உலக சுற்றுலா தினம் 2022 இன்று (27, செப்டம்பர்) கொண்டாடப்படுகிறது. இது ஐக்கிய நாடுகளின் உலக சுற்றுலா அமைப்பால் (UNWTO) தொடங்கப்பட்டது. உலக சுற்றுலா தினம் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 27 அன்று கொண்டாடப்படுகிறது. சுற்றுலாவை மேம்படுத்தவும் அதன் முக்கியத்துவத்தை புரிந்து கொள்ளவும் இது அங்கீகரிக்கப்பட்டுள்ளது. உலகத்தையும் அதன் சாராம்சங்களையும் சுற்றிப்பார்த்து அறிந்து கொள்வதில் உள்ள மகிழ்ச்சியை மக்களுக்குப் புரிய வைப்பதே இந்த நாளின் நோக்கம். இது ஒரு மிக முக்கியமான நிகழ்வு. சுற்றுலா செல்வது யாருக்கு பிடிக்காது! உலகெங்கும் உள்ள பல இடங்களில் உள்ள பல வகையான கலாச்சாரங்களை, பண்பாடுகலாய், மொழிகளை, அங்குள்ள மக்களை அறிந்துகொள்வது அவ்வளவு ஸ்வாரஸ்யமான விஷயம். அதுமட்டுமின்றி அவர்களது கட்டுமானங்கள், அவர்களது உருவாக்குங்கள் மேல் நமக்கு அறிவூட்டுகின்றன. சுற்றி பார்ப்பதே நம் வாழ்வை முழுமை அடைய செய்யும் ஒன்றாகும். அப்படிப்பட்ட வாழ்வில் நாம் அதனை செய்கிறோமா என்றால் பலரும் இல்லை. பெரும்பாலானோர் அவர்களால் முடிந்த, அருகில் உள்ள இடங்களுக்காவது சென்று விடுகின்றனர். ஆனால் பலர் வேலை வேலை என்று வேலையில் கவனம் செலுத்தி, வாழ்வதையும் பார்த்திருக்கிறோம். எனவே சுற்றுலா செல்லுங்கள், என்பதை ஊக்குவிக்கவே உலக சுற்றுலா தினம் என்று ஒரு நாள் கடைபிடிக்கப் படுகிறது.
வரலாறு
உலக சுற்றுலா அமைப்பு (UNWTO) 1979 இல் உலக சுற்றுலா தினத்தை கடைபிடிக்கத் தொடங்கியது. அதற்கான கொண்டாட்டங்கள் அதிகாரப்பூர்வமாக 1980 இல் தொடங்கியது. இது ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 27 அன்று கொண்டாடப்படுகிறது, ஏனெனில் இந்த தேதி UNWTO இன் சட்டங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆண்டு நிறைவைக் குறிக்கிறது. சட்டங்கள் 1970 இல் ஏற்றுக்கொள்ளப்பட்டன, அவை 1975 இல் UNWTO நிறுவுவதற்கு உதவியது. 1980 முதல் இப்போது வரை, உலக சுற்றுலா தினம் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 27 அன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டின் தீம்
2022 ஆம் ஆண்டின் உலக சுற்றுலா தினம் 42வது ஆண்டாக கொண்டாடப்படும் நிலையில், இந்தோனேசியாவின் பாலி நகரில் இந்த விழாவின் அதிகாரப்பூர்வ விழா நடைபெற உள்ளது. 2022 உலக சுற்றுலா தினத்தின் கருப்பொருள் 'சுற்றுலாவை மறுபரிசீலனை செய்தல்' என்பதாகும். கோவிட்-19 தொற்றுநோய்க்குப் பிறகு சுற்றுலாத் துறையின் வளர்ச்சியைப் புரிந்துகொள்வதிலும், சுற்றுலாவை மறுபரிசீலனை செய்வதிலும், வளம்பெற செய்வதிலும் அனைவரும் கவனம் செலுத்த வேண்டும் என்பதை குறிக்கிறது.
முக்கியத்துவம்
ஒரு நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதிலும் அதன் பிம்பத்தை உயர்த்துவதிலும் சுற்றுலா முக்கிய பங்கு வகிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. உலக சுற்றுலா தினம் ஏன் கொண்டாடப்பட வேண்டும் என்றால், இது சுற்றுலாவின் நன்மைகளை மேம்படுத்த உதவுகிறது. பாலியின் சுற்றுலாத் துறையின் பிரதிநிதிகள் தலைமையில் இந்த நிகழ்வு அமைக்கப்பட்டுள்ளது. UNWTO மாநிலங்களின் பிரதிநிதிகளும் இந்த நிகழ்விற்கு அழைக்கப்பட்டுள்ளார்கள்.
வாழ்த்து செய்திகள்
- பயணம் நமக்கு வேறுவிதமான மகிழ்ச்சியையும் அமைதியையும் தருகிறது. பயணத்தின் மகிழ்ச்சிக்கு ஈடாக இந்த உலகில் எதுவும் இல்லை. சுற்றுலா விரும்பிகள் அனைவருக்கும் உலக சுற்றுலா தின வாழ்த்துக்கள்.
- உலகின் அழகைக் ரசிக்க பயணம் நமக்கு உதவுகிறது. ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருப்பது மிகவும் முக்கியம். 2022 உலக சுற்றுலா தினத்தை ஒன்றாக கொண்டாடுவோம்.
- பயணம் இல்லாமல் வாழ்க்கை முழுமையடையாது. நீங்கள் வாழும் வரை உலகின் பல்வேறு மூலைகளை ஆராய வேண்டும். உலக சுற்றுலா தின வாழ்த்துகள்.
சிந்தனைத் துளிகள்
"உலகம் ஒரு புத்தகம், பயணம் செய்யாதவர்கள் ஒரே ஒரு பக்கத்தை மட்டுமே படிக்கிறார்கள்." - புனித அகஸ்டின்.
"நீங்கள் எங்கு சென்றாலும் அது எப்படியாவது உங்களுள் ஒரு பகுதியாக மாறிவிடும்." - அனிதா தேசாய்.
"தங்கம் எல்லாம் ஒளிர்வதில்லை, அலைந்து திரிபவர்கள் அனைவரும் தொலைந்து போவதில்லை." - ஜே.ஆர்.ஆர். டோல்கீன், தி பெல்லோஷிப் ஆஃப் தி ரிங்.
"கண்டுபிடிப்பின் உண்மையான பயணம் புதிய நிலப்பரப்புகளைத் தேடுவதில் இல்லை, புதிய கண்களைக் கொண்டிருப்பதில் உள்ளது." - மார்செல் ப்ரோஸ்ட்.