ஆயுத எழுத்து படம் பார்த்த பின்னர் தான் நான் இயக்குநராக ஆசைப்பட்டேன் என்று கூறியிருக்கிறார் இயக்குநர் அருண்ராஜா காமராஜ்.


அவர் பேட்டியிலிருந்து..


நாம் எவ்வளவு ஆசை வேண்டுமானால் படலாம். ஆனால் அதற்கு நாம் நம்மை தகுதிப்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும். சினிமாவில் மட்டும் அல்ல வாழ்க்கையிலும் ஒவ்வொருவரும் தன்னை தகுதிப்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும்.


எல்லாருக்கும் பிடிச்சவர் தான் ஒரு டாப் ஹீரோவாக மாற முடியும். நெல்சனோடு பொட்டன்ஷியல் என்னவென்று யாருக்கும் தெரியாது. எப்பவுமே நாம் வளர வேண்டும் என நினைத்தால் நாம் ஒரு கம்ஃபோர்ட் ஜோனில் இருந்து வெளியே வர வேண்டும். என் இலக்கு இயக்குநராக வேண்டும் என்பதேதான். அதனால் தான் நான் பாடலாசிரியர், பாடகர் என்பதை எல்லாம் உடைத்து வெளியே வந்தேன்.


எப்பவுமே எல்லாருக்கும் பிடிக்கும் படத்தை கொடுத்துவிட முடியாது. ஆனால் எல்லோரும் கொண்டாடும் படமும் வருகின்றன. அப்படி எல்லோரும் கொண்டாடும் படத்தை எடுக்கும் அளவுக்கு நம்மை நாமே தகுதிபடுத்திக் கொள்ள வேண்டும். நெல்சன் கொண்டாடப்படவேண்டியவர். அவரை குறைத்து எடைபோடக்கூடாது


கனா படம் ஏன் வந்த புதிதில் கொண்டாடப்படவில்லை. கனாவை அந்த டைமில் கொண்டாடவில்லை. நல்லா இருக்கு என்று மட்டும் சொன்னார்கள். குடும்பங்களுக்கு பிடித்திருந்தது. அதுதான் உலகிலேயே முதன்முதலாக மகளிர் கிரிக்கெட் பற்றி பேசிய படம். நான் அப்போ அந்தப் படத்திற்கு எதிர்பார்த்த வரவேற்பு இப்போது கிடைத்துள்ளது. அப்போது கிடைக்கவில்லை. ஆனால் அதற்காக துவண்டுபோய் புதிதாக யோசிப்பதை நிறுத்தவில்லை. முதல் படத்திலேயே உச்சம் தொட்டுவிட முடியாது. இரண்டாவது படத்துக்கு தயாராகும் உத்வேகம் தான் முதல் படம். இப்படியே என் அடுத்தடுத்த படங்களுக்கு மோட்டிவேஷன் எடுத்துக் கொள்வேன்.


எனக்கு இயக்குநராக வேண்டும் என்ற ஆசை நான் கல்லூரி நாட்களில் ஆயுத எழுத்த பார்த்த பின்னர் தான் வந்தது. ஒவ்வொருவருக்கும் அப்படி ஒரு இன்ஸ்பிரேஷன் வரும். அப்படித்தான் எனக்கு ஆயுத எழுத்து. இன்னொரு ஆயுத எழுத்து எடுக்க வரவில்லை. என்னுடைய கனவை நனவாக்க வந்துள்ளேன்.என்னை பாடல் எழுதவைத்தது, பாட வைத்தது, இயக்க வைத்தது எல்லாமே சிவாதான். சிவா என்னை கைபிடித்துக் கூட்டிச் சென்றுள்ளார்.


நான் எழுதிய பாடல்கள் பற்றி சொல்ல வேண்டுமென்றால், எல்லா மாதிரியான எழுத்துகளும் இருக்கின்றன. ஆனால் என்ன மாதிரியான எழுத்து வேண்டுமென்பதை நாம் தான் தீர்மானிக்க வேண்டும். அதை வேறு யாரும் நிர்ணயிக்க முடியாது. என் பாடல்களில் இருப்பதாக நீங்கள் சொல்லும் உத்வேகம் நான் தீர்மானித்தது” இவ்வாறு துள்ளலாக பேசினார்.