நம் உடலுக்குள் உள்ள ஓவ்வொரு உறுப்பும் சீராக இயங்கினால்தான் நாம் பூரண நலத்தோடு இயங்க முடியும். உள்ளுறுப்புகளில் கல்லீரல் மிகவும் முக்கியமானதாக இருக்கிறது. நம் உடலில் நடைபெறும் 500க்கும் மேற்பட்ட வினைகளுக்கு கல்லீரல் தான் காரணமாக இருக்கிறது. கல்லீரலின் செயல்பாடுகள் என்னவென்பதையும் நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.
கல்லீரல் வைட்டமின், இரும்புச்சத்து ஆகியனவற்றை தன்னுள்ளே கிரகித்துக் கொண்டு சர்க்கரையாக அவற்றை மாற்றிவைத்துக் கொண்டு உடலின் சர்க்கரை அளவை சீராக வைத்திருக்கிறது. பழைய சிவப்பணுக்களை சிதைத்துவிடுகிறது. கொழுப்பைக் கறைக்க, உடைக்க பைல் நொதியை உற்பத்தி செய்கிறது. மிக முக்கியமாக உடலில் உள்ள நச்சுக்களை பிரித்தெடுத்து வெளியேற்றும் வேலையைச் செய்கிறது.
இத்தகைய கல்லீரலுக்கு நாம் நமது வாழ்வியல் பழக்கவழக்கங்களால் கேடு செய்கிறோம். புகைப்பழக்கம், மதுப்பழக்கம், பொரித்த உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவு வகைகள், ஏன் சில அழகுசாதனப் பொருட்கள் கூட கல்லீரலை பாதிக்கின்றன. கல்லீரல் சீராக இயங்க நிறைய வைட்டமின், மினரல் மற்றும் ஆன்ட்டிஆக்சிடன்ட்டுகள் தேவை. அதை எப்படி இயற்கையாகவே கொண்டு சேர்க்கலாம் எனப் பார்ப்போம்.
கல்லீரல் புத்துயிர் பெறத் தேவையான் டீடாக்ஸ் கொண்ட உணவு வகைகளை உங்களுக்காகப் பட்டியலிடுகிறோம்..
1. தேநீர்
தேநீரால் உடலுக்கு பல்வேறு நன்மைகள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் தற்போது தேயிலை கல்லீரலுக்கு நன்மை பயக்கும் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஜப்பானில் நடந்த ஓர் ஆய்வில், அன்றாடம் 5 முதல் 10 கப் டீ குடிப்பவர்களின் ரத்தத்தில் கல்லீரல் திறனை அதிகரிக்கத் தேவையான காரணியாக கேட்சின் (catechin) இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. அதேவேளையில் க்ரீன் டீ சாறு அருந்துவதற்கும் க்ரீன் டீ குடிப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது. சாறாக அருந்துவதில் கவனம் தேவை. அளவுகூடினால் சிக்கலை ஏற்படுத்தலாம்.
2. காலிஃப்ளவர், முட்டைக்கோஸ்
காலிஃப்ளவர், முட்டைக்கோஸ், ப்ரகோலி, முளைகட்டிய சிலவகை காய்கறிகள் க்ளுடாத்தியோன் என்ற ஒருவகை சத்து இருக்கிறது. இது கல்லீரலில் சேரும் நச்சுப்பொருட்களை வெளியேற்றுகிறது. இது புற்றுநோய் உண்டாக்கும் நச்சுக்களை வெளியேற்றுகிறது.
3. மஞ்சள்
மஞ்சளை உணவிற்கு இயற்கையான வண்ணம் தரும் நிறமியாக, மணம் தரும் வாசனைப் பொருளாகாவே மட்டுமே நாம் பயன்படுத்தினாலும். பலநூறு ஆண்டுகளாக அதன் மருத்துவ குணம் மக்களுக்கு நன்மைபயத்து வருகிறது. மஞ்சளில் இருக்கு குர்குமின் என்ற ஒருவகைப் பொருள் உடலில் இருந்து நச்சுப்பொருட்களை வெளியேற்ற செல்களை சீரமைக்கிறது. கல்லீரலில் சுரக்கும் பைல் எனும் நொதியை சீராக சுரக்கச் செய்கிறது.
4. சிட்ரஸ் பழங்கள்
சிட்ரஸ் வகை பழங்கள் கல்லீரலுக்கு புத்துணர்ச்சி அளிக்கின்றன. கல்லீரலில் இருந்து வெளியேறும் நச்சுபொருட்களை தண்ணீரில் எளிதாகக் கரையவைத்து உடலில் இருந்து வெளியேற்றுகின்றன. அந்தவகையில் திராட்சையால் கல்லீரலுக்கு இரண்டு முக்கிய நண்மைகள் கிடைக்கின்றன. நாரிஞ்சின், நாரின்ஜெனின் இருவகை ஆண்ட்டி ஆக்சிடன்ட்டுகள் கல்லீரலுக்கு நன்மை பயக்கின்றன. கல்லீரலுக்கு பாதிப்பு ஏற்படாமலும் அதன் உயிர் செல்களைப் பாதுகாப்பதையும் சிட்ரஸ் பழங்கள் உறுதிப்படுத்துகின்றன.
5. பீட்ரூட்
பீட்ரூட்டில் வைட்டமின் சி சத்து நிரம்பியுள்ளது. அதிலிருக்கும் நார்ச்சத்து ஜீரண மண்டலத்தின் இயற்கை சுத்திகரிப்பான். பீட்ரூட் ஆக்சிஜன் அளவை அதிகரித்து ரத்தத்தை சுத்திகரிக்கும். நச்சுப்பொருட்களை வெளியேற்றுகிறது. பைல் நொதியை சீராக்குகிறது.
6. பூண்டு
பூண்டில் சல்ஃபர் இருக்கிறது. இது கல்லீரல் நொதியை ஊக்குவிக்கிறது. இதன் மூலம் உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறுகின்றன. மேலும் பூண்டில் அதிகமான அளவு செலீனியம் இருக்கிறது. இது உடலுக்கு மிகவும் அவசியமான நுண் ஊட்டச்சத்து. இது உடலில் ஆண்ட்டிஆக்சிடன்டுகளை இயற்கையாகவே உருவாக்குகிறது. ஆக்சிடேட்டிவ் ஸ்ட்ரெஸ் காரணமாக செல்களில் ஏற்படும் பாதிப்பை சீர் செய்கிறது.
7. வால்நட்
வால்நட்டில் குளுட்டாதியோன் அதிகமாக நிரம்பி இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் ஒமேகா 3 ஜி ஃபேட்டி அமிலங்களும் இருக்கின்றன. இது கல்லீரல் சுத்திகரிப்புக்கு உதவுகிறது. அதுவும் குறிப்பாக அமோனியாவை வெளியேற்றுகிறது.
8. ஆலிவ் ஆயில்
ஆலிவ் ஆயில் என்பது உடலுக்கு அத்தியாவசியமான கொழுப்பைத் தருகிறது. ஆலிவ் எண்ணெய் ஆளிவிதை எண்ணெய் ஆகியன கல்லீரலுக்கு நல்ல ஊட்டச்சத்தை நல்குகின்றன.