மனிதர்கள் முதல் அனைத்து உயிரினங்களும் முதலில் கேட்கும் ஒலி, கருவறையில் இருக்கும்போது தாயின் இதயத்துடிப்புதான். ஒரு குழந்தை தாயின் வயிற்றில் வளரத்தொடங்கும் மூன்றாவது மாதத்தில் இருந்து, சுசுவிற்கு கேட்கும் திறன் கிடைக்குமாம். செவியறையின் முக்கியத்துவம் உடல் ஆரோக்கியத்தைப் போன்றே முக்கியமானதுதான். உலக சுகாதார அமைப்பின் அறிக்கையின்படி, ஒவ்வொரு ஆண்டும் செவித்திறனை இழக்கும் அபாயத்தில் வாழும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருவதாக எச்சரிக்கிறது.
கேட்கும்திறன் பாதிக்கும் பிரச்சினைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உலக சுகாதார நிறுவனம் மார்ச்,3 ஆம் தேதி சர்வதேச செவித்திறன் நாளாக (World Hearing Day) அறிவித்தது.
இந்தாண்டுக்கான கருப்பொருள், வாழ்வு முழுவதும் ஆரோக்கியமான செவித்திறனுக்கு, பாதுகாப்புடன் கேட்போம் (to hear for life, listen with care) என்பதாகும். அனைவரும் வாழ்நாள் முழுவதும் நல்ல செவித்திறனைப் பேணுவதற்கான வழிமுறையாக, பாதுகாப்பாகக் கேட்பதன் மூலம் செவித்திறன் இழப்பைத் தடுப்பதன் முக்கியத்துவம் மற்றும் வழிமுறைகளில் கவனம் செலுத்துவது நம் ஒவ்வொருவரின் கடமை.
இந்த உலக செவித்திறன் நாளில் வாகன சத்தங்களை குறைப்பது, ஒலி பெருக்கிகளின் தரத்தை ஆராய்ந்து கட்டுப்பாட்டில் வைப்பது, காதில் வைக்கும் ஒலிப்பான்களை கட்டுப்பாட்டுடன் உபயோகப்படுத்துவது, தொழிற்சாலைகளில் பணிபுரிபவர்களுக்கு அதிக ஒலி பாதிப்பு இல்லாமல் தற்காத்துக் கொள்வது, தேசிய காது கேளாமை தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு திட்டத்தின் கீழ் குழந்தைகளை பரிசோதனைக்கு உட்படுத்துவது, இதற்கென ஏற்படுத்தியுள்ள அரசு திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பது போன்ற வருமுன் காக்கும் முறைகளில் அரசு கவனம் செலுத்த வேண்டும். அனைவரும் ஒட்டுமொத்தமாக தவிர்க்கப்படக்கூடிய சத்தத்தை குறைக்கும் முயற்சிகளை ஒன்றிணைந்து முன்னெடுபோம்.
அரோக்கியமான செவித்திறனைப் பேணுவதற்கான வழிமுறைகள்:
- காதுகளை தூசி, தண்ணீர் மற்றும் மெழுகு படாமல் சுத்தமாக வைத்திருங்கள். தீப்பெட்டி, பென்சில், ஹேர்பின்கள் போன்ற கூரான பொருட்களால் காதுகளை சுத்தம் செய்ய வேண்டாம். ஏனெனில் அவை காதில் உள்ள அறைகளைக் காயப்படுத்தலாம்.
- சத்தம் எழுப்பும் இடங்களுக்குச் செல்வதைத் தவிர்க்கவும், ஏனெனில் அவை உங்கள் காதுக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தலாம்.
- நீங்கள் பயன்படுத்தும் கேஜட்ஸ்களில் (இசை கேட்க்கும்போது) ஒலியளவை அதிகபட்சமாக 60%க்கு மேல் இருக்க வேண்டாம். ஒலி அளவு 80 டெசிபல் அளவுக்கு குறைவாக இருப்பது நல்லது.
- நீங்கள் பயன்படுத்தும் ஹெட்ஃபோன், இயர்ஃபோன் போன்றவைகள் நாய்ஸ் ரிடக்சன் அதாவது இரைச்சலை குறைக்கும் திறன் கொண்டதாக இருக்கட்டும்.
- சத்தமான ஒலிகளிலிருந்து உங்கள் காதுகளுக்கு அடிக்கடி ஓய்வு கொடுங்கள். இது காதுகளுக்குள் உள்ள உணர்வு செல்களை மீட்டெடுக்க உதவுகிறது.
- எவ்வளவு டெசிபல் வரை ஒலி நீங்கள் கேட்கலாம் என்பதைக் கண்காணிக்க டிவைஸ் இருக்கிறது அதை வாங்கிக் கொள்ளலாம்.