எடை குறைப்புக்கான உடற்பயிற்சிகளைத் தொடர்ந்து மேற்கொண்டும் எடை பார்க்கும் போது எந்த மாற்றத்தையும் உணரவில்லையா? பயப்பட வேண்டாம். இது இயல்பான ஒன்றே. தொடக்கத்தில் ஃபிட்னெஸ் மீது கவனம் செலுத்துபவர்கள், தங்களின் எடையை அடிக்கடி பரிசோதிப்பது வழக்கம். எடை குறைவதன் மூலமாக தங்கள் உடற்பயிற்சிகளின் தாக்கத்தை உணர்வதற்கு இந்தப் பரிசோதனை பயன்படுத்தப்படுகிறது. எனினும், அது அவ்வாறு இயங்குவதில்லை. எடை குறைப்புக்கான உடற்பயிற்சியின் நோக்கம் என்பது எடையைக் குறைப்பது அல்ல.. அதன் நோக்கம் கூடுதலான கலோரிகளை எரித்து, கொழுப்பைக் குறைப்பதுவே ஆகும். எடை குறைப்பதற்கும், கொழுப்பைக் குறைப்பதற்கும் இடையிலான வேறுபாட்டை நாம் முதலில் புரிந்து கொண்டால் அதற்கேற்ப நமது ஃபிட்னெஸ் குறிக்கோள்களை வகுத்துக் கொள்ளலாம்.
உடலின் எடையைக் கொழுப்பு மட்டுமின்றி, தசைகள், எலும்பு அடர்த்தி, உடலில் இருக்கும் நீர்ச்சத்து ஆகிய பலவும் தீர்மானிக்கின்றன. உணவு உண்ட பிறகு, உடலின் எடை சற்றே அதிகரிக்கிறது. நாள் முழுவதும் ஒரே எடையில் நம்மால் இருக்க முடியாது. உதாரணமாக, வெறும் வயிற்றில் 50 கிலோ எடை கொண்ட நபர், அந்த நாளின் முடிவில் அவர் உண்ட உணவு, குடித்த தண்ணீர் காரணமாக சற்றே கூடுதல் எடை கொண்டவராக இருப்பார்.
இந்நிலையில், கொழுப்பு என்பது நாம் உண்ணும் பொருள்களால் தீர்மானிக்கப்படுகிறது. உடலில் கொழுப்பு அதிகரிக்கும் போது, உடல் எடை அதிகரிக்கும் என்றாலும், அதுமட்டுமே முழு காரணமாக அமைந்துவிடாது. கொழுப்பு அதிகரிப்பதால் உடலில் கொழுப்புச் சத்து, உயர் ரத்த அழுத்தம், உடல் பருமன் முதலான பிரச்சினைகள் ஏற்படுகின்றன.
இதன் காரணமாக, ஒவ்வொருவரும் உடலில் எடையைக் குறைப்பதில் கவனம் செலுத்துவதற்குப் பதிலாக தங்கள் உடலின் கொழுப்பைக் குறைப்பதில் கவனம் செலுத்த வேண்டும். எனவே உடற்பயிற்சிகளை மேற்கொள்ளும் போது, கொழுப்பைக் கரைக்கும் பயிற்சிகளுக்கு முக்கியத்துவம் வழங்க வேண்டும். எடை குறைப்பை மட்டுமே முன்வைத்து பயிற்சி எடுப்பதால், குறிக்கோள்களை அடைவதில் சிரமம் ஏற்படலாம். கொழுப்பைக் குறைப்பது என்பது இடுப்பு, கைகள் முதலான பகுதிகளில் சேர்ந்துள்ள கொழுப்பைக் கரைப்பதற்கும் பொருந்தும்.
கொழுப்பைக் குறைக்க தொடங்கியவுடன், அது உடலின் அதிக எடைக்கு மிக முக்கிய காரணியாக இருப்பதால் உடல் எடை குறைவதையும் நம்மால் எளிதில் கவனிக்க முடியும். எனவே ஃபிட்டான உடல்வாகு பெறுவதற்காக கொழுப்பு குறைப்பதில் கவனம் செலுத்த வேண்டும்; எடை குறைப்பில் அல்ல.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்