ட்விட்டர் நிறுவனத்தின் முன்னாள் இந்தியப் பிரிவுத் தலைவர் மனிஷ் மகேஸ்வரி  'Invact Metaversity' என்ற ஆன்லைன் கல்வி தொழில்நுட்ப நிறுவனத்தை தொடங்கியுள்ளார். 


கொரோனா தொடருக்குப் பிந்தைய காலகட்டத்தில் கல்வித்துறையில் பல்வேறு மாற்றங்கள்  ஏற்பட்டுள்ளன. டிஜிட்டல் தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக, கல்வி நிறுவனங்கள் ஆன்லைன் மூலம் பல வகையான படிப்புகளையும், போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சிகளையும் வழங்குகின்றன. இந்நிலையில், தொழில்நுட்பத்தை முதன்மைபடுத்தி புதிய அணுகுமுறையுடன் கூடிய ஆனலைன் கல்வி நிறுவனத்தை மகேஷ்வரி தொடங்குகிறார் . உயர் தொழில்நுட்ப நிறுவனங்களில் வேலைவாய்ப்பை பெறக்கூடிய வகையில் இளைஞர்களை ஆயத்தப்படுத்துவது இதன் முக்கிய நோக்கமாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.   


 






இந்த ஸ்டார்ட்அப் நிறுவனத்தின் தொடக்க நிதியம் (Seed Round) பெறுவதற்கான முயற்சியை  தொழில்நுட்பம் சார்ந்த நிறுவனங்களுக்கு நிதி வழங்கும் அமைப்பான  Arkam Ventures மேற்கொள்ள இருக்கிறது.  Antler India, Picus Capital, M Venture Partners, BECO Capital, 2am VC  போன்ற சர்வதேச மூலதன நிதியங்களும் இதில் பங்கு கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. 


  






கல்வியை அனைவரும் அணுகக்கூடியவையாக, அனைவருக்கும் ஏற்றவையாக கொண்டு செல்வதற்கான பார்வைகளைக் கொண்டுள்ளோம். கல்வித்துறையில் புதியதொரு அத்தியாயத்தை, புதிய தோற்றத்தை இது ஏற்படுத்தும் என்று Antler India நிறுனத்தின் துணைத் தலைவர் ராஜீவ் ஸ்ரீவத்சா தெரிவித்தார்.


இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனங்கள்:  இந்தியாவில், 2021-ம் ஆண்டில் மட்டும் 40-க்கும் அதிகமான முன்னணி புதிய நிறுவனங்கள் (யூனிகார்ன்) அங்கீகரித்தைப் பெற்றன. 2021-ம் வருடம்  யூனிகார்ன்களின் ஆண்டு என்று அழைக்கப்படுகிறது. உலகின் மூன்றாவது பெரிய ஸ்டார்ட்அப் சூழலியலை கொண்டுள்ள இந்தியா, உலகின் புதுமைகளுக்கான மையமாக உருவாகி வருகிறது. 61,000-க்கும் அதிகமான புதிய நிறுவனங்களை தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக ஊக்குவிப்பு துறை இதுவரை அங்கீகரித்துள்ளது. 


பொதுமக்களுக்கு ஆலோசனை: 


முன்னதாக, கல்வி தொழில்நுட்ப நிறுவனங்களை பயன்படுத்துவது குறித்து எச்சரிக்கையோடு இருக்குமாறு பொதுமக்களுக்கு மத்தியக் கல்வி அமைச்சகம் ஆலோசனை வழங்கியிருந்தது.  அதில்,  கல்வி தொழில்நுட்ப நிறுவனங்களின் விளம்பரங்களை கண்மூடித்தனமாக நம்ப கூடாது. பொய் வாக்குறுதிகள் காரணமாக, சரிபார்க்காத பாடப்பிரிவுகளில் சேர வேண்டாம். கல்வி தொழில் நுட்ப நிறுவனங்களின் வெற்றி பற்றிய தகவல்களை, முறையாக சரிபார்க்காமல் நம்ப வேண்டாம் என்று தெரிவித்திருந்தது.