கட்டிடத்தின் மேற்பகுதிக்குச் செல்வதை எளிமையாக்கும் சாதனமாக நமக்குப் பயன்படுகின்றன லிஃப்ட்கள். நமது நேரத்தையும் உழைப்பையும் மிச்சப்படுத்துவதோடு, வேகமாகவும், பாதுகாப்பாகவும் லிஃப்ட்கள் செயல்படுகின்றன. தற்போதைய காலகட்டத்தில் பெரும்பாலானோர் பல அடுக்கு மாடிக் கட்டிடங்களில் வசித்து வருவதால் அலுவலகங்களிலும், வீடுகளிலும் லிஃப்ட்கள் இன்றியமையாதவையாக மாறியுள்ளன. 


லிஃப்ட்களின் தயாரிப்பில் வெறும் பொறியியல் மட்டுமே அவற்றை இயக்குகின்றன என்று நினைத்துக் கொண்டால் நாம் தவறுதலாகப் புரிந்துகொண்டிருக்கிறோம் என்று பொருள். லிஃப்ட்களின் இசை முதல் அவற்றில் வைக்கப்பட்டிருக்கும் கண்ணாடிகள் வரை அனைத்தும் திட்டமிட்டு வைக்கப்பட்டிருப்பவை. 


லிஃப்ட்களின் கண்ணாடிகள் இருப்பதன் காரணம் என்ன என்பதைப் பற்றிய சுருக்கமான வரலாற்றைப் பார்ப்போம்... 



தொழிற்புரட்சியின் தொடக்க காலத்தில் கட்டப்பட்ட கட்டிடங்கள் இதுவரை மனிதன் பாராத உயரத்தை அடைந்திருந்தன. இவற்றில் லிஃப்ட்கள் பொருத்தப்பட்டிருந்தன. மக்கள் இந்த லிஃப்ட்களைப் பயன்படுத்தும் போது, அவை வழக்கமான வேகத்தில் சென்ற போதும், மக்கள் எப்போதும் லிஃப்ட்களை விமர்சித்துக்கொண்டே இருந்தனர். 


இந்த விமர்சனங்களால் பெரிதும் கோபம் கொண்ட லிஃப்ட் தயாரிப்பு நிறுவனங்கள் வேகமாகவும், பாதுகாப்பாகவும் இயங்கும் லிஃப்ட்களை செய்யும் போது, அவை அதிக விலை கொண்டவையாக இருக்கக்கூடாது என்பதிலும் கவனம் செலுத்த தொடங்கினர். 


அப்போது அங்கு பணியாற்றிய எஞ்சினியர் ஒருவர், மக்கள் லிஃப்ட்கள் மெதுவாக இயங்குவதாக `நினைக்கிறார்கள்’ என்று சுட்டிக் காட்டினார். இதனால் லிஃப்ட் வடிவமைப்புக் குழுவினர் இந்த விவகாரத்தை சரிசெய்ய வெவ்வேறு புதிய ஐடியாக்களை உருவாக்கினர். 


லிஃப்ட்டின் பாகங்கள் மீது குவிக்கப்பட்ட கவனம் அடுத்ததாக அதனைப் பயன்படுத்தும் மனிதர்களின் மீது குவிந்தது. அதன்பிறகு, பல கட்ட ஆய்வுகளுக்குப் பிறகு, லிஃப்ட்களின் கண்ணாடிகள் பொருத்தப்பட்டுள்ளன. 



அது சரி... லிஃப்ட்களின் கண்ணாடிகள் பொருத்தப்பட்டிருப்பது ஏன்?


இதற்கான விடை உங்களை ஆச்சரியப்படுத்தலாம். லிஃப்ட்களின் கண்ணாடி வைக்கப்பட்டிருப்பதன் பின்னணியில் பல்வேறு உளவியல் காரணங்கள் இருக்கின்றன. சில காரணங்கள் கீழே... 


1. உங்களுக்குப் பாதுகாப்பான உணர்வை அளிப்பதற்காக... 


லிஃப்ட்களின் நமக்கு அறியாத நபர்களோடு பயணிக்கும் போது பாதுகாப்பற்று, அச்சத்துடன் இருப்பதை உணர்ந்திருக்கிறீர்களா? நம்மில் பலரும் இதனை அனுபவித்திருப்போம். கண்ணாடிகள் இருப்பதன் மூலம் லிஃப்ட்களின் அனைவரும் என்ன செய்கிறார்கள் என்பது நமக்குத் தெரியும் என்பதால் அடுத்து எந்ன்ன நிகழ்ந்தாலும் உங்களால் தப்பிக்க முடியும். 


ஜப்பான் லிஃப்ட் தயாரிப்பாளர் சங்கத்தின் விதிமுறைகளின்படி, அனைத்து லிஃப்ட்களிலும் கண்ணாடி பொருத்தப்பட வேண்டும். இதன் மூலம் சக்கர நாற்காலி பயன்படுத்தும் மாற்றுத் திறனாளிகள் எளிதாக லிஃப்டைப் -பயன்படுத்த முடியும். 


2. மனக் கவலை, கிளாஸ்ட்ரோஃபோபியா முதலானவற்றில் இருந்து பாதுகாக்க... 



மூடிய இடங்களில் அளவுக்கு அதிகமான அச்சம் ஏற்படுவது கிளாஸ்ட்ரோஃபோபியா எனப்படும். லிஃப்ட்கள் அத்தகைய மூடிய இடங்கள். லிஃப்டில் கண்ணாடி வைக்கப்படும்போது, அது அப்பகுதியில் அதிக இடம் இருப்பது போன்ற தோற்றத்தை அளித்து, இந்த அச்சத்தைப் போக்குகிறது.


3. உங்கள் கவனத்தைத் திசைதிருப்ப... 


மேலே குறிப்பிட்ட கதையில், லிஃப்ட் தயாரிப்பு எஞ்சினியர்கள் லிஃப்ட்களைப் பயன்படுத்தும் மக்களுக்கு லிஃப்ட் மேலே செல்லும் போது, செய்வதற்கு எதுவும் இல்லாமல் வெறும் சுவரை பார்த்தப்படி, லிஃப்டின் இயக்கத்தை உணர்ந்து பயந்தபடியே பயணித்துக் கொண்டிருந்தனர். 


இதனை உணர்ந்த லிஃப்ட் நிறுவனங்கள் பிரச்னை உளவியல் ரீதியானது என்பதை விரைவில் கண்டறிந்தனர். இதனைச் சரிசெய்யவே லிஃப்ட்களின் கண்ணாடிகள் பொருத்தப்பட்டன.