இந்தியாவிலிருந்து வெளியேற முயன்ற பிரபல பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ், 200 கோடி ரூபாயை மிரட்டி பறித்த விவகாரத்தில், மும்பை விமானநிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது வெளியான தகவலின் படி அவர் துபாயில் நடக்க இருந்த ஒரு நிகச்சிக்காக சென்றதாகவும், அப்போது அவர் தடுத்து நிறுத்தப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. 


2017 ஆம் ஆண்டு அதிமுக பிளவுபட்டிருந்த போது, இரட்டை இலை சின்னத்தை மீட்பதற்காக தேர்தல் ஆணையத்திற்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் டிடிவி தினகரன், அவருடைய நண்பர் மல்லிகார்ஜுன், பெங்களூருவை சேர்ந்த தரகர் சுகேஷ் சந்திரசேகர் டெல்லி போலீசால் கைது செய்யப்பட்டனர். இதனையடுத்து அமலாக்கத்துறைக்கு இந்த வழக்கு மாற்றப்பட்டது. சென்னை மற்றும் பெங்களூர் ஆகிய இடங்களில் தரகர் சுகேஷ் சந்திரசேகருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.


இந்த அதிரடி சோதனையில், 16 சொகுசு கார்கள், 2 கிலோ தங்கம், 82 லட்சம் ரூபாய் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டது. இதனிடையே சிறையில் இருக்கும் போதே தொழிலதிபர் மனைவியை மிரட்டி 200 கோடி ரூபாய் மோசடி  செய்ததாக  டெல்லி பொருளாதார குற்றவியல் போலீசார் சார்பில் சுகேஷ் சார்பில் மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டது. 


இதனைத்தொடர்ந்து  சுகேஷ் காதலி லீனா மரியாபாலிடம்  நடத்தப்பட்ட விசாரணையில், சுகேஷ் அவருக்கு காதல் பரிசாக பல கோடி மதிப்புள்ள பொருட்களை வழங்கியது தெரிய வந்தது. அதனைத்தொடர்ந்து இந்த வழக்கில் பிரபல இந்தி நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் சாட்சியமாக சேர்க்கப்பட்ட நிலையில், அவரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. இதனிடையே சுகேஷ் ஜாக்குலின் பெர்னாண்டஸ் முத்தம் கொடுப்பது தொடர்பான புகைப்படமும் இணையத்தில் வைரலானது. இந்நிலையில், அமலாக்கத்துறை அதிகாரிகள் இவ்வழக்கு தொடர்பான 7000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது.


அமலாக்கத்துறை நடத்திய விசாரணையில், சுகேஷ் தனது இன்னொரு காதலியான ஜாக்குலின் பெர்னாண்டஸுக்கு ரூ52 லட்சம் மதிப்புள்ள குதிரையையும், ரூ9 லட்சம் மதிப்புள்ள பாரசீக பூனையையும்,  10 கோடி ரூபாயையும்  கொடுத்துள்ளதாக வாக்குமூலம் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது மட்டுமன்றி மற்றொரு சாட்சியாக சேர்க்கப்பட்ட நோரா ஃபதேஹிக்கும் இந்த வழக்குக்கும் தொடர்பு இல்லை என்பதும்  விசாரணையில் தெரிய வந்துள்ளதாக சொல்லப்படுகிறது.