உலகை அச்சுறுத்தும் நுரையீரல் புற்றுநோய் - 1.80 மில்லியன் மக்கள் உயிரிழப்பு  


உலக நுரையீரல் புற்றுநோய் தினம் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 1-ஆம் தேதி அனுசரிக்கப்பட்டு வருகிறது.  நுரையீரல் புற்றுநோயால் இறப்போரின் எண்ணிக்கை ஒவ்வொவரு ஆண்டும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்த கொடிய நோய் பற்றின விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும் உலகெங்கிலும் உள்ள அரசாங்கத்தை இதற்கான நடவடிக்கையை உடனடியாக எடுக்க வலியுறுத்தும் விதமாக இந்த தினம் உலக நுரையீரல் புற்றுநோய் தினமாக உலகமக்களால் கடைபிடிக்கப்படுகிறது.


மலைக்க வைக்கும் இறப்பு எண்ணிக்கை :


உலகளவில் நுரையீரல் புற்றுநோய் என்பது ஒரு பொதுவான வகை புற்றுநோய் என்றாலும் உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி 2020-ஆம் ஆண்டில் மட்டும் சுமார் 1.80 மில்லியன் மக்கள் நுரையீரல் புற்றுநோயால் இறந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 


நுரையீரல் புற்றுநோயின் காரணிகள்:  


20ம் நூற்றாண்டிற்கு முன்னர் நுரையீரல் புற்றுநோய் என்பது ஒரு அரிதான நோயாக சிறிய அளவிலான மக்களை மட்டுமே பாதித்தது. ஆனால் இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு இந்த நோய் ஒரு பெரிய அளவில் மக்களை பாதித்தது. உலகளவில் உள்ள மக்கள் இறப்பதற்கு ஒரு முக்கியமான காரணியாக மாறியது. இதற்கு நேரடியாக எந்த ஒரு காரணமும் இல்லை என்றாலும் புகைபிடித்தல், நச்சு காற்றினை உள்ளிழுப்பது போன்றவை நுரையீரல் புற்றுநோயின் காரணியாக கருதப்படுகிறது. மேலும் குடும்பத்தில் பரம்பரையாக புற்றுநோய் வரலாறு இருப்பது மற்றும் மார்பு பகுதில் அதிகமாக கதிர்வீச்சு படுவதாலும் அல்லது COPD போன்ற நுரையீரல் நோய் உள்ளவர்களை நுரையீரல் புற்றுநோய் தாக்கக்கூடும். 



உலக நுரையீரல் புற்றுநோய் தினத்தின் நோக்கம் :


உலக நுரையீரல் புற்றுநோய் தினம் அன்று தனிநபர்கள், பல்வேறு தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் பல நிறுவனங்கள் நுரையீரல் புற்றுநோயின் அறிகுறிகளை பற்றின விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்துவதற்காக இந்த நாளில் முயற்சிக்கின்றனர். சரியான நேரத்தில் முறையான சிகிச்சையின் மூலம் இந்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்ற முடியும் என்று பல வழக்குகள் பதிவாகியுள்ளன. 


ஆரம்ப அறிகுறிகள்:


நுரையீரல் புற்றுநோயில் ஆரம்ப நிலையில் ஏற்படும் அறிகுறிகளை பற்றி மக்கள் அவசியம் தெரிந்து கொள்ளவேண்டும். தொடர்ச்சியான இருமல், மூச்சுத்திணறல், இருமலில் ரத்தம், முதுகுவலி, மார்புவலி, சளி, தீடீரென அதிகமான எடை இழப்பு போன்ற பல அறிகுறிகள் இருக்குமாயின் உடனடியாக மருத்துவரை அணுகவும். 


உலக நுரையீரல் புற்றுநோய் தினத்தன்று என்ன செய்ய வேண்டும்?


புகைப்பிடிப்பது மற்றும் புகையிலை பொருட்களை தவிர்த்தல், தினசரி உடற்பயிற்சி செய்தல், நுரையீரல் புற்றுநோய் பரிசோதனையை அவ்வப்போது செய்வது, மைனர்கள் இ-சிகரெட் மற்றும் புகையிலை பொருட்களை பயன்படுத்துவதை தவிர்க்கவேண்டும்.