடரின் முதல் எபிசோட் இந்த வாரம் வெளியாகி ரசிகர்களின் மனதைக் குளிர்வித்துள்ளது.
கேம் ஆஃப் த்ரான்ஸின் வெறித்தனமான ரசிகர்களின் மனதில் நீண்ட காலம் நிலவி வந்த வெற்றிடத்தை இந்த முதல் எபிசோட் பூர்த்தி செய்துள்ளதா?
டிராகன் பார்வை வியூ!
டெனேரிஸ் டார்கேரியன் பிறப்பதற்கு 172 ஆண்டுகளுக்கு முன் எனும் குறிப்போடு தொடங்கும் தொடரில், எடுத்ததுமே கிங்ஸ் லேண்டிங்கின் அழகை டிராகன் பார்வையில் நமக்கு விளக்கி வாவ் சொல்ல வைக்கிறார்கள்!
கிங் விசேரிஸ் டார்கேரியன், இளவரசி ரெனிரா, குழந்தை பெறுவதை மட்டுமே ஒரே கடமையாகக் கொண்ட தாய் ஏமா அரய்ன், விசேரிஸ் தம்பி டேமன் டார்கேரியன் இவர்களுடன் தொடர் நிதானமாக நெருப்பைக் கக்கியபடி டிராகனைப் போல் பயணிக்கிறது.
வழக்கம் போல் ஆட்சி அதிகாரத்துக்கான போட்டியை மையப்படுத்தியே சுழலும் கதை என்றாலும், பெண் கதாபாத்திரங்கள் தாங்கிப் பிடித்த கேம் ஆஃப் த்ரான்ஸ் போலவே பெண் ஒருவர் ஆட்சிக் கட்டிலில் அமர்த்தப்படுவதை மையமாகக் கொண்டு நகரும் கதை நம்மை கட்டிப்போடுகிறது. ரெனிரா அடுத்தடுத்த எபிசோடுகளில் எப்படி விஸ்வரூபம் எடுப்பார் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தவும் தவறவில்லை.
அதிரவைக்கும் வன்முறை
நாகரீகம் மேலோங்காத பழங்கால ஆட்சிமுறை, அங்கு தெறிக்கும் வன்மம், குரோதம், யார் எப்போது சாவார்கள் என யூகிக்க முடியாத பதட்டம், வன்முறை இவையே கேம் ஆஃப் த்ரான்ஸின் பெரும் முதலீடு!
ஹவுஸ் ஆஃப் த டிராகனின் முதல் எபிசோடில் ரெனிராவின் தாய் குழந்தை பெறும் காட்சி இதற்கு ஒரு சின்ன முன்னுதாரணம். பதட்டத்தின் உச்சிக்கு நம்மை எடுத்துச் சென்று மனதை அதிரவைக்கும் தரும் இந்தக் காட்சி ஒன்று போதும் முதல் எபிசோடுக்கு!
க்ரே கதாபாத்திரமாக சித்தரிக்கப்பட்டுள்ள டேமன் டார்கேரியனின் கதாபாத்திரம் எத்தகைய முடிவுகளை எடுக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
எதிர்பார்ப்பு பூர்த்தியானதா?
கேம் ஆஃப் த்ரான்ஸில் கதாபாத்திரங்களுக்குப் பிறகு பெரிதும் ரசிக்கப்பட்டது இசை. அதற்கு பெரும் பங்கு சேர்த்து ராமின் தான் ஹவுஸ் ஆஃப் டிராகனுக்கும் இசை அமைத்துள்ளார். இசை வழக்கம்போல் நம்மை தொடருக்குள் ஒன்ற வைத்து பலம் சேர்க்கிறது.
ஜான் ஸ்நோ, டிரியன், செர்ஸி, ஜெய்மி, நெட் ஸ்டார்க், ஆர்யா என வலுவான வித்தியாசமான பின்புலம் கொண்ட கதாபாத்திரங்கள் போல் ஹவுஸ் ஆஃப் டிராகன்ஸில் பல பின்புலங்களைச் சேர்ந்த கதாபாத்திரங்கள் இல்லாததே இந்த முதல் எபிசோடில் குறையாக உணரப்பட்டுள்ளது.
கிட்டத்தட்ட மூன்றரை ஆண்டுகளுக்கு மேல் தவமிருந்து டிராகன்களின் தரிசனம் பெற்றுள்ள ரசிகர்களுக்கு அடுத்தடுத்த எபிசோடுகள் தீனி போடுகின்றனவா எனப் பொறுத்திருந்து பார்ப்போம்!