கார்த்தி நடித்த ஜப்பான் பட நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் சூர்யா, தனது அடுத்த படங்களின் அப்டேட் பற்றி தெரிவித்துள்ளார். 


ராஜூ முருகன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள படம் “ஜப்பான்”. ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரித்த்துள்ள இந்த படத்தில் கார்த்தி, அனு இம்மானுவேல், வாகை சந்திரசேகர், சுனில் வர்மா, விஜய் மில்டன், கே.எஸ்.ரவிகுமார், பவா செல்லத்துரை, ஜித்தன் ரமேஷ் என பலரும் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள ஜப்பான் படம் தீபாவளி வெளியீடாக தியேட்டரில் வெளியாக உள்ளது.  இப்படம் கார்த்தியின் 25வது படம் என்பதால் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது.


இதனிடையே நேற்று (அக்டோபர் 29) ஜப்பான் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நிகழ்ச்சி சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் மிக பிரமாண்டமாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நடிகர் சூர்யா கலந்து கொண்டு படத்தின் ட்ரெய்லரை வெளியிட்டார். மேலும் இந்நிகழ்ச்சியில் தமன்னா, சத்யராஜ், சிபிராஜ், இயக்குநர்கள் லோகேஷ் கனகராஜ், சிறுத்தை சிவா, ஹெச்.வினோத், சுசீந்திரன், பா.ரஞ்சித், பி.எஸ்.மித்ரன், முத்தையா, பொன்வண்ணன் உள்ளிட்ட பலரும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு கார்த்தி பற்றிய நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.


தொடர்ந்து இந்நிகழ்ச்சியில் பேசிய சூர்யா, படித்து முடித்து விட்டு கார்மெண்ட்ஸ் பிசினஸ், அது இது என ஒரு ரவுண்ட் சுற்றி விட்டு தான் சினிமாவுக்குள் வந்தேன். என்னுடைய பாணி, கார்த்தியுடைய பாணி இரண்டுமே வெவ்வேறானது. கைலி கட்டுவது, மது அருந்துவது போன்ற காட்சிகளோடு கதை வந்தால் அதை கார்த்தியிடம் அனுப்பி விடுவேன். லோகேஷ் தான் அந்த தோற்றத்தை மாற்றினார். ரோலக்ஸ் மாதிரி ஒரு கேரக்டர் கொடுத்து இன்னொரு பரிணாமத்தை கொடுத்துள்ளார். 


கடந்த ஓராண்டாக ரசிகர்களை பெரிய அளவில் சந்திக்கவே இல்லை. சிவாவுடன் இணைந்து அழகாக ஒரு படம் உருவாகி கொண்டிருக்கிறது. நிச்சயம் கங்குவா நீங்கள் காத்திருப்பதற்கு ஏற்ற கொண்டாட்டமாக இருக்கும். அதேபோல் டில்லிக்கு (கைதி 2) அப்புறம் ரோலக்ஸ் படம் உருவாகும் எனவும் தெரிவித்தார். இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.


ஒன்றரை ஆண்டுகளாக காத்திருக்கும் ரசிகர்கள்  


தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யா, கடைசியாக கடந்த ஆண்டு எதற்கும் துணிந்தவன் படத்தில் நடித்திருந்தார். இப்படம் 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியானது. தொடர்ந்து சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா படத்தில் நடித்து வருகிறார். 3டி தொழில்நுட்பத்தில் 10 மொழிகளில் உருவாகும் இப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை திரையுலகினரிடையே உருவாக்கியுள்ளது. மேலும் சூரரைப்போற்று மூலம் சூர்யாவுக்கு மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்த சுதா கொங்காரா இயக்கத்தில் மீண்டும் சூர்யா ஒரு படம் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 




மேலும் படிக்க: Actor Suriya: “கார்த்தியோட இந்த நிலைமைக்கு காரணம் அவங்கதான்” - சூர்யா கை காட்டியது யாரை தெரியுமா?