CSK VsPBKS, IPL 2024: சென்னை மற்றும் பஞ்சாப் அணிகள் மோத உள்ள போட்டி, மாலை 3.30 மணிக்கு தர்மசாலா மைதானத்தில் நடைபெற உள்ளது.


ஐபிஎல் தொடர் 2024:


இந்திய கிரிக்கெட் திருவிழாவான ஐபிஎல் தொடரின் 17வது சீசன் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. ஏற்கனவே 52 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ள நிலையில், பிளே-ஆஃப் ரேஸ் வேகமெடுத்துள்ளது. மும்பை அணி நடப்பு தொடரில் இருந்து முதல் அணியாக வெளியேறி உள்ளது. மீதமுள்ள 9 அணிகளும் 4 இடங்களுக்காக முட்டி மோதி வருகின்றன. அந்த வகையில் இன்றைய போட்டியில், ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ்  மற்றும் சாம் கர்ரன் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் ஆகிய அணிகள் மோத உள்ளன.


சென்னை - பஞ்சாப் பலப்பரீட்சை:


இமாச்சலபிரதேச மாநிலத்தில் உள்ள தர்மசாலா மைதானத்தில், மாலை 3.30 மணிக்கு இப்போட்டி தொடங்குகிறது. சென்னை அணி இதுவரை விளையாடிய 10 போட்டிகளில் ஐந்தில் வென்று,  புள்ளிப்பட்டியலில் ஐந்தாவது இடத்தில் உள்ளது. கடைசியாக விளையாடிய நான்கு லீக் போட்டிகளில்  மூன்று தோல்விகளை சந்தித்துள்ளது. அதில் பஞ்சாப் அணியுடனான தோல்வியும் அடங்கும்.  இதனால், இன்றைய போட்டியில் வென்று பழிதீர்ப்பதோடு,  பிளே-ஆஃப் சுற்றுக்கான தனது வாய்ப்பை தக்க வைக்கவும் சென்னை அணி  வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. பஞ்சாப் அணியோ 10 போட்டிகளில் விளையாடி நான்கில்  மட்டுமே வென்று புள்ளிப்பட்டியலில் எட்டாவது இடத்தில் உள்ளது. அதேநேரம், பிளே-ஆஃப் வாய்ப்பை தக்கவைக்க மீதமுள்ள அனைத்து லீக் போட்டிகளிலும் பஞ்சாப் அணி வெற்றி பெற வேண்டியது அவசியம். சென்னை அணிக்கு எதிராக களம் கண்ட கடைசி 5 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ள உத்வேகத்துடன் பஞ்சாப் அணி இன்று களமிறங்குகிறது. எனவே இந்த போட்டியில் பரபரப்பிற்கு பஞ்சமிருக்காது. போட்டியின் நேரலையை தொலைக்காட்சியில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் அலைவரிசையிலும், ஒடிடியில் ஜியோ சினிமா செயலியிலும் ரசிகர்கள் கண்டுகளிக்கலாம்.


பலம், பலவீனங்கள்:


உள்ளூர் மைதானத்தில் விளையாடுவது பஞ்சாப் அணிக்கு முதல் பலமாக பார்க்கப்படுகிறது. தொடர் தோல்விகளால் துவண்டு போய் இருந்த அந்த அணி, கடைசியாக விளையாடிய இரண்டு லீக் போட்டிகளிலும் வென்று வலுவான கம்பேக் கொடுத்துள்ளது. பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலும், கடந்த இரண்டு போட்டிகளில் செயல்பட்டதை போன்றே,  செயல்பட்டால் இன்றைய போட்டியிலும் பஞ்சாப் அணியால் வாகை சூட முடியும். பேர்ஸ்டோ, ஷஷாங்க் சிங் மற்றும் அசுதோஷ் சர்மா ஆகியோர் இந்த சீசனில் பஞ்சாப் அணியின் தூண்களாக மாற்யுள்ளனர். பந்துவீச்சில் அந்த அணி இன்னும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியுள்ளது.


பவர்பிளேயில் ரன் சேர்க்க முடியாமல் தடுமாறுவது சென்னை அணியின் மிகப்பெரிய பலவீனமாக உள்ளது. ரகானேவை பிளேயிங்லெவனில் இருந்து நீக்க வேண்டும் என ரசிகர்களே கோரிக்கை வைக்க தொடங்கியுள்ளனர். கேப்டன் ருதுராஜ், ஷிவம் துபே நல்ல ஃபார்மில் உள்ளனர். சாஹர் காயமடைந்து இருப்பது, முஸ்தஃபிசுர் சொந்த ஊர் திரும்பி இருப்பது சென்னை அணியின் பவுலிங் யூனிட்டை மேலும் வலுவிழக்கச் செய்துள்ளது. எனவே இன்றைய போட்டியில் வெல்ல சென்னை அணி கடுமையாக உழைக்க வேண்டி இருக்கிறது.


நேருக்கு நேர்:


ஐபிஎல் வரலாற்றில் இதுவரை இரு அணிகளும் 29 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில் சென்னை அணி 15 முறையும், பஞ்சாப் அணி 14 முறையும் வெற்றி பெற்றுள்ளது. சென்னை அணிக்கு எதிராக ஒரு போட்டியில் பஞ்சாப் அணி அதிகபட்சமாக 231 ரன்களையும், குறைந்தபட்சமாக 92 ரன்களையும் பதிவு செய்துள்ளது. அதேநேரம், பஞ்சாப் அணிக்கு எதிராக ஒரு போட்டியில் சென்னை அணி அதிகபட்சமாக 240 ரன்களையும், குறைந்தபட்சமாக 120 ரன்களையும் பதிவு செய்துள்ளது.


தர்மசாலா மைதானம் எப்படி?


தர்மசாலா மைதானம் வேகப்பந்து வீச்சாளர்களால் விரும்பப்படும் மைதானங்களில் ஒன்றாகும். இது வேகம் மற்றும் பவுன்சர்களுக்கு பெயர் பெற்றது. முதலில் பந்துவீசுவதைத் தேர்ந்தெடுத்து, எதிரணியை குறைந்த ரன்களுக்குள் கட்டுப்படுத்துவதே சிறந்த முடிவாக இருக்கும்.


உத்தேச அணி விவரங்கள்:


பஞ்சாப்: ஜானி பேர்ஸ்டோவ், பிரப்சிம்ரன் சிங், ரிலீ ரோசோவ், சாம் கர்ரன், ஜிதேஷ் சர்மா, ஷஷாங்க் சிங், அசுதோஷ் சர்மா, ராகுல் சாஹர், ஹர்ப்ரீத் பிரார், ஹர்ஷல் படேல், ககிசோ ரபாடா


சென்னை: அஜிங்க்யா ரகானே, ருதுராஜ் கெய்க்வாட், டேரில் மிட்செல், ஷிவம் துபே, எம்எஸ் தோனி , மொயீன் அலி, ரவீந்திர ஜடேஜா, தீபக் சாஹர், துஷார் தேஷ்பாண்டே, முஸ்தபிசுர் ரஹ்மான், மதீஷா பத்திரனா