பழங்களில் நார்ச்சத்துக்களுடன் கூடிய அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் மிகுதியாக உள்ளன. அதனால் தினசரி உணவில் கட்டாயம் பழங்களைச் சேர்த்துக் கொள்ள வேண்டும். பழங்கள் அதிகமாக உணவில் சேர்த்துக் கொண்டால் உடலில் நோய்கள் எதுவும் வராமல் தடுக்க முடியும். இதுதான் நாம் பழங்கள் பற்றி அறிந்து கொண்டுள்ள அடிப்படைத் தகவல்.


நமது உடலில் 80% நீர் உள்ளது. அதே போல், பழங்களிலும் 80% நீர்ச் சத்து உள்ளது. பொதுவாக நாம் உண்ணும் உணவில் நீர்ச் சத்து அதிகம் இருப்பது நல்லது. அப்படிப்பட்ட உணவுகள் முக்கியமாகப் பழங்களும் காய்கறிகளும்தான். பழங்களில் உடலுக்கு அதிகம் சேரக் கூடாத கெட்ட கொழுப்புச் சத்துக்கள் இல்லை. பழங்கள்... நார்ச் சத்து, நீர்ச்சத்து, வைட்டமின் சி நிரம்பியவை. அதோடு நமது திசுக்களை அழித்துவிடாமல் பாதுகாக்கும் பைடோ கெமிக்கல்ஸ் நிரம்பியவை. இந்த காரணங்களுக்காக நாம் பழங்களை நம் உணவில் சேர்த்துக் கொள்வது அவசியம்.


ஆனால் எந்தப் பழத்தை எப்போது சாப்பிட வேண்டும் என்பது உங்களுக்குத் தெரியுமா?


காலைக்கு உகந்த பழங்கள்..


பழங்களை உணவில் சேர்த்துக் கொள்வது என முடிவு செய்துவிட்டால் இதைப் பின்பற்றுங்கள். காலையில், உங்கள் உணவில் மிக்ஸ்ட் ஃப்ரூட்ஸ் இருப்பது சிறப்பு. அதாவது அன்னாசி, செரி, கிவி, ஸ்ட்ராபெர்ரி மற்றும் ஆப்பிள் என சேர்த்துக் கொள்ளலாம். அன்னாசிக்கும் செர்ரி பழத்துக்கும் ரத்த அழுத்தத்தை சீராக்கும் பன்புகள் உள்ளன. இவை இதய நோய்களில் இருந்து நம்மை காக்கும். கிவி மற்றும் ஸ்ட்ராபெர்ரி எதிர்ப்புசக்தியை ஊக்குவிக்கும். காலையில் ஆப்பிள் உண்டால் தொப்பை கறையும். ஆப்பிளில் டீடாக்ஸ் காரணிகள் உள்ளன.


மதிய வேளை..


மதிய வேளையில் நம் ரத்த சர்க்கரை அளவை அதிகரிக்க வேண்டிய தருணம். ஆகையல் மதியத்தில் வாழை அல்லது மாம்பழம் சாப்பிடலாம். இரண்டிலுமே சர்க்கரையும் எனர்ஜி அபரிமிதமாக இருக்கின்றன.
உடற்பயிற்சிக்கு முன்னதாக.. நீங்கள் உடற்பயிற்சி செய்யப்போகிறீர்கள் என்றால் அதற்கு முன்னதாக இன்ஸ்டன்ட் எனர்ஜி தரும் பழங்களை உட்கொள்ள வேண்டும். அதற்கு ஆப்பிள், ஆரஞ்சி, பேரிக்காய் தான் சிறந்த பழங்கள்.




இரவு நேர பழங்கள்:


இரவு நேரத்தில் சில பழங்களை மட்டும் தான் உண்ண வேண்டும். படுக்கைக்குச் செல்வதற்கு முன்னர் பழம் சாப்பிட்டால் அது நம் ரத்த சர்க்கரை அளவை ஏற்றும் என்பதால் தூங்கப் போகும் முன் அன்னாசி, அவகேடோ, கிவி போன்ற பழங்களை மட்டுமே உண்ண வேண்டும். நிறைய பேர் தூங்குவதற்கு முன்னால் வாழைப்பழம் சாப்பிடுவார்கள். அது மிகவும் தவறான பழக்கம்.


இப்படியாக நமது பழம் உண்ணும் பழக்கத்திலும் ஒரு திட்டமிடல் இருந்தால் ஆரோக்கியம் இனிக்கும்.