கண்களாலேயே, கதாபாத்திரங்களையும் நம்மையும் மிரட்டும் மிதா வஷிஸ்ட் பேசும் முதல் சில வசனங்களில் முக்கியமானவை, “ஆம்பிளைங்க முதல்ல சாப்பிடட்டும். புருஷனை பேர் சொல்லி கூப்பிடுறதெல்லாம் எங்க பழக்கம் இல்ல” என்பதுதான். சமூகத்தின் மிக முக்கிய பிரச்சனை தொடங்கும் அந்த வரிகளில்தான், சாஷிக்கான பிரச்சனைகளும் தொடங்குகின்றன.
பணம் கொடுக்கல் - வாங்கலில் ஏமாற்றத்தைச் சந்திக்கும் கணவன் ஹேமந்துடன், ஹரியானாவில் செல்ஃபோன் சிக்னல் இல்லாத கிராமத்துக்கு வருகிறாள் கர்ப்பிணி சாக்ஷி. குழந்தை பிறக்கும் வரையில் அந்தப் பிரச்சனையில் இருந்து ஒதுங்கி இருக்கவேண்டும் என நினைக்கிறார்கள் இருவரும். அதற்காக அவர்கள் தேர்ந்தெடுக்கும் இடம்தான் அந்த கரும்பு காடு சூழ்ந்த குக்கிராமம். இதில் சாக்ஷிக்கு என்ன பிரச்சனை வருகிறது, அமானுஷ்யங்கள் எதற்காக நடக்கின்றன, அவள் தன்னையும், தனது குழந்தையையும் காப்பாற்றிக்கொண்டு அந்த அமானுஷ்ய கிராமத்தில் இருந்து தப்பிச்செல்வாளா என்னும் இந்த பேய்க்கதை, பொறுப்பான மெசேஜ்களைக் கொடுப்பதுதான் சோரி.
பெண்களுக்குள் இருக்கும் ஆண்மையவாதம் எவ்வளவு பெரிய கொடூரம் என்பதையும், நிதர்சனமாக அது எவ்வளவு மோசமான விளைவுகளை உண்டாக்கும் என்பதையும் பன்னோ தேவியாக புரிய வைக்கிறார் மிதா வஷிஸ்ட். “அவ சூனியக்காரி. பிள்ளையைச் சுமக்காத ஒரு பொம்பளை எதுக்கு இருக்கணும். அதனால யாருக்கு என்ன பிரயோஜனம் இருக்கு” எனக் கேட்கும் மிதாவுக்கு, பிள்ளையைப் பெறுவதா பெண்ணுக்கான சான்றிதழ் என கவுண்ட்டர் கொடுக்கும் சிட்டி மருமகளாக நுஷ்ரத் மிரட்டுகிறார். கண்ணாமூச்சி ஆடும் பேய் குழந்தைகளைப் பார்த்து பயப்படாத சாக்ஷியும், சிக்னல் இல்லாத ஊருக்கு பயப்படாமல் பிக்னிக் போவதுபோல கிளம்பும் சாக்ஷி - ஹேமந்த் ஜோடியும் லாஜிக்கைப் பற்றி கவலைப்படாமல் ஹாயாக இருக்கிறார்கள். இந்த காட்சிகளில் உங்கள் பொறுமை சோதிக்கப்படலாம். கொஞ்சம் தண்ணீர் குடித்துவிட்டு மீண்டும் பார்க்க ஆரம்பியுங்கள்.
மற்றபடி காற்றில் அசையும் அந்த கரும்புப் பயிர்களின் ஓசை, படம் முழுக்க திகிலையும், ஒரு வித ரகசியத்தையும் உணரவைக்கிறது. சாக்ஷிக்கும் பன்னோ தேவிக்கும் நிகழ்வும் உரையாடல்கள், அம்மாக்களுடனும், பாட்டிமார்களுடனும் நீங்கள் பேசியவற்றை நினைவுபடுத்தும். ஹேமந்தைப்போலவே பேசும் அப்பாக்களையும், அண்ணன்களையும் நீங்கள் சந்தித்திருப்பீர்கள். அப்படியில்லையென்றால் நீங்கள் நல்வாய்ப்பு பெற்றவர்கள்.
கடைசி காட்சிகளில் நுஷ்ரத் கொடுக்கும் நீண்ட சொற்பொழிவுக்கு முன்னதாகவே படத்தில் மெசேஜ் எல்லோருக்கும் புரிந்துவிடுகிறது. படத்தில் சவுண்ட் எஃபெக்ட்ஸும், பன்னோ தேவியின் நடிப்பும் நிச்சயம் உங்களை ஆட்டிப்படைக்கும். Amazon Prime-இல் ஸ்ட்ரீமாகும் சோரி உங்கள் இரவை, கொஞ்சம் பதம் பார்க்கும். கொஞ்சம் தேங்கினாலும், உங்களை கைதட்ட வைக்கும்.