பாலஸ்தீனத்தைச் சேர்ந்த ஹமாஸ் அமைப்புக்கும் இஸ்ரேலுக்கும் இடையே நடந்து வரும் போர், மேற்காசியாவை மிக பெரிய நெருக்கடிக்கு தள்ளியுள்ளது. தாக்குதலை ஹமாஸ் தொடங்கியிருந்தாலும், அதற்கு பதில் தாக்குதல் நடத்துகிறோம் என்ற பெயரில் இஸ்ரேல் நடத்தி வரும் போரால் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டு வருகின்றனர்.
அவசர உதவி தடைபடும் சூழல்:
பாலஸ்தீன காசா பகுதியில் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் இதுவரை, 8,000 பாலஸ்தீனயர்கள் கொல்லப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் குழந்தைகள், பெண்கள் ஆவர். காசாவில் நடந்து வரும் போரால் உடைமைகளை இழந்து சிக்கித் தவித்து வரும் மக்களுக்கு டிரக் மூலம் உணவு, மருந்து உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களை ஐநா வழங்கி வந்தது. ஆனால், தற்போது எரிபொருள் காலியாகும் சூழல் ஏற்பட்டுள்ளதால், அவசர உதவி தடைபடும் சூழல் உருவாகியுள்ளதாக ஐநா தெரிவித்துள்ளது.
இந்த விவகாரத்தில் இந்தியா எடுத்துள்ள நிலைபாடு முக்கியத்துவம் பெறுகிறது. ஹமாஸ் தாக்குதலை கண்டித்துள்ள அதே நேரத்தில், இரு நாட்டு கொள்கையில் உறுதியுடன் இருப்பதாக பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸிடம் பிரதமர் மோடி தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், மேற்காசியாவில் மோசமாகி வரும் பாதுகாப்பு சூழல் குறித்து எகிப்து அதிபர் அப்துல் பத்தா எல்-சிசியும் இந்திய பிரதமர் மோடியும் விவாதித்துள்ளனர். இஸ்ரேல் - ஹமாஸ் போரால் அதிகரித்து வரும் பயங்கரவாத செயல்கள் குறித்து இரு நாட்டு தலைவர்களும் கவலை தெரிவித்துள்ளனர்.
எகிப்து அதிபருக்கு போன் போட்டு பேசிய பிரதமர் மோடி:
பிரதமர் மோடி, இது தொடர்பாக எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்ட பதிவில், "நேற்று, எகிப்து அதிபர் எல் சிசியுடன் பேசினேன். மேற்கு ஆசியாவில் மோசமடைந்து வரும் பாதுகாப்பு சூழல், மனிதாபிமான நிலைமை குறித்து கருத்துப் பரிமாற்றம் செய்யப்பட்டது.
பயங்கரவாதம், வன்முறை மற்றும் பொதுமக்கள் தங்களின் உயிரை பறி கொடுப்பது பற்றி கவலைகளை பகிர்ந்து கொண்டோம். அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை விரைவாக மீட்டெடுப்பதற்கும் மனிதாபிமான உதவியை எளிதாக்குவதற்கும் நாங்கள் உடன்படுகிறோம்" என குறிப்பிட்டுள்ளார்.
நேற்று ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் அவசர கூட்டத்தில், காசாவில் போர் நிறுத்தத்தை வலியுறுத்தி தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக பிரேசில், சீனா, எகிப்து, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், சிங்கப்பூர், சவுதி அரேபியா உள்ளிட்ட 120 நாடுகள் வாக்களித்த நிலையில், தீர்மானத்திற்கு எதிராக இஸ்ரேல், அமெரிக்கா உள்ளிட்ட 14 நாடுகள் வாக்களித்தன. இந்தியா, ஆஸ்திரேலியா, கனடா, ஜெர்மனி, ஜப்பான், உக்ரைன், பிரிட்டன் உள்ளிட்ட 45 நாடுகள் தீர்மானத்திற்கு வாக்களிக்காமல் புறக்கணித்தது.
ஐநா தீர்மானம் மீதான வாக்களிப்பின்போது இந்தியா எடுத்த நிலைபாட்டுக்கு விளக்கம் அளித்து பேசிய ஐநாவுக்கான இந்தியாவின் நிரந்தர துணை தூதர் யோஜனா படேல், "அக்டோபர் 7ஆம் தேதி இஸ்ரேலில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்கள் அதிர்ச்சிகரமானவை. கண்டனத்துக்கு உரியவை. பணயக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டவர்களை நினைத்து வருந்துகிறோம். அவர்களை உடனடியாகவும் நிபந்தனையின்றியும் விடுதலை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்" என்றார்.