பக்கவாதம் ஏற்படுத்தும் பாதிப்புகள் பற்றிய விழிப்புணர்வை அனைவரும் பெற வேண்டும் என நோக்கத்தோடு ஆண்டுதோறும் அக்டோபர் 29-ஆம் தேதி ‘ உலக பக்கவாத தினம்’ கடைப்பிடிக்கப்படுகிறது.
பக்கவாதம் எனும் பேராபத்து
பக்கவாதம் என்றதும் பெரும்பாலானோருக்கு இதயம் சார்ந்த பிரச்னை என்ற எண்ணம் இயல்பிலேயே ஏற்படும். ஆனால், பக்கவாதம் ரத்த நாளங்களில் அடைப்பை உருவாக்கி மூளையின் பாகங்களை செயலிழக்க செய்துவிடும். மனிதனுக்கு ஏற்படும் நோய்களிலேயே இது மிகவும் ஆபத்தானது என்று சொல்லப்படுகிறது. ஏனெனில், இது எந்தவித அறிகுறியும் இல்லாமல் பாதிப்பை ஏற்படுத்திவிடும். ஆங்கிலத்தில் ஸ்ட்ரோக் (Stroke). மூளைக்கு சீரான ரத்த ஓட்டம் இல்லாதது, ரத்தக் கசிவு போன்ற காரணங்களால் பக்கவாதம் ஏற்படுகிறது. இரத்த ஓட்டத்தில் தடை ஏற்பட்டால் உடலின் பாகங்கள் செயல்பாட்டை இழந்துவிடும். அசைவே இருக்காது. அதிக அளவு ரத்த அழுத்தம், தேவையெற்ற கெட்ட கொழுப்பு உடலில் சேர்வதால் பக்கவாதம் வர காரணங்களாக அமைந்துவிடுவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இது மரபு ரீதியாகவும் ஏற்படும் ஒன்றாகும். பக்கவாதம் வந்துவிட்டால் சரியாகாமலே போய்விடும் என்று இல்லை. சிலருக்கு தற்காலிகமாகவும், நீண்ட நாட்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்திவிடும். இரத்த குழாயில் ஏற்பட்ட அடைப்பின் அளவிற்கு ஏற்ப பாதிப்பு அமையும்.
உடனடி அறிகுறிகள்
பக்கவாதம் ஆபத்தானது என்று சொல்வதற்கு முக்கிய காரணம் - இதற்கு இதுதான் அறிகுறி என்று குறிப்பிட்டு சொல்லிவிட முடியாது. ஆனால், உடனடி அறிகுறிகளை கவனித்து மருத்துவரை அணுகுவது நல்லது. தலைவலி, பார்வை மங்குதல், திடீர் மயக்கம், கை, கால்களில் தளர்ச்சி, உணர்ச்சிக் குறைவு, மரத்துப் போதல், போன்றவை இதன் உடனடி அறிகுறிகள் ஆகும்.
உலக பக்கவாதம் தினம்
வயதுவரம்பின்றி இந்த நோய்மை ஏற்பட வாய்ப்புள்ளது. குறிப்பாக 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இதன் பாதிப்பு ஏற்பட அதிக வாய்ப்பு என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். உடல் எடையை சீராக பராமரிப்பது, மன அழுத்தம் ஏற்படாமல் இருப்பது, உடலையும், மனதையும் ஆரோக்கியமான வைத்து கொள்வது உள்ளிட்டவற்றை வலியுறுத்தியும், பக்கவாதம் பாதிப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தவும் ஆண்டுதோறும் அக்டோபர் -29ம் தேதி ‘உலக பக்கவாத தினம்’ கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
பக்கவாதம் பாதிப்பு ஏற்படாமல் இருக்க சில வழிமுறைகளை மருத்துவ உலகம் பரிந்துரைகிறது.
- புகை பழக்கம் இருந்தால் அதிலிருந்து விடுபடவும். மருத்துவரை அணுகி புகைப்பிடிக்கும் பழக்கத்தை கைவிடலாம்.
- சீரான உடல் எடையை பராமரிக்கவும். அதிக உடல் பருமன் இருப்பின், முயற்சி செய்து எடையை கட்டுக்குள் வைக்கவும். ஆரோக்கியமாக இருக்க குறைந்தது 20 நிமிடங்களாவது உடற்பயிற்சி, யோகா, நடைப்பயிற்சி என ஏதாவது ஒன்றை செய்யவும்.
- சரியான உணவுப் பழக்கம் இருப்பதை உறுதி செய்யவும். அதிக கெட்ட கொழுப்புள்ள உணவுகள், பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட பதப்படுத்தப்பட்ட உணவுகள், துரித உணவுகள் போன்றவற்றை அடிக்கடி உண்பதை தவிர்க்கவும்.
- இரத்தத்தில் சர்க்கரை அளவு சீராக இருப்பதையும் கவனியுங்கள்.
- இரத்த அழுத்தத்தை சீராக வைத்தல், சந்தோஷமான சூழல், புகை, மது பழக்கம் கைவிடுதல் போன்றவை இந்த நோயை வரவிடாமல் பாதுகாக்கும்.
- மேலும், இதய நாள நோய், சர்க்கரை குறைபாடு கொண்டவர்களைப் பக்கவாதம் தாக்கும் ஆபத்து அதிகம் என்று தெரிவிக்கின்றனர். எனவே, இவர்கள் மிகவும் கவனமாக இருப்பது அவசியம்.
ஆண்டுக்கு ஆண்டு பக்கவாத நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே இருக்கிறது. இதை தடுப்பதற்கு மக்களிடம் போதிய அளவு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.