நம் உடலின் புதியதாக ஒரு மச்சம் தோன்றினால் கூட நாம் எளிதில் கண்டுபிடித்து விடுவோம். ஏனென்றால் அது உடலின் வெளிப்புறத்தில் ஏற்படும் மாற்றம். நம் கண்ணுக்கு எதிரே ஏற்படும் மாற்றங்களை நாம் கண்டறிவது மிக எளிது. ஆனால் உடலுக்குள் ஏற்படும் மாற்றத்தை நம்மால் எப்படி கண்டுபிடிக்க முடியும்? உள்ளுறுப்புகள் தான் உடலையே இயக்கும் நிலையில் அதனை ஆரோக்கியமாக வைத்திருப்பதே அவசியமாகிறது. குறிப்பாக நீரிழிவு, ரத்த அழுத்தம், உப்பு நீர் போன்ற சிக்கல்கள் பலரையும் தற்போது பாதித்து வருகிறது. அதனை தடுப்பது எப்படி? நம் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க நாம் செய்ய வேண்டியது என்ன? பார்க்கலாம்.

A1C டெஸ்ட்:
நம்முடைய ரத்தத்தின் வரலாற்றை தெரிந்துகொள்ள வேண்டும் என்றால் A1C டெஸ்ட் தான் முக்கியம். ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கண்டுபிடிப்பதே A1C டெஸ்டின் பிரதான வேலை. இதன் மூலம் நீரிழிவு நோயைக் கண்டறியவும், நீரிழிவு சிகிச்சையின் செயல்திறனைக் கண்காணிக்கவும் முடியும்.

உயர் A1C அளவுகள் பெரும்பாலும் நீரிழிவு சிக்கல்களுடன் தொடர்புடையதாக இருக்கும். அதனால் A1C முடிவுகளை சரிபார்த்து அதனை கட்டுக்குள் வைத்திருப்பதே முக்கியம். அனைவருக்கும் ஒரே மாதிரியான அளவு இருக்காது. ஒரு நபரின் தனிப்பட்ட A1C என்பது வயது மற்றும் பிற மருத்துவ நிலைகள் உட்பட பல காரணிகளைப் பொறுத்து மாறுபடும். அதனால் ஒவ்வொருவரும் தனித்தனியாக இந்த டெஸ்டை எடுப்பதே சரியான முடிவை அளிக்கும்.


ஒரு நபர் தனது முறையான சிகிச்சை எடுத்துக்கொள்வதன் மூலமும், வழக்கமான உடல் பயிற்சியைப் பெறுவதன் மூலமும், உடல் எடையைக் குறைத்து இருப்பது மூலமும் A1C அளவை சரியாக பராமரிக்க முடியும். A1C வேல்யூவை பொருத்தவரை கீழ்கண்ட அளவுகள் மூலம் நம்முடைய ஆரோக்கியத்தை தெளிவாக தெரிந்துகொள்ளலாம்.

A1C value நிலை
5.6% அல்லது அதற்கும் குறைவாக நார்மல்
5.7–6.4% நீரிழிவுக்கும் முந்தைய நிலை
6.5% அல்லது அதற்கும் மேல் நீரிழிவு பாதிப்பு

சில நேரம் நீரிழிவு தொடர்பான சிக்கல்கள் இல்லாமலும் A1C அதிகரித்துக் காணப்படலாம். ரத்தக்கோளாறுகள், மன அழுத்தம், மருந்துகளால் ஏற்படக்கூடிய பக்கவிளைவுகள், வாழ்க்கை முறை மாற்றங்கள் போன்ற பல காரணங்களால் இப்படியான சிக்கல் உண்டாகலாம்.

ஒரு நபருக்கு அதிக A1C அளவு இருந்தால் அது நீரிழிவுக்கான ஆபத்தாகும். சராசரியை விட A1C அளவு சற்று அதிகரித்தால் அது நீரிழிவுக்கான தொடக்கம். அதனால் முறையான மருத்துவ சிகிச்சை, உணவுக்கட்டுப்பாடு, உடற்பயிற்சி மூலம் அதனைக் கட்டுக்குள்ளே வைத்திருக்கலாம். அதிக A1C அளவு நீரிழிவு மட்டுமின்றி மேலும் பல பக்க சிக்கல்களையும் உண்டாக்கும். 

  • சிறுநீரக நோய்
  • கண் நோய்
  • பக்கவாதம் மற்றும் இருதய நோய்
  • வளர்சிதை மாற்ற நோய்க்குறி
  • நரம்பியல்

போன்ற சிக்கல்களையும் உண்டாக்கலாம்.


என்ன செய்ய வேண்டும்?

உங்களது  A1C அளவு கட்டுக்குள் இருக்க செய்ய வேண்டிய சில விஷயங்கள் உள்ளன.

மருந்துகளை மறுபரிசீலனை செய்தல்: 

நீங்கள் மருந்துகளை எடுத்துக்கொள்ளும் நபராக இருந்தால். மருத்துவரின் ஆலோசனையின்றி தொடர்ந்து பல வருஷங்கள் அதனை எடுத்துகொள்ளக் கூடாது. உடல் மாற்றங்களுக்கு ஏற்ப மருந்தின் தன்மையும் மாற வேண்டும்.

வழக்கமான உடற்பயிற்சி: 

உடல் செயல்பாடு பொது ஆரோக்கியத்திற்கு நல்லது, மேலும் உடற்பயிற்சி செய்ய உடலுக்கு குளுக்கோஸ் தேவைப்படுவதால், இரத்த சர்க்கரை அளவைக் குறைக்க இது ஒரு பயனுள்ள வழியாகும்.

ஆரோக்கியமான உணவு:

சீரான மற்றும் சத்தான உணவு சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவும். கூடுதலாக, எடை இழப்பு இலக்குகளை அடைய மக்களுக்கு இது உதவும்.

புகைபிடிப்பதை நிறுத்துதல்: 

புகைபிடித்தல் பல அபாயங்களைக் கொண்டுள்ளது. மேலும் புகைபிடிப்பதை நிறுத்துவது இரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவும்.