மார்ச் மாதம் 22 ஆம் தேதி தொடங்கிய 17வது ஐபிஎல் தொடரில் லீக் போட்டிகள் நாளுக்கு நாள் ஐபிஎல் ரசிகர்களுக்கு சுவாரசியத்தை ஏற்படுத்தி வருகின்றது. குறிப்பாக விராட் கோலி இடம் பெற்றுள்ள பெங்களூரு அணி நடப்பு சீசனில் தொடக்கத்தில் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தாலும் லீக் போட்டிகள் முடியும் தருவாயில் சிறப்பாக விளையாடி தனது பிளே ஆஃப் வாய்ப்பினை தொடர்ந்து நீட்டிக்கச் செய்து கொண்டே இருக்கிறது.


ப்ளே ஆஃப் வாய்ப்பில் நீடிக்கும் பெங்களூரு


குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் நான்கு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி பெற்ற வெற்றி நடப்பு சீசனில் தனது நான்காவது வெற்றியாக அமைந்துள்ளது. இதன் மூலம் புள்ளி பட்டியலில் பத்தாவது இடத்தில் இருந்த பெங்களூர் அணி ஏழாவது இடத்திற்கு முன்னேறியது. பெங்களூர் அணி இதுவரை 11 போட்டிகளில் விளையாடி நான்கில் வெற்றியும் 7ல் தோல்வியும் சந்தித்துள்ளது.




பெங்களூர் அணி தனக்கு மீதமுள்ள மூன்று போட்டிகளிலும் மிகப்பெரிய வெற்றியை பெற்றால் தனது பிளே ஆஃப் வாய்ப்பினை கிட்டத்தட்ட உறுதி செய்ய முடியும். அதாவது, பஞ்சாப் கிங்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு எதிரான போட்டியில் கட்டாயம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்று தனது ரன்ரேட்டினை ப்ளஸ்க்கு மாற்றவேண்டும்.  இதில் பஞ்சாப் அணியை மட்டும் தர்மசாலாவில் எதிர்கொள்ளவுள்ள பெங்களூரு அணி டெல்லி மற்றும் சென்னை அணியை தனது சொந்த மைதானத்தில் எதிர்கொள்ளவுள்ளது. 


மற்ற அணிகளுக்கு இடையிலான போட்டி முடிவுகள்


பெங்களூரு அணி வெற்றி பெறுவது மட்டும் இல்லாமல் மற்ற அணிகளுக்கு இடையிலான போட்டியின் முடிவுகளும் பெங்களூர் அணிக்கு சாதகமாக அமைய வேண்டும். இதன் அடிப்படையில் மீதமுள்ள லீக் போட்டிகளில் பெங்களூர் அணிக்கு சாதகமான முடிவுகளை ஏற்படுத்த வேண்டிய போட்டிகள் எவை எவை என்றும் அதன் முடிவுகள் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை இந்த தொகுப்பில் காணலாம். 



  • பஞ்சாப் மற்றும் சென்னை அணிகளுக்கு இடையேயான போட்டியில் பஞ்சாப் அணி தனது ரன் ரேட்டில் எந்தவித மாற்றத்தையும் ஏற்படுத்தாத வகையில் வெற்றி பெற வேண்டும். 


  • லக்னோ மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையேயான போட்டியில் கொல்கத்தா அணி வெற்றி பெற வேண்டும். 


  • மும்பை மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கு இடையேயான போட்டியில் மும்பை அணி வெற்றி பெற வேண்டும். 


  • டெல்லி மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டியில் ராஜஸ்தான் அணி வெற்றி பெற வேண்டும். 


  • ஹைதராபாத் மற்றும் லக்னோ அணிகளுக்கு இடையேயான போட்டியில் இரு அணிகளில் ஏதாவது ஒரு அணி ரன் ரேட்டில் எந்தவித மாற்றத்தையும் ஏற்படுத்தாத வகையில் வெற்றியை தழுவ வேண்டும். 


  • குஜராத் மற்றும் சென்னை அணிகள் இடையேயான போட்டியில் குஜராத் அணி சென்னை அணியை வீழ்த்த வேண்டும். 


  • டெல்லி மற்றும் லக்னோ அணிகள் இடையான போட்டியில் டெல்லி அணி வெற்றி பெற வேண்டும். ஆனால் இந்த வெற்றியின் மூலம் டெல்லி அணியின் ரன் ரேட்டில் எந்தவித மாற்றமும் ஏற்படக் கூடாது.


  • ராஜஸ்தான் மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையேயான போட்டியில் ராஜஸ்தான் அணி வெற்றி பெற வேண்டும்.

  • ஹைதராபாத் மற்றும் குஜராத் அணிகளுக்கு இடையேயான போட்டியில் ஹைதராபாத் அணி வெற்றி பெற வேண்டும்.


  • மும்பை மற்றும் லக்னோவுக்கு இடையான போட்டியில் மும்பை அணி வெற்றி பெற வேண்டும்.


  • ஹைதராபாத் மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையேயான போட்டியில் ஹைதராபாத் அணி வெற்றி பெற வேண்டும். 


மேற்கண்டவாறு போட்டி முடிவுகள் அமைந்தால் புள்ளி பட்டியலில் நான்காவது இடத்தில் பெங்களூர் அணி இடம் பெற்று ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பை பெறும். அவ்வாறு அமையாவிட்டால் பெங்களூர் அணிக்கு ஈசாலா கப்  இந்த முறையும் நகி.