குழந்தைகளை வேலைக்கு அமர்த்துவது சட்டவிரோத செயல்; குழந்தைகளுக்கான கல்வி உள்ளிட்ட அடிப்படை உரிமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் குழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்கவும் ஆண்டுதோறும் ஜூன் 12-ம் தேதி, ’ உலக குழந்தைத் தொழிலாளர் எதிர்ப்பு தினம்’ கடைபிடிக்கப்படுகிறது.
குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிப்படுவது, அவர்களுக்கான கல்வி, உணவு, இருப்பிடம் உள்ளிட்ட சமூகப் பாதுகாப்பை வழங்குவது ஒவ்வொருவரின் கடமை. பெற்றோர்கள் உடன் சேர்த்து அனைவரும் இதற்கு உறுதி ஏற்க வேண்டும். குழந்தைகளை அவர்களின் வயதில் தொழில் செய்ய வைப்பது குற்றம் என ஐநா சொல்கிறது. ஊட்டச்சத்து நிறைந்த உணவுகள், அவர்களின் வளர்ச்சி உள்ளிட்டவற்றிற்கு அரசும் பெரியவர்களும் உறுதியேற்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டு வருகிறது.
பள்ளி செல்ல வேண்டிய வயதுடைய குழந்தை பணியில் ஈடுபடுத்தப்படுவது 18 வயது நிரம்பாத இளைஞர்களை கட்டாயப்படுத்தி வேலை செய்ய வைப்பது சட்டப்படி இந்தியாவில் தண்டனைக்குரியது. உலகில் பல நாடுகளிலும் குழந்தை தொழிலாளர் முறை தடை செய்யப்பட்டதாக இருக்கிறது. இருப்பினும் சூழல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்கான குழந்தைகள் தொழில் செய்வது என்பது தெரியாமல் நடந்துகொண்டே இருக்கிறது என குழந்தை நல ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.அவர்களுன் வாழ்வுரிமை உறுதி செய்ய வேண்டும் என்று குழந்தைநல ஆர்வலர்கள் அறிவுறுத்துகின்றனர்.
குழந்தைகளின் உடல், மன ஆரோக்கியம் மற்றும் அவர்களின் வளர்ச்சிக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் சூழலில் அவர்கள் வளர்க்கப்படவேண்டும்; அவர்கள் எவ்வித பணியிலும் ஈடுபடுத்தப்படக்கூடாது என்று ஐ.நா. வலியுறுத்தியுள்ளது. அதோடு, வளரும் நாடுகள், பொருளாதார ரீதியிலாக மோசமான நிலையில் உள்ள நாடுகளில் இன்னும் குழந்தை தொழிலாளர் முறை இருந்துகொண்டுதான் இருக்கிறது என்பதையும் தரவுகள் குறிப்பிடுகின்றன.
வரலாறு:
உலக நாடுகள், தொழிலாளர் அமைப்புகள், சமூக ஆர்வலளர்கள் உள்ளிட்டோர் ஒற்றிணைந்து குழந்தைத் தொழிலாளர்களின் அவல நிலையையும், அவர்களுக்கு உதவ என்ன செய்ய முடியும் என்பதையும் எடுத்துக் காட்டும் பொருட்டு சர்வதேச தொழிலாளர் அமைப்பு (International Labour Organization) மற்றும் ஐக்கிய நாடுகள் சபை கூட்டாக இணைந்து 2002-ல் உலக குழந்தைத் தொழிலாளர் எதிர்ப்பு தினத்தை உருவாக்கியது. அப்போதிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் ஜூன்12-ம் தேதி குழந்தை தொழிளார்களுக்கு எதிரான நாள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.குழந்தைகளின் நலன், குழந்தைகளின் உரிமைகள், குழந்தைகளை பணிக்கு அமர்த்துவதால் ஏற்படும் பாதிப்புகள், குழந்தை தொழிலாளர் முறை ஏன் ஒழிக்கப்பட வேண்டும் உள்ளிட்டவைகள் குறித்து இந்த நாளில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
கருப்பொருள்:
குழந்தை தொழிலாளர்களுக்கு எதிரான தினத்தின், இந்தாண்டு கருப்பொருள், ’ நம் பொறுப்பு உணர்ந்து அர்பணிப்புடன் செயல்படுவோம்; குழந்தை தொழிலாளர் முறையை ஒழிப்போம்’ (Let’s Act on Our Commitments: End Child Labour).
வறுமை, கல்வி அறிவின்மை காரணமாக பெற்றோர், பாதுகாவலர்கள் தம் குழந்தைகளை வேலைக்கு அனுப்பது அல்லது குழந்தைகளை விற்பனை செய்வது, குழந்தை கடத்தில் உள்ளிட்ட காரணங்களால் இன்னும் குழந்தைகளில் தொழிலில் ஈடுபடுத்தப்படும் அவலம் தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது. இதை கட்டுக்குள் கொண்டுவர நடிக்கை எடுக்கப்பட்டாலும் அதற்கு தீர்வு கிடைத்தபாடில்லை. வெளிச்சத்திற்கு வராத கதைகள் ஏராளம். குழந்தைகள் மன, உடல் ரீதியிலாக கடும் பாதிப்புக்குள்ளாகும் அளவில் தொழிலில் ஈடுபடுத்தப்படுவது தவறானது. குழந்தைகளின் அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டு சுதந்திரத்தை இழந்து இருக்கும் சூழ்நிலைகள் உங்களுக்கு தெரிந்தால் மெளனத்துடன் கடந்துவிடாதீர்கள்.