உலக கழிப்பறை தினம் 2022: உலக கழிப்பறை தினம் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 19 அன்று ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையால் அனுசரிக்கப்படுகிறது. 2001 ஆம் ஆண்டு இதே நாளில்தான் உலக கழிப்பறை அமைப்பு உருவாக்கப்பட்டது. எனவே இந்த தினத்தில் துப்புரவுப் பிரச்சனைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக UN-Water மற்றும் உலகெங்கிலும் உள்ள அரசாங்கங்களின் கூட்டுறவால் இந்த நாள் கொண்டாடப்படுகிறது. இந்த வருடம் இந்த நாளுக்கான தீம் 'கண்ணுக்கு தெரியாததை காணச் செய்தல்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மனித கழிவுகளை ஆறுகள், ஏரிகள் மற்றும் மண்ணில் பரப்பி, நிலத்தடி நீர் ஆதாரங்களை மாசுபடுத்துவதை தடுப்பது எப்படி என்பதை ஆராய்வதை ஐக்கிய நாடுகள் சபை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது தொடர்பான 6 சுவாரஸ்யமான வரலாற்று உண்மைகளை பார்ப்போம்.


கழிப்பறை உருவான வரலாறு


ஆங்கிலேய பிளம்பர் தாமஸ் கிராப்பர் 1860 களில் முதல் தண்ணீர் மூலம் சுத்தம் செய்யும் ஃப்ளஷ் வசதி கொண்ட கழிப்பறையை வடிவமைத்த பெருமைக்குரியவர் ஆவார். இருப்பினும், 300 ஆண்டுகளுக்கு முன்பு, 16 ஆம் நூற்றாண்டில், ஐரோப்பா ஏற்கனவே நவீன சுகாதாரத்தை கண்டுபிடித்தது. முதலாம் எலிசபெத் மகாராணியின் மகனான சர் ஜான் ஹாரிங்டன், 1592 ஆம் ஆண்டில், உயர்த்தப்பட்ட நீர்த்தேக்க தொட்டி மற்றும் ஒரு சிறிய கீழ் குழாய் கொண்ட நீர் கழிப்பறையை கண்டுபிடித்தார். ஆனால் அவரது கண்டுபிடிப்பு கிட்டத்தட்ட 200 ஆண்டுகளாக புறக்கணிக்கப்பட்டது. 1775 ஆம் ஆண்டில், அலெக்சாண்டர் கம்மிங்ஸ் என்ற ஒரு வாட்ச் மெக்கானிக், துர்நாற்றம் வராமல் இருக்க, கழிவறைப் படுகையின் அடியில் எஸ் வடிவ குழாயை உருவாக்கினார்.



காகிதப்பயன்பாட்டின் வரலாறு


கிமு 2 ஆம் நூற்றாண்டில் சீனா காகிதம் எனப்படும் பொருளைக் கண்டுபிடித்தது என்று பரவலாக அறியப்படுகிறது. அவர்கள் அந்த காகிதத்தை டாய்லெட் பேப்பரைப் போலவே பயன்படுத்தியதாக ஆதாரங்கள் தெரிவிக்கின்றன. 1391 முதல் நவீன கழிப்பறை காகிதம் தயாரிக்கப்பட்டது. இது சீனப் பேரரசரின் குடும்பத்திற்காக உருவாக்கப்பட்டது. பதினைந்தாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் காகிதம் பரவலாகக் கிடைத்தாலும், நவீன கழிப்பறை காகிதங்களின் வெகுஜன உற்பத்தி 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தொடங்கியது. ஜோசப் சி. கயேட்டி 1857 இல் வணிக ரீதியாக தொகுக்கப்பட்ட முதல் கழிப்பறை காகிதத்தை உருவாக்கிய பெருமைக்குரியவர் ஆவார்.


தொடர்புடைய செய்திகள்: BCCI: இந்திய கிரிக்கெட் தேர்வுக்குழு கூண்டோடு நீக்கம் - பி.சி.சி.ஐ. அதிரடி...! என்ன காரணம்..?


வார்த்தையின் தோற்றம்


மத்திய பிரஞ்சு வார்த்தையான ‘toilette’ என்றால் “சிறிய துண்டு” என்று பொருள். இந்த வார்த்தை ஆங்கிலத்தில் ‘டாய்லெட்’ ஆனது. இது மக்கள் தங்கள் தலைமுடியை அலங்கரிக்கும் போது அல்லது ஷேவிங் செய்யும்போது தோளில் போடும் துணியைக் குறிக்கிறது. பின்னர் அது டிரஸ்ஸிங் டேபிளை மூடும் துணி என்று பொருள் கொடுக்கப்பட்டது. இறுதியில், இந்த வார்த்தைக்கு இன்னும் சுருக்கமான அர்த்தம் கொடுக்கப்பட்டது. துவைத்தல், சீர்ப்படுத்துதல் மற்றும் ஆடை அணிதல் போன்ற முழு செயல்முறையிலும் இந்த வார்த்தை பயன்படத் தொடங்கியது.



விண்வெளி கழிப்பறை


23 மில்லியன் டாலர் செலவில் உருவாகியுள்ள நாசாவின் புதிய விண்வெளி கழிப்பறை அமைப்பு யுனிவர்சல் வேஸ்ட் மேனேஜ்மென்ட் சிஸ்டம் (UWMS) என அழைக்கப்படுகிறது. விண்வெளி நிலையத்தில் முன்பு பயன்படுத்தப்பட்ட கழிப்பறையை விட இது 65% சிறியது மற்றும் 40% இலகுவானது என்று குறிப்பிடப்படுகிறது. இந்த புதிய UWMS செப்டம்பர் 29 அன்று, அறிமுகப்படுத்தப்பட்டது.


உலகின் முதல் சாக்கடையுடன் இணைக்கப்பட்ட கழிப்பறைகள்


இந்தோ பள்ளத்தாக்கில் (நவீன பாகிஸ்தானில்) மொஹஞ்சதாரோ நகரில் கழிவுநீர் அமைப்புடன் இணைக்கப்பட்ட கழிவறைகளைக் கொண்ட முதல் கட்டிடங்களின் தடயங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. நகரவாசிகள் தங்கள் கழிவறைகளை தண்ணீரில் கழுவியதாக என்று நம்பப்படுகிறது மற்றும் கழிவுநீர் அமைப்பு மூலம், இந்த கழிவுநீர் இந்தோ நதிக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.


கண்டுபிடிக்கப்பட்ட பழமையான கழிப்பறை


ஜப்பானில் 5,500 ஆண்டுகள் பழமையான கழிவறையின் தடயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இருப்பினும், தற்போதுள்ள மிகப் பழமையான கழிவறை என்னும் பெயர், கியோட்டோவில் உள்ள ஜென் ரின்சாய் பிரிவின் கோவிலான டோஃபுகுஜியில் உள்ள பல நூற்றாண்டுகள் பழமையான கட்டமைப்பு பெற்றுள்ளது. இது முரோமாச்சி காலத்தில் (1333-1568) கட்டப்பட்டது என்று கூறுகிறார்கள். இது இன்று பயன்பாட்டில் இல்லை என்றாலும், தற்போதுள்ள கழிவறை ஒரு முக்கியமான கலாச்சார சொத்தாக பராமரிக்கப்படுகிறது.