இன்று உலக சிரிப்பு நாள். மே மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமை இந்த நாளானது கொண்டாடப்படுகிறது. அதனைப் பற்றி காணலாம்.


கமல்ஹாசன் நடித்த ஆளவந்தான் படத்தில் “சிரி..சிரி” என்ற பாடல் வரும். அதில் இடம்பெற்ற ஒருவரி சிரிப்பு எந்தளவுக்கு முக்கியம் என்பதை சுட்டிக்காட்டுவது போல இருக்கும். 


                    ”சிரிக்க தெரிந்த மிருகத்திற்கு மனிதன் என்று பெயர்
                     சிரிக்க மறந்த மனிதனுக்கு மிருகம் என்ற பெயர்” 


அந்த அளவுக்கு நாம் எந்தளவுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறோம் என்பதை சிரிப்பு காட்டிக் கொடுத்து விடும். அதேபோல் ஒருவரிடம் நாம் எந்த அளவு மரியாதை வைத்திருக்கிறோம் என்பதை சிரிப்பு சொல்லி விடும். வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும் என வார்த்தையாக சொல்லும் காலக்கட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அந்த அளவுக்கு மன அழுத்தம், பணிகள், வாழ்க்கை சூழல் ஆகியவை சிரிப்பை கொஞ்சம் கொஞ்சமாக பிரித்து கொண்டிருக்கிறது. 


வரலாறு 


1998 ஆம் ஆண்டு டாக்டர் மதன் கட்டாரியா, சிரிப்பு யோகா என்ற உலகளாவிய இயக்கத்தைத் தொடங்கினார். ஒரு நபரின் முகபாவனைகள் அவர்களின் உணர்ச்சிகளின் மீது தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதன் பின்னணியில் இந்த இயக்கம் தொடங்கப்பட்டது. உலகம் முழுவதும் 115 க்கும் மேற்பட்ட நாடுகளில் ஆயிரக்கணக்கான சிரிப்பு கிளப்கள் செயல்பட்டு வருகிறது. 70க்கும் மேற்பட்ட நாடுகளில் மே மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமை உலக சிரிப்பு தினம் கொண்டாடப்படுகிறது.


கடந்த 2000 ஆம் ஆண்டு இந்தியாவை தொடர்ந்து டென்மார்க்கில் HAPPY-DEMIC என்று அழைக்கப்படும் சிரிப்பு நாள் கொண்டாடப்பட்டது. அங்குள்ள கோபன்ஹேகனில் உள்ள டவுன் ஹால் சதுக்கத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் 10000க்கும் மேற்பட்டோர் திரண்டனர். இது மிகப்பெரிய சந்திப்பாக பார்க்கப்பட்டது. 


திரைப்படங்கள், நாடகங்கள், ஜோக்குகள், நம்முடைய வார்த்தை ஜாலங்கள் மூலமாக ஒருவரிடையே சிரிப்பை வரவழைக்கலாம். சிரிப்பு நம்மை வெகுகாலம் வாழ வைக்கும் அருமருந்துகளில் ஒன்றாகும்.


சிரிப்பதால் கிடைக்கும் பலன்கள் 


சிரிப்பதால் நம் உடலுக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கிறது. சிரிப்பு யோகா என்று ஒன்று தனியாக உள்ளது. தினமும் சில நிமிடங்கள் வாய் விட்டு சிரியுங்கள். 



  • மன மகிழ்ச்சியுடன் சிரிப்பதால் முழு உடலுக்கும் தேவையான ஓய்வானது கிடைத்து மீண்டும் நாம் சுறுசுறுப்புடன் செயல்பட தூண்டுகிறது. 

  • சிரிப்பு மன அழுத்தத்தை குறைத்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. 

  • சிரிப்பானது இதயத்தைப் பாதுகாப்பதோடு இரத்த நாளங்களின் செயல்பாட்டை மேம்படுத்துகிறது.

  • ஒரு நாளைக்கு 10 முதல் 15 நிமிடங்கள் சிரித்தால் 40 கலோரிகள் வரை எரிக்கப்படுகிறது.